Friday, February 15, 2019

''தமிழர்களுடன் மோதுவதற்கான அவசியம் எனக்கு இல்லை '' - பிரதமர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மக்கள், பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, பிரதமர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாணமே யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. வட மாகாணத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையான அழிவை எதிர் கொண்டன. பலர் உயிரிழந்தனர். இதை விட, இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல உயிரிழப்புகள் சம்பவித்தன. எமது ஜனாதிபதி ஒருவர் உயிரிழந்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். எமது கட்சியில் பலர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்தமையினாலேயே நான் இந்த தலைமைத்துவத்திற்கு வந்தேன்.

அது கடந்த காலம். எனவே, தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் எனக்கில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் மாத்திரமின்றி தமிழ் தலைமைகள் பலரும் உயிரிழந்துள்ளனர். அனைவரும் யுத்தம் மாத்திரமல்லாது, ஏதோவொரு வகையில் மரணித்துள்ளனர், அதிகமான பாதிப்புக்களையும் சந்தித்துள்ளார். இந்த கசப்பான கடந்த காலத்தை மறந்து நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

அதற்கமைய உண்மையை பேசி, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே, இதனை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எந்நாளும் கடனாளிகளாக விளங்க முடியாது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும். வடக்கை சீர்க்குலைக்க முடியாது. அதற்கு நல்லணிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமின்றி எமக்காக காத்திருக்கும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வோம்.

தெற்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவது போன்று வடக்கையும் அபிவிருத்தி செய்வோம். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை, பாரியளவில் அபிவிருத்தி செய்யவும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதன்மூலம், எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்குள், இலங்கையை பாரிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com