Friday, January 11, 2019

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருமீ சிவில் அமைப்பு கண்டன அறிக்கை.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முட்டுக் கட்டையாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், அது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினர் எந்தவித பதிலையும் வழங்காதுள்ளனர்.

காலாகாலமாக மலையக மக்களின் பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது. பெருந்தோட்ட மக்களின் நலனுக்காகவே கூட்டு ஒப்பந்தம் உருவாகியது கூறப்பட்டாலும், அதன் மூலம் தொழிலாளர்களுக்கு எந்தவித அனுகூலமும் ஏற்படவில்லை.

கடந்த முறை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் வேதனை உயர்வு குறித்த பேச்சுக்கள் பரவலாக அடிபட்டு வருகின்றன.

எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என, முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

எனினும் தமக்கு கூட்டு ஒப்பந்தம் தேவையில்லை என்று கூறி, தொடர்ந்தும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒருமீ சிவில் அமைப்பு, கூட்டு ஒப்பந்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளதுடன், கூட்டு ஒப்பந்தம் குறித்த கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தமானது எவ்வகையிலும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தமாகும். அத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் பட்சத்தில் அது எதிர்வரும் 3 வருடங்களுக்கு மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாக இருக்கும். எனவே இதனை எதிர்த்து தமது அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக, ஒருமீ சிவில் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com