Sunday, November 18, 2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலையில் புதிய திருப்பம்: கொலை செய்ய உத்தரவிட்டாரா சவுதி இளவரசர்- சிஐஏ தகவல்

பத்திரிகையாளர் ஜமான் கஷோகியை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் மொகமதுபின் சல்மான் உத்தரவிட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ கருதுகிறது.

சிஐஏ தனது இந்த கருத்தை அமெரிக்க அரசாங்கத்தின் பிற பிரிவுகளான காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற துறைகளிடத்திலும் தெரிவித்திருப்பதாக சிஐஏ-வுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் சல்மானுக்கும் கஷோகி கொலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று சவுதி மறுத்து வந்தது. தற்போது சிஐஏவின் இந்த கணிப்பு அதனைப் பொய்யாக்கியுள்ளது.


சிஐஏ-வின் இந்த உளவுத்தகவலை முதன் முதலில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இதுதான் இன்று வரை அமெரிக்க அரசின் நிச்சயமான ஒரு மதிபீடாக இருந்து வருகிறது.

ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க அரசுத் துறையும் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டன.

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த மதிபீடு உறுதியாகத் தவறானது” என்று மறுத்துள்ளார்.

சவுதி அரசாங்கத்தின் கடும் விமர்சகரான பத்திரிகையாளர் கஷோகி, கடந்த அக்.2ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களை எடுத்துவர இஸ்தான்புல் சென்ற போது அங்கு சவுதி தூதரகத்தில் பயங்கரமாகக் கொல்லப்பட்டார். இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் கஷோகி இறந்ததாக சவுதி கூறிவந்தது.

இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி சவுதிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் கஷோகி தொடர்பாக 5 பேர் மீது சந்தேகம் உள்ளது என்றும் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வியாழனன்று தெரிவித்தார். ஆனால் இவரும் கூட கஷோகியின் உடல் பாகம் பாகமாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டது குறித்து சவுதி இளவரசருக்கு ஒன்றும் தெரியாது என்றே கூறினார்.

இந்நிலையில் சிஐஏ சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கஷோகி கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருப்பதற்கு ஆதாரமாக இளவரசரின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சவுதி தூதருமான காலேத் பின் சல்மான், கஷோகியுடன் உரையாடிய தொலைபேசி உரையாடலைக் கூறுகிறது.

அதாவது கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்று வேண்டிய ஆவணங்களைச் சேகரித்துக் கொள்ளுமாறு காலேத் தொலைபேசியில் தெரிவித்ததை சிஐஏ தனது ஆதாரமாகக் கருதுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com