Tuesday, February 26, 2019

விழிப்புணர்வூட்டும் குறுந்திரைப்பட விழா - மஹிந்த தேசப்பிரிய

ஜனநாயகம் தொடர்பான சமூக கலந்துரையாடல் ஒன்றை,  ஏற்படுத்துவதற்காக ‘பெளர’ என்ற பெயரிலான குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2017 – 2020 மூலோபாயத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை போன்று, இந்த விழா இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து, ஜனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக இந்த குறுந்திரைப்பட விழாவை நடாத்தவுள்ளன.

ஜனநாயகம், சர்வஜன வாக்குரிமை மற்றும் மக்கள் இறைமை தொடர்பாக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவே, இக் குறுந்திரைப்பட விழா இடம்பெறவுள்ளது.

இதன்போது குறித்த போட்டிக்கு மும்மொழி குறுந்திரைப்படங்களையும் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், ஒவ்வொரு குறுந்திரைப்படமும் 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த போட்டி இரண்டு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளதுடன், இதில் முதலாம் இடத்தை பெறும் படத்திற்கு 125,000 ரூபாயும் இரண்டாம் இடத்திற்கு 75,000 ரூபாயும், மூன்றாம் இடத்திற்கு 50000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

பாடசாலை பிரிவில் முதலாமிடம் பெறும் படத்திற்கு 50000 ரூபாயும் இரண்டாம் இடத்திற்கு 30000 ரூபாயும் மூன்றாம் இடத்திற்கு 20000 ரூபாய் பரிசில் தொகையும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரையில் குறுந்திரைப்படங்களை சமர்ப்பிக்க முடியும்.

குறித்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான, தரங்கனி திரையரங்கில் திரையிடப்படும். அன்றைய தினமே பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com