Wednesday, November 7, 2018

த.தே.கூ - மைத்திரி சந்திப்பு! சமஸ்டி இல்லையென்றது பொய்யாம்.

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இன்று காலை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தனது நிலைமையை விளக்கிய மைத்திரிபால சிறிசேன, தான் சமஸ்டியும் இல்லை வட-கிழக்கு இணைப்பும் இல்லை என்று கூறியதாக வெளியான செய்தி பொய்யானது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சந்திப்பில் ஜனாதிபதி தனது திடீர் முடிவுக்கான காரணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விரிவாக விளக்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது தரப்பால் மேற்கொள்ள கூடிய விடயங்கள் தொடர்பில் உறுதியளித்துள்ளதாக அறியமுடிகின்றது.

த.தே.கூட்டமைப்புக்கு விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன, 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு வாரத்திலேயே தனக்கும், ரணிலுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அரசாங்கத்தை தொடர முடியாத நிலைமையிலேயே ரணிலை நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லையென கூறியதான செய்தியை வெளியிட்டது யார் என, செய்தியை வெளியிட்ட பத்திரிகையிடம் வினவியதாகவும், ஆனால் செய்தி மூலத்தை அவர்கள் வெளியிடவில்லையென்றும் பூசி மெழுகியுள்ள அவர் தனது அடுத்த பகிரங்க உரையில், இந்த விடயத்தை சுட்டிக்காட்ட ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பபை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார். இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.

இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ததேகூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com