Wednesday, January 9, 2019

வாழ்க்கயின் வடிவத்தை மீளமைக்கும் வெள்ளமும் வறட்சியும்

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம்- அதுபோல் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.

அதுதான் இயற்கை நியதி. வறட்சி, வெள்ளம், புயல், என எந்த இயற்கை இடர் வந்தாலும் அது பணக்காரன் ஏழை என்று பார்ப்பதில்லை. பொதுவாகத்தான் பாய்கிறது. அதேபோல் நிவாரணப்பணிகளும் பொதுவாகப் பாய்வதில்லை. நிவாரணம் வழங்குதலில் உடனடி நிவாரணமாக வழங்கும் போது எல்லோரும் அதை பெற விளைவதில்லை. உண்மையிலேயே வீடுவாசல்களை இழந்து தவிப்பவர்கள் எங்காவது பொது இடங்களில் கும்பலாக தங்கியிருப்போர் மட்டுமே உடனடி நிவாரணமான சமைத்த உணவைப் பெறுகிறார்கள்.

இங்கே வசதி படைத்தோர் தற்காலிகமாக தமது உறவினர் வீடுகளிலோ, நண்பர் வீடுகளிலோ அல்லது தமக்கேயுரிய வேறு வீடுகளுக்கோ செல்கின்றனர். இப்படி மக்களோடு மக்களாக நின்று உணவைப் பெறுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

ஆனால் பணமாக வழங்கப்படும் நிவாரணத் தொகைமட்டும் இவர்களுக்கு அவசியமாகிறது. அதிலெல்லாம் இவர்களது கௌரவம் கரைந்து போவதில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பிரமுகரின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. அதுமட்டுமல்ல அதனால் பெருமளவு பொருளாதாரச் சேதமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் அதற்காக எந்த மாற்றிடங்களுக்கும் போகவில்லை. இருந்த வீட்டிலேயே வெள்ளம் வடியும்வரை பார்த்திருந்துவிட்டு வெள்ளம் வடிந்த பின் தனது கட்டமைப்புகளை சீர்செய்து மறுபடி வெள்ளம் உள்நுழையாத வகையை தேடுகிறார். அசராத மனிதர். ஆனால் இவருக்கு பணமாக நிவாரணம் கிடைத்தால் அதை கட்டாயம் வாங்குவார்.

வெள்ளம் வடிந்தபின்னால் ஒவ்வொரு கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் மக்கள் நெருக்கியடித்து தமது பதிவை மேற்கொள்ள கோரிக்கை விடுகின்றனர். கிராம அலுவலர்களும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். தமது தொழிற்படு பரப்பெல்லைக்குள் பாதிக்கப்பட்ட இடங்களையும் குடும்பங்கள் பற்றிய விபரங்களையும் பிரதேச செயலருக்கு இவர்களே தெரிவித்தாக வேண்டும்.

இப்போதுதான் உடனடி உதவி பெற்றவர்களுக்கும் ஆறுதலாக நிவாரணம் பெறுவோருக்கும் இடையிலான எண்ணிக்கை பாரிய வித்தியாசத்தை காட்டவுள்ளது.

எவ்வளவு நீர் நெல்லுக்குப் பாய்கிறது. எவ்வளவு நீர் புல்லுக்குப் பாயப்போகிறது. நிகழ்வு நடந்த சில மாதங்களின் பின்புதான் இதற்கான நிவாரணத்தை அரசாங்கம் தரப்போகிறது. அதற்காக மக்கள் சிரமதான வேலைகளாக ஏதாவது கிராமத்தில் பொது வேலைகளை செய்ய கேட்கப்படுவர்.

முற்காலத்தே இதை சகாயவேலை என்பர். இந்த சகாயவேலை செய்ய ஆணுக்கு ஒரு ரூபா முப்பத்தைந்து சதமும் பெண்ணுக்கு ஒரு ரூபாவும் பதினான்கு வயதுக்குட்பட்ட பிள்ளையாயின் (அப்ப வேலை செய்யலாம்) எழுபத்தைந்து சதமும் ஊதியமாக பதியப்படும். (1960) நான்கைந்து மாதங்களுக்கு வேலை கிடைக்கும் சம்பளம் கச்சேரியிலிருந்து உத்தியோகத்தர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். செக்ரோல்படி சம்பளப்பண த்தை குடும்பத்தில் ஒருவர் வந்து பெறலாம். இந்த வேலையை கங்காணி செய்விப்பார். ஓவசியர் மேற்பார்வை செய்வார். இருவரும் கிராமத்தவர்களாக இருப்பர். கிராமத்தில் அனைத்து பிரசைகளுக்கும் சமமாக வேலை கிடைக்காது. நிரந்தர வருமானமுள்ள கடைக்காரர், அரசஊழியர்கள், வாகன சொந்தக்காரர் ஆகியோருக்கு இந்த வேலை இல்லை.

ஆனால் கங்காணி, ஓவசியர், ஆகியோர் சுமார் பத்துக்குடும்பங்களையாவது மேலதிகமாக பதிவில் போட்டிருப்பார்கள் அந்த சம்பளப்பணம் இந்த வேலைகளின் கணக்கு வழக்குகளை கணக்கு (விடும்) பார்க்கும் உத்தியோகத்தர்கள் அந்த சம்பளம் கொடுக்க வரும் நாட்களில் அவர்களுக்கு உணவு தண்ணி என தண்ணிபட்டபாடாக செலவாகும். அதெல்லாம் கேட்குமளவுக்கு படித்தவர்கள் அப்போது இல்லை.

நீளக்காற்சட்டை போட்டவர்களை மிக மரியாதையாக வணங்கித்தான் பழக்கம். இப்போது அப்படியல்லவே.

ஒருதடவை எமது மண்ணில் புயலடித்தது. அது ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு உடனடி நிவாரணமாக பைகளில் அடைத்த உணவுப் பொருட்கள் வந்தன. அனைவருக்கும் வழங்கினார்கள் அங்கே எந்த விதமான பெயர்ப்பதிவுகளும் இல்லை. இன்று யாரும் குடும்பங்களின் பதிவுகளில்லாவிட்டால் எதையும் பெற முடியாது.

ஒழுங்கான வடிகாலமைப்புகள் இல்லாத நிலையில் வெள்ளமும், காடுகளை அழிப்பதால் வறட்சியும் ஏற்படுகிறது என்று மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பவர்களால் அவற்றை செய்யாமல் இருக்க முடியவில்லை. நிவாரணங்கள். எமக்கான வாழ்வாதாரங்களாக ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுௗறுகளிலேயே தொடங்கியது. யுத்தத்தால் மாறி மாறி இடம்பெயர்ந்து தொடர்ச்சியாக இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நிவாரணம் வாங்கி வாங்கியே வாழ்ந்த மக்கள் நாங்கள் மீள் குடியேற்றத்தின் பின், ஆறுமாதங்கள் மட்டுமே நிவாரணம் பெற்றோம. ஆனாலும் என்ன அடிக்கடி வெள்ளமும் வறட்சியும் வந்து வந்து எமது வாழ்க்கையின் வடிவத்தை மீளமைத்துக் கொண்டேயிருக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com