Monday, November 5, 2018

சதியின் பொறியில் சாணாக்கியம் சிக்குமா ? மைத்திரி அருகிலிருந்து ஹக்கீமுக்கு போன் செய்த றிசாத்!

பாராளுமன்ற உறுப்பினர் வீ.சீ இஸ்மாயீல் அவர்கள் அண்மையில் தனது தலைவருக்கு தெரியாமல் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மகிந்தவிடம் சென்றதாகவும், அவரை மகிந்த திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வெளிவந்தது.

வீ.சீ இஸ்மாயில் அவர்கள் ஜனாதிபதி மைத்ரியைத்தான் சந்தித்திருந்தார். அதாவது வீ.சீ அவர்களுக்கு ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவு இருந்துவருகின்றது. ஜனாதிபதி ரஷ்யாவுக்கு சென்றபோதும் தன்னுடன் வீ சீ அவர்களை அழைத்து சென்றிருந்தார்.

மகிந்தவுக்கு ஆதரவு திரட்டுவதில் ஜனாதிபதியின் பங்கு பிரதானமானது. இந்த நிலமையில்தான் தங்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதிக்கு வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே வீ சீ யை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

இந்த விடயத்தை திரிபு படுத்தியவாறு மகிந்த அவர்கள் வீ சீயை திருப்பி அனுப்பியதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் வீ.சீ அவர்கள் பிரதி அமைச்சர் பதவியினை பாரம் எடுத்ததாகவும், சில காரணங்களுக்காக அது வெளியே கூறப்படவில்லை என்றும் காதும் காதும் வைத்தால்போல் உயர்மட்ட கதைகள் கூறுகின்றன.

இந்த தகவல் எப்படியோ றிசாத் பதியுதீனின் காதுகளுக்கு எட்டியுள்ளது. அதன்பின்பு உசாரடைந்த றிசாத் பதியுதீன் அவர்கள் உடனடியாக ஜனாதிபதியை ரகசியமாக சந்தித்திருந்தார்.

பல தடவைகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஜனாதிபதி தொடர்புகொள்ள முயற்சி செய்தும் தொடர்பினை ஏற்படுத்த முடியாதிருந்த நிலையில், றிசாத் வதியுதீன் அவர்கள் ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தபோது தனது தொலைபேசி மூலமாக ரவுப் ஹக்கீமை தொடர்பு கொண்டிருக்கின்றார்.

றிசாத் வதியுதீன் ஜனாதிபதிக்கு அருகில் இருக்கின்றார் என்ற விடயம் தெரியாத ரவுப் ஹக்கீம் அவர்கள், றிசா பதியுதீனின் தொலைபேசிக்கு பதில் வழங்கியபோது தொலைபேசியை ஜனாதிபதியிடம் வழங்கியிருக்கின்றார் றிசாத் அவர்கள்.

இந்த இக்கட்டான நிலையில்தான் மறுக்கமுடியாமல் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ரவுப் ஹக்கீம் அவர்கள் உடன்பட்டார். அந்த பேச்சுவார்த்தையின்போது ரவுப் ஹக்கீம் தலைமையில் றிசாத் வதியுதீனும் செல்வதாகவே வெளியே செய்திகள் வெளிவந்தது.

இதற்கிடையில் அண்மையில் பசில் ராஜபக்சவுக்கும் றிசாத் பதியுதீனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர் பௌசியின் இல்லத்தில் காலை ஆறு மணிக்கு நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை மிகவும் இரகசியமாக நடைபெற்றதனால் அதன் விபரங்கள் வெளியே வராவிட்டாலும், அவர்கள் என்ன பேசியுள்ளார்கள் என்பதனை ஊகிக்க கூடியதாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரசை பின்பற்றியே றிசாத் பதியுதீனும் செயல்படுவார் என்றே தலைவர் ஹக்கீம் அவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இன்று வரைக்கும் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது.

அதாவது பாராளுமன்றம் கூடுகின்றபோது அன்றைய நிலைமைக்கு ஏற்றவாறே மக்கள் காங்கிரஸ் வாக்களிக்கும். முன்கூட்டியே எந்தவொரு அமைச்சு பதவியையும் றிசாத் பதியுதீன் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்.

மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற்றால், சில மாதங்கள் சென்றபின்புதான் றிசாத் அவர்கள் அமைச்சர் பொறுப்பினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

தான் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதாக காட்டிக்கொண்டாலும், தனது அரசியல் நலனை மட்டும் முன்னிறுத்தியே றிசாத் அவர்கள் காய் நகர்த்துவதனை காணக்கூடியதாக உள்ளது.

இறுதியாக றிசாத் பதியுதீனின் நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் அவதானமாக செயல்படாதுவிட்டால் ஏமாற்றம் அடைவதனை தவிர எந்தவொரு நண்மைகளும் அடையப்போவதில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com