Saturday, December 1, 2018

நவதாராண்மைவாத உலகமயமாக்கல் எதிர் ஒரு இறையாண்மையுள்ள திட்டம் - தயான் ஜயதிலக

ஸ்ரீலங்கா மற்றும் உலகின் பெரும் பகுதிகள் எதிர்கொண்டுள்ள உண்மையான தெரிவுகள் எவை? முக்கிய பிரச்சினைகளாக உள்ளவை எவை மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வுகள் எவை?

இன்று ஸ்ரீலங்காவில் நாம் சாட்சியாகவுள்ள பிரச்சினை ஒரு அரசியல் நெருக்கடி, அது பெரிய மற்றும் ஆழமான நெருக்கடியின் செறிவான வெளிப்பாடாகும். இது ஒரு குறிப்பிட்ட மாதிரியின் நெருக்கடியாகும். இந்த மாதிரியின் நெருக்கடி ஸ்ரீலங்காவில் தேசிய ரீதியாக உள்நாட்டில் உள்ளது. அந்த நெருக்கடி உலகளாவிய ரீதியாகவும் உள்ளது.

இந்த வகையான நெருக்கடி நவ தாராண்மைவாத உலகமயமாக்கலில் உள்ளது. நவ தாராண்மைவாத உலகமயமாக்கல் என்பது அப்படியான சாதாரண உலகமயமாக்கல் அல்ல. கம்யுனிசஅறிக்கையை வாசிக்கும் எந்த ஒரு வாசகருக்கும் முதலாளித்துவம் எப்போதும் உலக மற்றும் உலகளாவியது என்பதை அறிய முடியும். ஒருவேளை சமீபத்தைய தசாப்தங்களின் மிகச் சிறந்த மார்க்சிச அரசியல் பொருளாதார வல்லுனரும் சமீபத்தில் காலஞ்சென்றவருமான சமீர் அமீன், ‘காலனித்துவ உலகமயமாக்கலுக்கும்’ மற்றும் காலனித்துவத்துவ காலத்துக்கு முந்தைய வலுவான அணிசேரா இயக்கத்தைச் சேர்ந்த ‘பேரம்பேசும் உலகமயமாக்கலுக்கும்’ இடையில் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தியிருந்தார் மற்றும் தற்போதைய தாராள அல்லது நவ தாராண்மைவாத உலகமயமாக்கல் முதலாளித்துவ மையங்களால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்படுகிறது.

நவ தாராண்மைவாத மாதிரியை சுதந்திர சந்தை அடிப்படைவாதம் மற்றும் தனியார்மயம் ஆகியவற்றில் ஒன்றாகச் சுருக்கிக் கொள்ளலாம், இதில் எல்லைகள் மற்றும் தேசிய இறையாண்மை என்பன அழிக்கப்பட்டு விட்டன, அதன்படி அனைத்து வடிவத்திலான தேசிய கட்டுப்பாடுகள், வரையறை, ஒழுங்குகள், எதிர்ப்புகள் மற்றும் ஏகாதிபத்திய கட்டுப்பாடுகளுக்கான தடைகள் என்பனவற்றை சீர்குலைத்து விடுகின்றன. ஸ்ரீலங்காவில் அதன் சிறப்பான பிரதிநிதித்துவம் இரண்டு முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது (இரண்டாவது தவணையில் மங்கள சமரவீரவுடன் இணைந்து).

இந்த மாதிரி நிறுவப்பட்டது மற்றும் உலகளாவிய சோஷலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மட்டுமே நிறுவப்பட முடிந்தது. ஸ்ரீலங்காவை எடுத்துக்கொண்டால் ஜேஆர் ஜெயவர்தனாவின் திறந்த பொருளாதாரத்தில் தொடங்கி, பிரேமதாஸ, மகிந்தராஜபக்ஸ, சந்திரிகா, மற்றும் ரணில் ஆகியவற்றின் ஊடாக பெருமளவு பொறுப்பற்ற தன்மையுடைய ஒரு நேர்கோட்டு தொடர்ச்சியைக் காணலாம். ஜேஆர் ஜெயவாதனாவின் கீழ் 60 விகிதமான பொருளாதாரம் அரசாங்கத்தின் கைகளில் இருந்தது வெறுமே ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல - அவர் சொன்னது போல பிரமாண்டமான மாகாவலி திட்டம் ஒரு அடையாளம் - மற்றும் உண்மையான தாராண்மைவாத பொருளாதார நிபுணர் கலாநிதி சானக அமரதுங்க அடிக்கடி புகார் தெரிவித்துள்ளார்.

ஜேஆர் மற்றும் ரணில் - மங்கள மாதிரிகளுக்கு இடையேயுள்ள கடுமையான வேறுபடுத்திக்காட்டும் முரண்பாடுகளுக்கான சான்றுகள் ஜேஆருக்கு மிகவும் நெருக்கமான அவரது பேரன்களில் ஒருவரான பிரதீப் ஜெயவர்தனா 2017ல் வழங்கிய ஒரு நேர்காணலில் வந்துள்ளது. “ஐதேகவின் முக்கிய மதிப்புகள் அழிக்கப்பட்டு விட்டன” என்று தெரிவித்த அவர் மேலும் வலியுறுத்தியது: “பொருளாதாரத்தின் தாராள மயமாக்கல் செயல்முறைகளில் சமூக பாதுகாப்பு வலையமைப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அரச கட்டுப்பாடு பேணப்பட வேண்டும் என்பது எனது பாட்டனாரின் கருத்தாக இருந்தது…. தனியார்துறை வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் விவாதம் கிடையாது, ஆனால் அரச கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை என்பன முக்கியமான பகுதிகள் ஆகும்…”(சிலோன் ருடே).

இப்போது அது தாராளமய உலகமயமாக்கல் போல் தோன்றவில்லை அல்லவா?

பொருளாதாரத்தைப் போலவே அரசியலிலும் நேர்மாறான மாற்றங்கள் ஏற்படும். ஜூலை 1983ல் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவாதனா அமெரிக்கத் தூதரக முதற் செயலாளர் கெவின் ஸ்கொட்டை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பிரதிநிதி என்று அறிவித்து 24 மணி நேரத்திற்குள் அவரை விமானம் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பியதின் பின்னர் ஒரு மதுபான விருந்தில் வைத்து ஒரு விமர்சனக் குறிப்பை வெளியிட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அதேபோல ஜனாதிபதி ஜெயவர்தனாவும் மற்றும் பிடல் கஸ்ட்ரோவும் நண்பர்களாக இருந்தபோது, இருவரும் ஹவானா வீதிகளில் ஒன்றாக நடந்து சென்றதும் தற்செயல் அல்ல. ஜேஆர் ஜெயவர்தனா, லங்கா - சோவியத் நட்புறவுச் சங்கத்தின் அங்கத்தவராக இருந்த முதலாவது ஜனாதிபதி மட்டுமல்ல, இலங்கை தேசிய காங்கிரசில் கம்யுனிஸ்ட் கட்சிக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும் என்கிற பிரேரணையையும் அவர்தான் முன்மொழிந்தார் - இது 1944 -1947ல் நடந்தது. டிஎஸ். சேனநாயக்கா இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகி ஐதேக வினை ஆரம்பிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 1977ல் திறந்த பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த N;ஜஆரின் நிதிமந்திரியாகத் தெரிவானவர், முன்னாள் சுதந்திர தீவிரவாதியும், ஒருவேளை 1960களில் கியுபாவில் வைத்து சே குவெராவைச் சந்தித்த ஒரே ஒரு இலங்கையருமான அவர் - ரொணி டீ மெல் ஆவார். அது ரணில் மற்றும் மங்கள நடைமுறைப்படுத்தும் நவதாராண்மைவாத அதிர்ச்சி வைத்தியம் போலில்லாமல் கவனமாகச் சீரமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திறந்துவைப்பு ஆகும்.

பிரேமதாஸவைப் பொறுத்தவரை அவரது வீடமைப்பு, ஜனசவிய, இலவச பாடசாலைச் சீருடை மற்றும் இலவச மதிய உணவு (இந்த திட்டம் ஜேஆர் ஜனாதிபதியாக இருந்தபோது பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்டது) போன்ற திட்டங்கள், அதேபோல 200 ஆடைத் தொழிற்சாலைகளில் உள்ளடங்கிய தொழிலாளர் நிலமைகள் மற்றும் உணவு பற்றிய கடுமையான நிபந்தனைகள் போன்றவைகளும் உள்ளடங்கும். எப்படியாயினும் அவை நவதாராண்மைவாதத்துடன் எத்தகைய தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை மற்றும் உண்மையில் அதற்கு நேர்மாறானது. தனது முன்மாதிரி என அவர் பகிரங்கமாக பெயர் தெரிவித்தது மலேசியாவின் மாகாதீர் முகமதினையே. 1988ல் பிரேமதாஸவின் தேர்தல் வெற்றியீட்டிய தேர்தல் அறிக்கை ஹொங்கோங்கில் வைத்து சுசில் சுரிஸ்வர்தனா (ஒரு தீவிரவாத சிந்தனையாளர்) என்பவருடன் இணைந்து எழுதப்பட்டது, பின்னர் சீனாவின் டெங் ஹசியோ பெங்கினைச் சந்தித்தார், சீனாவுக்கு மாவோவின் காலத்தில் அவர் விஜயம் செய்திருந்தார் 1957ல் அதுபற்றிய ஒரு கையேட்டையும் எழுதியிருந்தார் (இதே பயணத்தில்; அவர் சோவியத் ஒன்றியத்துக்கும் விஜயம் செய்திருந்தார்).

திரும்பவும் ஜனாதிபதியும் மற்றும் ஐதேகவின் தலைவருமான திரு.பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு பிரதம விருந்தினர்களாக சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஒரு உயர்மட்ட தூதுக் குழுவினை அழைத்தார். இதுவும் தற்செயலாக நடந்த ஒன்றல்ல.

மகிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தமட்டில், பொது உட்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தியது கட்டளைகளின் உயரங்களைத் தக்கவைத்ததுடன் அரசின் கைகளில் நாட்டின் மூலோபாய சொத்துக்களை வைத்திருத்தலும் ஆகும், சமூக நலன்புரி திட்டங்களை தொடர்ந்து நடத்தியதுடன் மற்றும் அரசின் உடமைகளை மீட்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது செயற்பாடு உண்மையில் நவதாராளவாதத்திற்கு வெகு தொலைவில் உள்ளதாக இருந்தது.

இதற்கு முற்றிலும் முரண்பாடாக ரணில் விக்கிரமசிங்கா ஐதேகவினை சர்வதேச ஜனநாயக சங்கத்துடன் (ஐ.டி.யு) இணைத்தார், இந்தச் சங்கம் உலகளாவிய உரிமையின் கூட்டிணைப்பாகும், அதில் அவர் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந்த ஐ.டி.யு ரீகன் மற்றும் தச்சர் ஆகியோரால் நிறுவப்பட்டது, அதன் இணைத் தலைவர்கள் அமெரிக்க குடியரசுக் கட்சியினர் மற்றும் ஐக்கிய இராச்சிய கன்சர்வேட்டிவ் கட்சியினர். இதன் காரணமாக நவதாராண்மைவாத உலகமயமாக்கலின் மிகச்சிறந்த முன்னோக்கு மற்றும் இலட்சியம் அவரிடம் காணப்படுவதில் அதிசயம் இல்லை. அதிர்ஷ்டவசமாக இதுபோலப் பேசும் ஒரு பிரதமரையும் மற்றும் கட்சித் தலைவரையும் ஸ்ரீலங்கா மட்டுமே உற்பத்தி செய்துள்ளது:

“….. அமெரிக்க திறைசேரியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு நிபுணர் அரசாங்கத்துக்கு இந்த முறையை அறிமுகப்படுத்தினார்” என்று சொன்ன விக்கிரமசிங்க தொடர்ந்து கூறுகையில் “ உலகளாவிய பொருளாதாரத்துடன் ஒருங்கிணைவதற்கு நாங்கள் பாரியளவிலான பொருளாதார தாராளமயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று சொன்னார். உலக நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மற்றும் இதர ஆவணங்கள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை பற்றி காண்பிப்பதற்கு பிதமரினால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. (‘பிணைமுறி ஆணைக்குழுவின் முன்பாக ரணில் உறுதியளித்தது’ - டெய்லி எப்ரி 21 நவம்பர் 2017).

எனது கருத்து மிகவும் தெளிவானது. ஸ்ரீலங்காவுக்கு ஏன் ஐதேக வுக்கு கூட திறந்த பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் என்பனவற்றுக்குள் ஒரு சாத்தியமான மாதிரி உள்ளது, ஆனால் ரணில் மற்றும் மங்களவின் நவ தாராண்மைவாத உலகமயமாக்கல் திட்டம் ஒரு நவதாராண்மைவாத மாதிரி அல்ல. திறந்த பொருளாதாரம் மற்றும் நவதாராண்மை மாதிரி என்பன சம எல்லையுடையவை அல்ல. திறந்த பொருளாதாரம் என்ன வகையானது என்பது கேள்வி? ரணிலின் நவதாராண்மைவாத மாதிரி அல்லது சில தோல்வியுற்ற அல்லது சோதிக்கப்படாத மாதிரி என்பன முற்றிலும் உலகமயமாக்கலுக்கும் மற்றும் திறந்த பொருளாதாரத்துக்கும் வெளியே உள்ளன என்று சொல்வதைத் தவிர ஸ்ரீலங்காவாசிகளுக்கு வேறு தெரிவு இல்லை. இது ஒரு தவறான தெரிவு அது ஜேஆர், பிரேமதாஸ மற்றும் மகிந்த ஆகியோரின் பங்களிப்பு மூலம் உருவான தெளிவான அபிவிருத்தி வெற்றிகளை அலட்சியம் செய்கிறது.

உலகளாவிய ரீதியிலும் இது சரியானது. பிரச்சினை உலகமயமாக்கல் அல்ல ஆனால் எந்த வகையான உலகமயமாக்கல், எந்த மாதிரி என்பனதான் பிரச்சினை. சாத்தியமான, தெளிவான தெரிவு ஒன்று இருக்கவேண்டும் அது உலகமயமாக்கலுக்கு மாற்றீடாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை, ஆனால் உலகமயமாக்கலின் நவ தாராண்மைவாத மாதிரிக்கு மாற்றீடாக இருக்கவேண்டும். மேற்கில் அப்படியான ஒரு தெரிவு உள்ளது, பெயரளவில் அது ஜெரமி கோர்பைன மற்றும் தொழில்கட்சியால் முன்வைக்கப் படுகிறது. அது இன்னமும் பரீட்சித்துப் பார்க்கப்படாத ஒரு பதில். ஆனால் ஈரோஏசியா மற்றும் உலகளாவிய தெற்கு என்பனவற்றில் பரீட்சித்துப் பார்க்காத பதில்களுக்கு நேரம் இல்லை. இங்கு பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எங்களுக்கு ஏற்கனவே மாற்றீடான ஒரு உலகமயமாக்கல் உள்ளது, இது உலகமயமாக்கலுக்கு மாற்றீடு அல்ல - முதல் கூறியதுதான் எங்களுக்குத் தேவையானது மற்றும் அது வெற்றிகரமானது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

அதற்காக நீங்கள் எனது வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சமீர் அமீனின் வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஜோர்ஜ் மொன்பியாட் போன்ற காடியன் கட்டுரையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் சமீர் அமீன் மிகவும் அறிவார்ந்தவர், இப்படித்தான் புரொட்லைன் சஞ்சிகை சமீர் அமீனை விபரிக்கிறது, “சமீர் அமீன் உயிரோடிருக்கும் இன்றைய உலகின் மிகச்சிறந்த தீவிர சிந்தனையாளர்களில் ஒருவர். குறைந்தபட்சம் கடந்த ஐந்து தசாப்தங்களாக மாற்றீடான ஒரு சிறந்த உலகத்தைப் பற்றிக் கனவு காண்பவர்களுக்கு உத்வேகம் மிக்க ஒரு ஆதாரமாக விளங்குபவர். ஆழமான அசல் மற்றும் தத்துவரீதியான கண்டுபிடிப்பு மிக்க ஒரு மார்க்சீய சிந்தனையாளர்…” என்று.

மற்றும் இப்படித்தான் சமீர் அமீன் மாற்றிடுகளை அடையாளம் காண்கிறார்: ஒரு “இறையாண்மைத் திட்டம்”: “தேசிய அளவிலான நடவடிக்கைகளின் ஆரம்ப உருமாற்றத்தின் மூலோபாயத்தை பின்வரும் வாக்கியத்தின்படி சுருக்கிக் கொள்ளலாம்: நிறுவப்பட்ட உலகமயமாக்கலின் விரிவாக்கத் தேவைகளை ஒருதலைப்பட்சமாக சரிசெய்வதை மறுக்கவேண்டும், இந்த இறையாண்மைத் திட்டங்களில் வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதின் மூலம் மாற்றீடு செய்வதுடன் , உலகளாவிய அமைப்பை இந்த தேசிய திட்டங்களின் விரிவாக்க தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்வதற்குக் கட்டாயப்படுத்த வேண்டும்.”

சமீர் அமீன் சீனாவில் உள்ள வெற்றிகரமான ஒரு இறையாண்மைத் திட்டத்தை பெயரிட்டு அடையாளம் காட்டுகிறார்: “… இறையாண்மைத் திட்டங்களின் பாதையில் உண்மையாகவே ஈடுபட்டு வரும் ஒரே நாடு சீனா, மற்றும் இது ஒரு ஒத்திசைவான திட்டம்: இது சுய மையமான (ஒரே நேரத்தில் ஏற்றுமதியை நோக்கி தீவிரமாக திறக்கப்பட்ட) விவசாய அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்ட நவீன மற்றும் முழுமையான தொழில்துறை முறைமைக்கு ஏதுவான முறையில் விவசாயிகளுக்கு சொந்தமில்லாத சிறிய பண்ணைகளை நவீனமயப்படுத்தும் திட்டமிட்ட நடைமுறையை அது வெளிப்படுத்துகிறது - இதன்படி அனைவருக்கும் நிலம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது”.

இந்த வருடத்தின் சமீர் அமீனின் கடைசி நேர்காணல் ஒன்றில் சீனாவின் ஒப்பீட்டு வெற்றியைப் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“சீனா மற்று இந்தியா ஆகியவற்றை ஒப்பிடுகையில் அது தொடர்பில் மிகவும் முக்கியமானது, சீனாவில் வருமான வளர்ச்சி மற்றவர்களைவிட (பெரும்பான்மையினரைவிட) ஒரு சிலருக்கு சில மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட கிட்டத்தட்ட அனைத்து மக்களுக்கும் உண்மையில் ஒரு வருமான வளர்ச்சி இருக்கிறது. எனவே சீனாவில் பெருகிவரும் சமத்துவமின்மை வறுமைக் குறைப்புடன் சேர்ந்துள்ளது. இந்தியா பிரேசில் மற்றும் தெற்கில் உள்ள அநேகமான எல்லா நாடுகளிலும் இது இப்படியில்லை. இந்த நாடுகளில் வளர்ச்சி (மற்றும் சில விடயங்களில் கணிசமானளவு உயர் வளர்ச்சி) ஒரு சிறுபான்மையினருக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. (ஈகுவற்றோறியல் கினியா போன்ற நாடுகளில் 1 விகிதத்தில் இருந்து இந்தியா போன்ற நாடுகளில் 20 விகிதம் வரை சில விடயங்களில் இது வித்தியாசப்படுகிறது). ஆனால் இந்த வளர்ச்சி பெரும்பான்மையினருக்கு அவர்கள் இயலாத நிலையில் இருந்தால்கூட அவர்களுக்குப் பயனுள்ளதாக இல்லை.”

இதனால்தான் சீனா ஒரு மாற்றீடான பொருளாதார மாதிரியாக உள்ளது, இந்த நேரத்தின் மாற்றீடான மாதிரி. அது நாட்டுக்கும் அதேபோல மொத்தமாக அனைவருக்கும் வேலை செய்கிறது. நவதாராண்மை மாதிரி, அல்லது நான் இன்னும் அதிகமாகப் போனால், மேற்கத்தைய அல்லது உலக நாணய நிதியத்தால் இயக்கப்படும் மாதிரிகள் இப்படியில்லை, அவற்றில் நெருக்கடி மற்றும் சிதைவு உள்ளது.

ஸ்ரீலங்கா சீனாவின் பொருளாதார மாதிரியை எங்கள் அளவு அனுமதிக்கும் எல்லைக்குள் மற்றும் எஞ்சியிருக்கும் எங்கள் தேர்தல் ஜனநாயக அமைப்புக்குள் ஏற்றுக்கொண்டு பின்பற்றவேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிப்பதாக பெருமையுடன் ஒப்புக் கொள்கிறேன். இதன் கருத்து சீனாவின் அரசியல் மாதிரியை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதல்ல - ஒரு வலுவான ஒற்றையாட்சி(உள்ளுர் சுயாட்சி உட்பட) அரசு மற்றும் ஒரு ஜனாதிபதி முறையை தக்க வைத்துக்கொள்வதைத் தவிர, குறிப்பாக வெஸ்ட் மினிஸ்டர் மாதிரி அதன்; பிரிக்ஸிட் பற்றிய விரிசல்களையும் மற்றும் இயல்பற்ற செயற்பாடுகளையும் தினசரி எங்கள் தொலைக்காட்சி திரைகளில் காண்பிக்கும் நேரத்தில்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com