Wednesday, February 13, 2019

அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது - யோகேஸ்வரன்.

அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டாதென, அந்த கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பொதுநல அமைப்புக்களுக்கு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால், அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.

தற்போது வரையப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின், மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில், போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது இல்லை.

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் இணைக்கப்படுவார்களாக இருந்தால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடிய சூழல் ஏற்படும். அவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், புதிதாக கொண்டு வரப்படும் அரசியல் யாப்பினை நிறைவேற்ற முடியும்.

இந்த நாட்டில் சகல பிரஜைகளுக்கும் ஏற்ற வகையில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.

ஆனால், சில தரப்பினர் எதிர்பார்ப்பது போல, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவு வழங்காது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com