Wednesday, February 13, 2019

பிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்காக அனுமதி கோரும் பத்திரத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு, கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய, கால அவகாசம் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம், விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இந்த ஆணைக்குழு முன்னிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தமது குற்றங்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டிலும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என, அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com