Saturday, December 15, 2018

பாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் -பாகம்1 - வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 09/11/2018 அன்று வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தை கலைத்தமையை செல்லுபடியற்றதாக்கிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் இங்கு தரப்படுகின்றது.

பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பு

இது பிரதம நீதியரசர் கௌரவ H N J பெரேரா அவர்களால் மேலும் ஐந்து நீதியரசர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்ட 88 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு. இதன் முக்கிய அம்சங்கள் மாத்திரமே இங்கு தரப்படுகின்றன.

இந்த வழக்கின் வாதி தரப்பின் அடிப்படை

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானதும் அரசியலமைப்பை மீறுவதுமாகும்.

சரத்து 70(1) இன் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் திகதியிலிருந்து 4 1/2 வருடங்கள் முடியும்வரை பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடாது; என வெளிப்படையாகவே தடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஒரேயொரு விதிவிலக்கு பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது. ஆனால் அவ்வாறான எந்தவொரு வேண்டுகோளும் இதுவரை விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு சரத்துக்கள் 17 மற்றும் 126 இல் குறிப்பிடப்பட்ட நிறைவேற்று/ நிர்வாக அதிகார செயற்பாடாகும். வாதி மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட பாராளுமன்றப் பதவிக்காலத்தை முழுமைப்படுத்தும் உரிமை இருக்கிறது. இந்த உரிமை சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியினால் மறுக்கப்பட்டிருக்கின்றது. மட்டுமல்ல, இதனால் அவர்களைத் தெரிவுசெய்த வாக்காளர்களின் உரிமையும் மறுக்கப்பட்டிருக்கின்றது.

இச்செயற்பாடு மனுதாரரின் சரத்து 12(1) இல் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை மீறியிருக்கின்றது. அதாவது சட்டத்திற்குமுன் சகலரும் சமம், சகலருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு இருக்கின்றது; என்பது இச்சரத்தாகும்.

26/10/18 இலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் புதிய பிரதமருக்கு அரச கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிழையான நோக்கத்தில் செய்யப்பட்டவையாகும்.

இதன்மூலம் பாராளுமன்றத்தில் செயற்பாடு, பிரதிநிதித்துவ ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பன ஆபத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பிற்கு முரணாக பாராளுமன்ற சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட இந்தத்தாக்குதலில் இருந்து பாராளுமன்றம் பாதுகாக்கப்பட வேண்டும்.

சரத்துக்கள் 12(1) இற்கு மேலதிகமாக சரத்து 14(1)(a) ( பேச்சு சுதந்திரம்), 14(1)(b) ( அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை). 14(1)(c) ( கூட்டாக செயற்படுவதற்கான சுதந்திரம்), மற்றும் சரத்து 10 (சுயமாக சிந்திப்பதற்கான, மற்றும் மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம்) என்பனவும் மீறப்பட்டிருக்கின்றன.

(ஆனாலும் சரத்து 12(1) மீறப்பட்டதன் அடிப்படையிலேயே இவ்வழக்கை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.)

பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களின் சுருக்கம்

ஜனாதிபதி தனக்கு சரத்துக்கள் 33(2), 66(2), மற்றும் 70(3) ஆகியவற்றால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார். எனவே, சட்டமீறலில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடாத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலின் பின் நாட்டின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்கியது. ஒக்டோபர் 26 முதல் பல சம்பவங்கள் நவம்பர் 14ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட நடைபெற்றிருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் பொதுத்தேர்தலுக்கு மக்கள்முன் செல்வதற்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

சரத்து 70(3) இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘ பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளபோது எந்த நேரத்திலும்’ என்பதிலுள்ள ‘ எந்த நேரத்திலும் ‘ என்ற சொற்கள் ‘ வீணானவை அல்ல’.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டும்போது ஏற்படுவதுபோன்று முன்கூட்டியே கலைக்கும்போது வாக்குரிமை மீறப்படுவதில்லை; மாறாக, வாக்குரிமை, சுயநிர்ணய உரிமை போன்றவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதியை நீக்குவதற்காக குற்றப்பிரேரணை கொண்டுவரும் பாராளுமன்றத்தின் அதிகாரமும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்திலும் கைவைத்தால் அது மக்களின் இறைமையை கடுமையாகப் பாதிக்கும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தீர்மானம் அரசியல் ரீதியானது. அதனை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது. அவ்வாறு ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டால் அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவரலாம்.

4 1/2 வருடத்திற்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கவே முடியாதென்றால் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது அது பாரதூரமான சூழ்நிலையை உருவாக்கும்.

உப சரத்து 33(2)( c) 19 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் விசேட சூழ்நிலையில் பாவிப்பதற்காகத்தான்.

சரத்து 33 இல் ‘ மேலதிகமாக ‘ என்ற சொல் பாவிக்கப்பட்டது சரத்து 70 இல் எது இருந்தாலும் என்பதனால்தான்.

நாட்டின் இறைமை மக்களிடம் இருப்பதனால் மக்களிடம் அதிகாரம் கேட்டுச் செல்வது அரசியலமைப்பிற்கு முரணாகாது.

இவை வாதி, பிரதிவாதிகள் தரப்பு பிரதான அடிப்படை முன்வைப்புகளாகும்.

அடுத்தபாகத்தில் இவை தொடர்பாக நீதிமன்றத்தின் தொடர்பாக பார்ப்போம்.

( தொடரும்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com