Monday, October 8, 2018

உங்கள் தந்தை ரணசிங்க பிறேமதாஸ ரொம்ப நல்லவர். சுமந்திரன் சஜித்திடம் புகழாரம்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி - மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட 'நாவலர் கோட்டம்' எனும் மாதிரிக் கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டிருந்தார்.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பா.உ சுமந்திரன், அமைச்சர் சஜித்தின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச, வீடமைப்புத் தொடர்பில் ஆற்றிய சேவைகளை ஞாபகப்படுத்தியதுடன் அவரின் சேவையை பாராட்டும் நிமிர்த்தம் அவரை நினைவு கூருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியதுடன், அமைச்சர் சஜித்தை, 'செயற்றிறன் மிக்க அமைச்சர்' எனவும் புகழ்ந்துள்ளார்.

அதேபோன்று, அமைச்சர் சஜித் போன்ற இளந்தலைவர்கள், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு கை கொடுக்க வேண்டும் எனவும், இதன்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சு என்றோர் அமைச்சு உள்ள போதிலும், வடக்கிலும் கிழக்கிலும் வீடுகளை அமைப்பதற்கு, மூன்று, நான்கு அமைச்சுகளுக்கு அந்தப் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன எனச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஆறு வித்தியாசமான நிறுவனங்கள், வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றன என்றார்.

'ஆகையால், வீடமைப்பாக இருந்தால், அதை வீடமைப்பு அமைச்சிடத்தே அதை விட்டுவிடுங்கள் என்று நாங்கள், பல தடவைகள், பல இடத்திலேயே சொல்லியிருக்கின்றோம். அதற்கு, வடக்கு அபிவிருத்தி என்று ஓர் அமைச்சு, நல்லிணக்க அமைச்சு என்று இன்னோர் அமைச்சுத் தேவையில்லை. வௌ;வேறு அமைச்சுகளிடத்தே அதைக் கொடுத்து, இதுவரைக்கும் எதுவித வீடுகளும் அமைக்காத சூழ்நிலை தான் இருந்துகொண்டிருக்கிறது' என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கக் காலத்தில், வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தபோது, அதற்கான நிதியில்லை என்ற பதில் வழங்கப்பட்டது எனவும், அதன் காரணமாகவே, இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று, புதிய அரசாங்கத்திடமும் கோரிக்கையை முன்வைத்திருந்தாலும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சால் மாத்திரமே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com