Monday, February 11, 2019

இனவாதிகளுக்கு ஏற்றவாறு அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது - ரவி கருணாநாயக்க.

இந்த நாட்டில் உள்ள இனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது என, மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம், அமைச்சர் ரவி கருணாநாயக்க மேல் மகாண ஆளுநர் அசாத் சாலியை, அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை கூறினார்.

புதிய அரசியலமைப்பு, ஒரு இனத்திற்காகவோ, ஒரு மதத்திற்காகவோ தயாரிக்கப்பட மாட்டாது. தற்போது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை நாம் பலவந்தமாகக் கொண்டுவர முடியாது.

அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன், அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே அது அமையப்பெற வேண்டும். எவ்வாறாயினும் ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முன்னுரிமையுடன் தான் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இனவாதிகள் தான் இது தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவ்வாறான ஒரு அரசியலமைப்பு ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ அல்லது கட்சிக்கோ மட்டும் மட்டுப்பட்டதாக இருக்காது.

இலங்கையர் எனும் அடிப்படையில்தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புறோம். இந்தப் பிரச்சினையை நாம் வெகுவிரைவில் தீர்ப்போம்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com