Monday, December 31, 2018

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கவனத்திற்கு

2018ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய தகவல்களை இங்கே தருகிறோம்.

கடந்த வருடத்திலும் பார்க்க பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பொறியியல் முதலான பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, ஒப்பீட்டு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேபோன்று, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 64.68 சதவீதத்தினால் அதிகரிப்புஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கலை, வர்த்தகம், மற்றும் தொழில்நுட்ப கற்கை நெறிகளில் ஆகக்கூடுதலான பெறுபேறுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் முறைகேடுகள் மற்றும் விசேட கண்காணிப்பு போன்ற காரணங்களால் 119 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மாணவர்கள் தமது பரீட்சைகள் தொடர்பிலான மீள் பரிசீலனைகளை, ஜனவரி மாதம் 16 ம் திகதிக்குள் மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் அதேநேரம், இன்றைய அரச பத்திரிகைகள் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த கூறியுள்ளார்.

அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்குகமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வாய்புள்ளது. பல்கலைகழக நுழைவிற்கான விளக்கங்கள் அடங்கிய கையேட்டை, மாணவர்கள் உரிய முறையில் உள்வாங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.

மேலும்; 2 அல்லது 3 கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகின்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் கற்கை நெறியை தெரிவு செய்யும்போது மிகவும் அவதானமான முறையில், தெளிவாக விண்ணப்பிப்பார்களாக இருந்தால், அவர்கள் தகுந்த பல்கலைக்கழக கல்விவாய்பை பெறமுடியும் .

சிறப்பாக 2019ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக கல்வியில் புதிதாக சில கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை அவதானிக்கத்தக்கது.
இந்தத் தடவை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3,21,469 பரீட்சாரத்திகள் தோற்றியிருந்த நிலையில், 1,67,907 மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாடசாலை பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படவுள்ள அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிகளுக்கு தபாலிடப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com