Wednesday, January 9, 2019

இலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.

கடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோக்கியுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் முதலாவது ஆபத்து என அவர் கூறினார்.
புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக கடமையேற்ற மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதலாவது உரையில் இதனை கூறினார்.

நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. பொருளாதாரம் எவ்வேளையிலும் வீழ்த்தப்படும் என்பதே முதல் ஆபத்து, கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.

அத்துடன் 19வது திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகின்றது. அதுவே இரண்டாவது ஆபத்தாகும்.

19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது.

இதேவேளை புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.

புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.

எனவே இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com