Tuesday, November 27, 2018

இன்றைய அரசியலின் யதார்த்தநிலை. வை எல் எஸ் ஹமீட்

பிரதமரை நியமிக்க 113 அவசியமா?

ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்; என்று ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறு அவரால் கூறமுடியுமா?

113 ஐக் காட்டினாலும் மறுக்க முடியுமா?

ஜனாதிபதி கொலைமுயற்சியில் ரணிலுக்குத் தொடர்புண்டு. மத்திய வங்கி ஊழலில் பங்குண்டு. வெளிநாட்டு சதி. எனவே ரணிலை நீக்கியது சரி. மீண்டும் நியமிக்க மறுப்பதும் சரி, என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது? இது சரியா?

இவை தொடர்பாக ஆராய்வோம்.

பிரதமர் நியமனம் தொடர்பான சட்டநிலைப்பாடு

நாங்கள் முதலில் அரசியல் வேறு, அரசியலமைப்பு சட்டம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் சிலர் வரையறை இல்லாமல், பகுத்தறிவுக்குத் தொடர்பில்லாமலெல்லாம் பேசுவார்கள். எழுதுவார்கள். ஆனால் சட்டம் தொடர்பாக அவ்வாறு பேசமுடியாது.

தனது மனம் சொல்லுகின்ற அரசியல் நிலைப்பாடுகளெல்லாம் அரசியலமைப்பு சட்டமாகிவிடாது. ஆனால் ஜனாதிபதி உட்பட சிலர் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“ பெரும்பான்மை இருந்தால் ரணிலென்றால் என்ன? யாரென்றால் என்ன? அவரை பிரதமராக ஜனாதிபதி நியமித்தே ஆகவேண்டும். அது அரசியலமைப்பினால் அவருக்கு வழங்கப்பட்ட கடமை. அந்தக் கடமையை தான் நிறைவேற்றமாட்டேன்; என்று அவர் எவ்வாறு கூறமுடியும்?

ஜனாதிபதி கொலைமுயற்சியில் ரணிலுக்குத் தொடர்பு என இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு ஆதாரம் இருந்தால் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம். அதுவேறுவிடயம். அதேபோன்றுதான் மத்தியவங்கி விவகாரம். அதற்காக அவரைப் பிரதமராக நியமிக்கமாட்டேன்; என்று கூறமுடியாது. அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆறுமாதத்திற்குமேல் சிறைத்தண்டனை அனுபவித்தால்/ அனுபவித்துக்கொண்டிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படும். அப்போது பிரதமராக முடியாது.

அவ்வாறாயின் அரசியலமைப்பு சட்டத்தை வேண்டுமென்றே மீறினால் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கலாம். அரசியலமைப்பை ஜனாதிபதி மீறுவதென்பது அவ்வளவு பாரிய குற்றம். இந்த நாட்டுமக்களின் தலைவிதியோடு விளையாடுகின்ற விடயம். ஆனால் இன்று வெளிப்படையாகவே ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகிறார். ஆனாலும் ஏன் அவரை நீக்கமுடியாமலுள்ளது? காரணம் 2/3 பெரும்பான்மை தேவை?

அதேபோன்றுதான் பிரதமர் என்ன செய்தார்? என்று குற்றச்சாட்டையும் ஜனாதிபதியே முன்வைத்து அவரே தீர்ப்பையும் தண்டனையையும் வழங்கமுடியாது. அது வேறாக பார்க்கப்பட வேண்டும். பிரதமர் நியமனத்துடன் சம்பந்தப்பட்ட ஒரேயொரு பிரதான சொல் ‘ பெரும்பான்மை’ என்பதாகும்.

பிரதமர் என்பவர் ஜனாதிபதியின் தோட்டக்காரனல்ல; விரும்பியவரை நியமிப்பதற்கும் விரும்பாதவரை நியமிக்க மறுப்பதற்கும். சிலர் அறியாத்தனமாக 113ஐ ஒருவர் காட்டாவிட்டால் ஜனாதிபதி தாம் விரும்பியவரை பிரதமராக நியமிக்கலாம். அது அவருக்குள்ள அதிகாரம் என்று நினைக்கிறார்கள். இவை இரண்டும் பிழையாகும். 113 காட்டவேண்டிய அவசியமும் இல்லை. ஜனாதிபதி “ தான் விரும்பியவரை” நியமித்தல் என்ற ஒரு விடயமும் இல்லை.

மறுபுறம் ரணில் 113ஐக் காட்டாவிட்டால் ஆட்சியில் இருப்பது தங்களுடைய வரப்பிரசாதம்; என்று மஹிந்த தரப்பினர் நினைக்கிறார்கள்.

பெரும்பான்மை என்பது என்ன? பெரும்பான்மைக்கு 113 தேவையா?

அரசியலமைப்பில் பெரும்பான்மை எனும்போது அது சாதாரண பெரும்பான்மையைக் குறிக்கின்றது. அதாவது பாராளுமன்றத்தில் வாக்களிக்கின்றவர்களில் பாதியும் ஒன்றும் ஆகும். 113 அல்லது 2/3 தேவையென்றால் அது வேறாக சுட்டிக்காட்டப்படும்.

பிரதமர் நியமனத்தைப் பொறுத்தவரை “ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கூடியவராக ஜனாதிபதி அபிப்பிராயப்படுபவரை நியமிக்கலாம்; என்று சரத்து 42(4) கூறுகின்றது. பிரதமர் நியமனத்தைப்பற்றி அரசியலமைப்பில் கூறுகின்ற ஒரேயொரு சரத்து இது மட்டும்தான். இன்னும் சில பதில் நியமனத்தைப்பற்றிக் கூறுகின்றன. அது வேறுவிடயம்.

இங்கு ஜனாதிபதி ‘ விரும்புகின்றவரை’ என்றொரு வார்த்தையில்லை. இருப்பதெல்லாம் ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மை பெறக்கூடியவர்’ என்பதுதான்.

இந்த அபிப்பிராயம் objective judgement மூலம் ஏற்படவேண்டும். அதாவது வலுவான காரணங்களின் அடிப்படையில் அது இருக்கவேண்டும். சொந்தவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் கிடையாது. ஏனெனில் எந்த ஒருவருக்கும் அதிகாரம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றபோது அவர்களுக்கு சில கடமைகளும் வழங்கப்படுகின்றன. அந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அந்த அதிகாரம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக பொலிசாருக்கு ஒருவரைக் கைதுசெய்ய அதிகாரம் வழங்கப்படுகின்றது; என்றால் அமைதியை நிலைநாட்டுதல் என்ற கடமையைச் செய்வதற்காகத்தான் அந்த அதிகாரம் வழங்கப்படுகின்றது. அந்த அதிகாரத்தை அமைதியை நிலைநாட்டுவதற்காகத்தான் பாவிக்கலாம். தனிப்பட்ட நோக்கத்திற்காக பாவிக்க முடியாது.

அதேபோன்றுதான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பார் என்று நடுநிலையான கண்ணோட்டத்தில் தான் நம்புகின்றவரை பிரதமராக நியமிக்கலாம். அதேநேரம் ஜனாதிபதி சரியானமுறையில் தன் அபிப்பிராயத்தை ஏற்படுத்தினாரா? என்பதை பாராளுமன்றம் கேள்விக்குட்படுத்தி அதனை ஏற்றுக்கொள்ளலாம். நிராகரிக்கலாம்.

பாராளுமன்றம் நிராகரித்தால் அடுத்தவரை 113 கொண்டுவா என்றோ அல்லது அவரை நியமிக்கமாட்டேன், இவரை நியமிக்க மாட்டேன் என்றோ ஜனாதிபதி கூறமுடியாது. அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை காட்டுவதற்கு சாத்தியமானவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அவரைப் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம்.

அந்தவகையில் மஹிந்தவின் அரசாங்கம் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதேநேரம் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சியாக ஐ தே கட்சி இருக்கின்றது. அந்தக்கட்சி அதன் தலைவரை நியமிக்கச் சொல்கின்றது. எனவே அவரைத்தான் நியமிக்க வேண்டும். அதன்பின் வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டைவந்து முடிந்தால் அவரைத் தோற்கடிக்கலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் வேறு யாரை பிரதமராக நியமிப்பது? அடுத்தது சம்பந்தன். அதற்கடுத்தது அனுரகுமார. அவர்களையா நியமிப்பது. எனவே UPFA இன் சார்பில் நியமித்தவருக்கு பெரும்பான்மை இல்லை; என்று பாராளுமன்றம் கூறிவிட்டது. அடுத்த சாத்தியமான கட்சி ஐ தே கட்சிதான். அவருக்குப் பெரும்பான்மை இருக்கின்றதா? இல்லையா? என்று பரிசோதிப்பது பாராளுமன்றம். பாராளுமன்றத்தின் வேலையை ஜனாதிபதி செய்யமுடியாது.

ஜனாதிபதி நியமித்த மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லலையென்று பாராளுமன்றம் நிராகரித்தன்பின் வெள்ளியன்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் சபாநாயகரைப் பார்த்துக் கேட்கின்றார், “ ஜனாதிபதி நியமித்த பிரதமரை பிரதமர் இல்லை என்பதற்கு நீங்கள் யார்?” என்று. இவ்வாறான மேதைகள்தான் நமது பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கும் சிலர் இருக்கின்றார்கள்.

“ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மைக் கொண்டிருப்பவர்” என்ற பதம் ஏன் கொண்டுவரப்பட்டிருக்கின்றது? என்பதை நாம் புரியவேண்டும்.

இந்தப்பதம் இல்லாவிட்டால் “ பெரும்பான்மையைக் கொண்டிருப்பவரை நியமிக்கவேண்டும்” என்று பொருள் பட்டிருக்கும். வெளியில் வைத்து பெரும்பான்மை பார்ப்பதானால் 113 வேண்டும். பொதுவாக மக்களின் புரிதலுக்காக “ பெரும்பான்மை” என்ற சொல்லை எல்லோரும் பாவித்தாலும் சரத்து 42(4) ‘ பெரும்பான்மை, majority ‘ என்ற சொல்லே இல்லை. மாறாக “likely to command the confidence of Parliament “ என்றுதான் இருக்கின்றது. அதாவது ‘ பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சாத்தியமான(வர்)’ என்பதாகும்.

இங்கு ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில்’ என்ற பதம் பாவிக்கப்படாமல் இருந்திருந்தால் ‘ யார்? எதைவைத்து?’ நம்பிக்கையைப் பெறக்கூடியவர், என்ற கேள்விகள் எழுந்திருக்கும்.

பிரதமர் நியமிப்பது பாராளுமன்றத்திற்கு வெளியே! இந்நிலையில் ‘ நம்பிக்கையைப் பெறக்கூடியவர்’ என்பதற்கு கொடுக்கக்கூடிய ஒரேயொரு அர்த்தம் 113 இருக்கின்றவர்; என்பதாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக ஐ தே க பெற்ற ஆசனங்கள் 106. அடுத்தபக்கம் அதைவிடக்குறைவான ஆசனத்தை அடுத்த கட்சி பெற்றாலும் ஏனைய கட்சிகள் அந்தக் குறைவான ஆசனங்களைப்பெற்ற கட்சிக்கு ஆதரவளிக்காது; என்று எவ்வாறு தீர்மானிக்க முடியும். ‘ அவருடைய அபிப்பிராயத்தில்’ என்ற பதம் வருகின்றபோது ‘ அது எனது அபிப்பிராயம்’ அது பிழையென்றால் பாராளுமன்றம் தீர்மானிக்கலாம்; என்று கூறமுடியும்.

அவரது ‘அபிப்பிராயத்திற்கு’ இடம் கொடுக்காவிட்டால் பிரதமரை நியமிக்கமுன் வெளியில் வைத்து பெரும்பான்மை உறுதிசெய்யப்பட வேண்டும். எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாதபோது இன்று த தே கூ மற்றும் ஜே வி பி அடம்பிடிப்பதுபோல் ஒரு சூழ்நிலையும் இருந்தால் தேர்தல் முடிந்து நாட்கள், வாரங்கள் கடந்தாலும் பிரதமரை நியமிக்க முடியாத நிலைமை ஏற்படும்.

எனவே, ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில்’ என்ற பதத்தை கொண்டுவந்ததன்மூலம் ‘ பெரும்பான்மையை வெளியில் வைத்து உறுதிப்படுத்தும் தேவையை அரசியலமைப்பு இல்லாமலாக்கி இருக்கின்றது.

அரசியலமைப்பு இல்லாமலாக்கிய தேவையை தேவைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. மறுபுறம், ‘ அபிப்பிராயத்தில்’ என்ற பதத்தை கொண்டுவந்ததன்மூலம் வெளிப்படையாக பெரும்பான்மையை “கொண்டிருப்பவரை” அல்ல மாறாக “கொண்டிருப்பதாக தெரிபவரை” பிரதமராக நியமித்துவிட்டு மிகுதியைப் பாராளுமன்றத்திடம் விட்டுவிடுங்கள்; என்பது பொருளாகும்.

இங்கு ஒரு கணக்குக் காட்டப்படுகின்றது. அதாவது ரணிலிடம் 101, மஹிந்தவிடம் 104 என்று. ஆனால் அந்த 104 உள்ளவருக்கு எதிராக 122 காட்டப்பட்டதன்மூலம் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்துவிட்டதே. எனவே, அடுத்தது 101 இருப்பவருக்கு ( இவர்களது கூற்றுப்படி) பிரதமர் பதவியை வழங்கி மிகுதியைப் பாராளுமன்றத்திடம் விடவேண்டும்.

பாராளுமன்றத்தில் இவருக்கு பெரும்பான்மை இல்லை; என்று நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவாருங்கள். அதில் முடிந்தால் தோற்கடித்துவிட்டு மிகுதியைப் பேசவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் இந்த நாடு ஜனாதிபதியின் வீட்டுத்தோட்டம் போன்றும் பிரதமர் தோட்டக்காரர் போன்றும் ஜனாதிபதி செயற்படவும் கூடாது. ஏனையவர் அர்த்தமற்ற கருத்துக்களை முன்வைக்கவும் கூடாது.

( தொடரும்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com