Thursday, February 28, 2019

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை. பழைய தகவல்களுக்கு அமைய பரணகம மற்றும் உடலாகம ஆணைக்குழுவின் தகவல்களை பெற்று காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவத்தினர் அனர்த்த நிலைமைகளின் போதே முகாம்களில் இருந்து வெளியே வந்து செயற்படுகின்றனர். வேறு தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாத நிலை தற்போது காணப்படுகிறது. இந்த நிலையில் புவியியல் ரீதியாக முகாம்களை அமைந்ததன் பின்னர், எஞ்சிய பகுதி காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல் விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை சார்பான பிரதிநிதிகளை அனுப்பி, நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையிலான இரண்டு வருடகால செயற்றிட்டம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். அதன்மூலம் யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com