Sunday, November 11, 2018

விம்பங்கள், நிஜ உருவங்கள் அல்ல. விஜய பாஸ்கரன்

தமிழர்களில் பலர் இன்னமும் புலிகளை நேசிக்கிறார்கள். பிரபாகரனை ஒரு வீரனாக, சிறந்த தலைவனாக, புரட்சியாளாராகவும் பார்க்கிறார்கள். அவர் முப்பது வருடங்களாக தனக்கென ஒரு படை அமைத்து யுத்த சாகசங்களை செய்திருக்கிறார். அதற்காக அவரை ஒரு புரட்சியாளனாக, முற்போக்காளனாக சித்தரிப்பது, சித்தரிக்க முயல்வது வரலாற்றுத் தவறாகும்.

பிரபாகரன் கள்ளக்கடத்தல் கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவர். ஒரு விதமான புரிதல்களும் இன்றி வெறும் இனவாத சிந்தனைகளுக்கு இரையாகி ஆயுதம் ஏந்திய ஒருவர். வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பிய மனிதர். தமிழ் தேசியத்தின் பெயரால் போராட்டம் , நடத்தியபோதும் தமிழ் தேசியத்தையே சீரழித்த ஒரு மனிதர். இவரைச் சிலர் புரட்சிவாதியாக, முற்போக்காளராக ஏன் இன்னும் சிலர் பிடல் காஸ்ரோ, சேகுவேரா போன்றவர்கள் போல் ஒரு விம்பத்தைக் காட்ட முற்படுகின்றார்கள்.

உண்மையில் பிரபாகரன் ஒரு இந்திய பாணியிலான கட்டப் பஞ்சாயத்து தலைவர். இத்தாலிய தென் அமெரிக்க மாபியாக் கும்பலைப் போன்ற ஒரு அமைப்பையே வைத்திருந்தார். அதற்கே அவர் தலைவர். அந்த அமைப்புக்கோ அவருக்கோ கொள்கைகள் என்ற ஒன்று இருந்ததில்லை. இனத்தின் பேரால் யுத்தங்கள் நடந்தன. அந்த யுத்தத்தின் பெயரால் சொந்த மக்களையே வதைக்கு உள்ளாக்கியவர் பிரபாகரன்.

ஒரு போராளி, தலைவன் என்பவன் மக்களுக்காக வாழவேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களை எசமானாக நினைக்கவேண்டும். புலிகளோ, பிரபாகரனோ அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு சொந்த மக்களையே அச்சுறுத்தும் நபராக, சொந்த மக்களையே அச்சப்பட வைக்கும் ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள். சொந்த சகாக்களைக் கூட நம்பாத ஒருவர் எப்படி மக்கள் தலைவனாக போராளியாகவும் புரட்சியாளனாகவும் கருதமுடியும்?

ஆரம்பம் முதலே துப்பாக்கிமீது காதல் கொண்டவராகவும், சந்தேகம் அச்சம் நிறைந்தவராகவும் வாழ்க்கையைக் கடத்தியவர். வன்மம் தீர்க்கும்குணம் கொண்ட ஒருவரை எப்படி போராளியாக புரட்சியாளனாக கருதுவது? எந்த சரியான காரணம் எதுவுமின்றி சக போராளிக் குழுவின் மேல் திடீர் தாக்குதல் நடாத்தி அந்த அமைப்பை செயலிழக்க வைத்தார். முன்னூறுக்கும் அதிகமான சொந்த இன இளைஞர்களையே வீதிகளில் சுடலைகளில் உயரோடு நெருப்பில் எரிக்க உத்தரவிட்ட ஒருவன் சரியான தலைவனா? போராட்ட வீரனா? இவரை பிடல் காஸ்ரோவுக்கும், சேகுவேராவுக்கும் ஒப்பிடுவது அந்த தலைவர்களை கேவலம் செய்வது போலாகும்.

ஒரு போராளி என்பவன் மக்கள் உயிர்களைக் காக்கவேண்டும். ஆனால் புலிகள் அப்படி அல்ல. தம்மைக் காக்க மக்களை பலிக்கடா ஆக்கினார்கள. மக்கள் உணவுகளைக் கொள்ளையடித்தார்கள். கப்பம் கேட்டு கொடுமைகள் செய்தார்கள். வசதியான வீடுகள் ஆடம்பர வாகனங்களைப் பறித்து அவர்களே சுகபோகம் அனுபவித்தார்கள். இந்தக் கும்பலிற்கு தலைவனான பிரபாகரனை உலகப் புரட்சியாளர்களோடு ஒப்பிடுவதும் உலக மகாவீரனாக கருதுவதும் ஒரு பொய்யான விம்பத் தோற்றமே.

சமாதானம் என்ற ஆயுதத்தை வஞ்சம் தீர்க்கப் பயன்படுத்தியவர் பிரபாகரன். ஆரம்பம் முதலே எதிரிகளோடு சமாதானமாக நடித்தே கொலை செய்தார். இது மைக்கல் பற்குணம் ஆகியோரிடம் இருந்து இந்த வரலாறு தொடங்குகிறது.

யுத்த காலங்களில் மக்களைப் போல வெள்ளைக்கொடி ஏந்திநின்று வீதிகளில் கண்ணிவெடி புதைப்பது , கர்ப்பிணி வேசம் போட்டு தற்கொலை குண்டுதாரிகளை அனுப்புவது, பொதுமக்கள் வாழிடங்களில் குண்டுகளை வெடிக்க வைப்பது இவை எல்லாம் யுத்த தந்திரமா? இல்லை கொலை வெறியா? பொது மக்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமேனும் கவலைப்படாத ஒருவனை தலைவன், மாவீரன் என பலர் கொண்டாடுகிறார்கள்.

அனுராதபுரம் படுகொலைகள், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் எல்லாம் புலிகளின் மிருகத்தனத்தின் ஆவண சாட்சியங்களாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இஸ்லாமிய மக்களை இரவோடு இரவாக பிறந்த மண்ணைவிட்டு துப்பாக்கி முனையில் வெளியேற்ற உத்தரவிட்ட பிரபாகரனை ஒரு புரட்சியாளனாக வீரனாக கொண்டாடுவது மிக கேவலமானது.

சிலர் சொல்கிறார்கள். புலிகள் காலத்தில் சாதிகள் இல்லையாம். துப்பாக்கி முனையில் சாதிப்பிரச்சினைகள, உறங்க வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக புலிகளுக்கோ பிரபாகரனுக்கோ எந்த அக்கறையும் இருந்தது இல்லை. இந்தியாவில் ஒன்பது பிரிவுகளாக இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை பிரபாகரன் இணைக்க விரும்பவில்லை. சமூகப் பிரச்சினைகளை காணாமலே கடந்து போனார்கள். எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்பவே இல்லை.

பிரபாகரன் பற்றி சமூகம்,தமிழர்கள் கொண்டுள்ள விம்பங்களை இல்லாது செய்யவேண்டும். இனவெறி என்ற போர்வையால் புலிகள், பிரபாகரன் தவறுகள் மூடப்படுகின்றன. பிரபாகரனைப் பொறுத்தவரை யுத்த வெறிபிடித்த மனநோயாளி. எதிரிகளின் பிணங்களை எண்ணி சந்தோசப்படும் கொலைக்கும்பலின் தலைவன்.

தன்னைப் பாதுகாக்க பல இலட்சம்மக்களை துப்பாக்கி முனையில் கேடயமாக்கி முள்ளிவாய்க்கால்வரை கொண்டுபோன ஒருவன் வீரனா? கோழையா? இல்லை நல்ல தலைவனா?

இந்தக் கொலைகார கூட்டத்தை பிரபாகரனை நினைவு கூருவது முட்டாள்தனமானது.அருவருப்பானது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com