Tuesday, December 11, 2018

த.தே.கூ ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக தமது இருப்பை தக்க வைக்க முயற்சிக்கின்றது. டலஸ்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்குவதன் ஊடாக தமது அடுத்த இருப்பபை தக்க வைக்க முயற்சிக்கின்றது என்றும் அதை விடுத்து தமிழ் மக்களுக்காக அவர்கள் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும.

இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சர்களின் விலையினை 500 மில்லியனாக நிரூபித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதாக ஜனாதிபதி கூறினார்

ஆனால் ஜனாதிபதியின் கூற்றை திரிவுபடுத்தி மாற்று கருத்துக்களை உருவாக்கினர். தற்போதும் எமது கட்சி உறுப்பினர்களை பேரம் பேசும் செயற்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அடுத்த அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழ் மக்களை கருத்திற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

மேலும் ரணிலுக்கு தொடர்ச்சியாக கூட்டமைப்பு ஆதரவினை வழங்கி வருமாயின் எதிர்க்கட்சியிலிருந்து முழுமையாக கூட்டமைப்பு விலக வேண்டியது அவசியம்” என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com