தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று அங்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் நவீன நகரங்களாக மாற்றமடையும் என்று நாம் பெரிதும் நம்புகிறோம். இதற்காக சிறந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள நாம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
மேலும், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நகரமாக யாழ்ப்பாணத்தை மாற்றவும், நான் எனது அமைச்சு ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளேன்.
எதிர்வரும் மார்ச் மாதம் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது நாம் பல திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். எமது காலத்தில் நாம் வடக்கில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கியுள்ளோம்.
மேலும், தீர்க்கப்படாமல் இருக்கும் இன்னும் சில பல பிரச்சனைகளையும், வெகுவிரைவில் அரசாங்கத்தின் ஊடாக நாம் மேற்கொள்வோம்.
ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தியது போல, அபிவிருத்தியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்காக எமது ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கத் தயாராகவே இருக்கிறோம் என, யாழ்ப்பாணத்தில் வைத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment