Thursday, January 10, 2019

ஜேவிபி மீண்டும் வலியுறுத்துகிறது - இந்தச் சட்டத்தை நீக்கியே ஆகவேண்டும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார். நாம் மனித உரிமைகளைப் பாதுக்காக்கவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை.

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீடித்து தன் அடக்கு முறைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறது. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவ்வாறு சிறையில் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றங்களை நாடும் வாய்ப்பு இல்லை. பயங்கவரவாதத் தடைச்சட்டம் தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து 15 வருடங்களாக சிறையில் அடைபட்டுள்ளனர். இது நியாயமா?

குறித்த கைதிகள் தாம் குற்றவாளியா, நிரபராதியா என்று தெரிந்து கொள்ளவும் முடியாதுள்ளனர். அவர்கள் குற்றவாளி என்றால் தண்டனை வழங்குவது நியாயமானது. ஆனால் அவர்கள் தமது நிலைப்பாடு என்னென்னவென்று தெரியாது நிரபராதியாக இருக்கும் பட்சத்தில் 10 வருடமாக சிறையில் இருப்பது சாதாரணமானதா?

பலர் 3 மாதம் சிறையில் இருக்க முடியாமல், போராட்டம் நடத்தும் நிலையில், அரசியல் கைதிகளின் நிலையை யோசித்துப் பார்க்கவேண்டும். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டதாக ஐ.நாவிற்கு கூறி, சிறிய மாற்றங்களைச் செய்து அதனை இன்னும் பலப்படுத்தி வேறு ஒரு சரத்தாக கொண்டு வரக்கூடாது என்று விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com