Friday, January 11, 2019

எம்மோடு இணையுங்கள் - கூட்டமைப்பை அழைக்கின்றார் சம்பிக்க ரணவக்க!

தமிழ் தேசிய கூட்டமைப்பை, அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு, பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு நிர்ணயச் சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இதே போன்று, வடக்கு, கிழக்கு மக்களின் கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைய வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகிப்பதால், முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணையவேண்டும். கடந்த 50 வருடங்களில் வடக்கு பகுதியில் பெரிதாக எவ்வித தொழிற்சாலையும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

அதேவேளை, காலைநிலை மாற்றத்தால் இன்னும் 40ஆண்டுகளில் வடக்கு பகுதி அரைப்பாலைவனமாக மாறக்கூடும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தை சமாளிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com