Friday, March 1, 2019

ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் கோட்டபாயவினால் கருணாவிற்கு வழங்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டது என்று புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை சம்மந்தமான பதிவு செய்யப்படாத வழக்கு விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் நடைபெற்றது. இதன் போது அபயரத்ன என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியால் நடராஜ ரவிராஜ் கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை கொலை செய்ய பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்புக்கு பணம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். நடராஜ ரவிராஜ் கொலை தொடர்பான விடயங்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டூல் மற்றும் கருணா தரப்பு ஆகியோருக்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டன.

கருணா தரப்புக்கு 5 கோடி ரூபாய் கொலை நிறைவேறிய பின்னர் வழங்கப்பட்டது என்பதை கொலையுடன் சம்மந்தப்பட்ட கருணா தரப்பை சேர்ந்தவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் சாட்சியம் அளித்தார்.

இந்தநிலையில் ரவிராஜ் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்திவைத்த பதில் நீதவான், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கொலை நடந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளரான ஹென்ஜலோ ரோய் என்பவரையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com