Tuesday, October 16, 2018

நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்!

நமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

முன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.

பொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.

1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சிறீ.ல.சு.கட்சி இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் – சமசமாஜக் கட்சிகளுடன் சேர்ந்து பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபொழுது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது பெரும் அடியாக விழுந்தது. ஏனெனில் அந்த அரசாங்கம் பல முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி மூலம் 1971இல் எதிர்ப்புரட்சி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தி அதில் தோல்வி கண்டன.

1972இல் சிறீமாவோ தலைமையிலான அரசு இன்னொரு முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கையாக, இலங்கைக்கு பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பைத் துண்டித்து இலங்கையைக் குடியரசாக்கியது. புதிய குடியரசு யாப்பில் சிறீமாவோ அரசு தமிழ் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதைச் சாக்காக வைத்து, ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் இனவாதத் தலைமையை பிரிவினைவாதப் பாதையில் தூண்டிவிட்டன. அது 30 வருடப் போராக வளர்ந்து நாட்டை சகல வழிகளிலும் சீரழித்தது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இந்த விடயத்தில்தான் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிந்த அரசு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஏனெனில், ஏகாதிபத்திய சக்திகளின் மிகுந்த பண – ஆயுத பலத்துடன் தமிழ் சமூகத்தில் இருந்த ஜனநாயக, முற்போக்கு மற்றும் மாற்றுக் கருத்துச் சக்திகளை அழித்து, தனிப்பெரும் பாசிச – மாஃபீயா சக்தியாக வளர்ந்து, எவராலும் வெற்றி கொள்ளப்பட முடியாதவர்கள் எனக் கணிக்கப்பட்ட புலிகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நிர்மூலமாக்கியது. புலிகளின் பாசிசத் தலைவன் பிரபாகரனைக் காப்பாற்ற ஏகாதிபத்திய சக்திகள் எடுத்த முயற்சியையும் கூட மகிந்த அரசு அனுமதிக்கவில்லை. இது மகிந்த அரசு மீது ஏகாதிபத்திய சக்திகளை சீற்றமடைய வைத்த முக்கியமான விடயமாகும்.

அடுத்ததாக, போர் முடிவுற்றதின் பின்னர் நாட்டைச் சுபிட்சப் பாதையில் கட்டியெழுப்புவதற்கு மகிந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போட்டு வந்தன. ஏனெனில் போர் முடிவுற்றுவிட்டதால் நாடு துரிதகதியில் வளர்ச்சி அடையும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படி வளர்ச்சி அடைந்தால் சிறீ.சு.கட்சி தலைமையிலான அரசை அடுத்த 50 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த முட்டுக்கட்டைகளைப் போட்டன.

ஆனால் அவர்களது இந்த நடவடிக்கை பயனளிப்பதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியது. இலங்கை தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, எப்பொழுதுமே ஆபத்தான வேளைகளில் உதவிக்கு ஓடிவந்த சீனாவின் உதவியை நாடியது. இது ஏகாதிபத்திய சக்திகளால்சகிக்க முடியாத இன்னொரு முக்கியமான விடயமாகும்.

புலிகளை அழித்தது, சீனாவுடன் நெருங்கிச் சென்றது, இரண்டுமே இலங்கையில் மகிந்த அரசை வீழ்த்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுப்பதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்தன. அதன் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம்.

இதற்கான புறச்சூழலை முதலில் உருவாக்கினார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி மகிந்த அரசு மீது கடுமையான போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நெருக்கடி கொடுத்தார்கள். உள்நாட்டைப் பொறுத்தவரையில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன, ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகின்றது, வடக்கு கிழக்கில் இராணுவ அட்சி நடைபெறுகின்றது, நாடு சிங்களமயமாக்கப்படுகின்றது, போன்ற பல பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

இருப்பினும், வழமையான தமது நேச சக்தியான ஐ.தே.க. மூலம் மகிந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று கண்ட ஏகாதிபத்திய சக்திகள், இம்முறை புதிய யுக்தியொன்றைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் மகிந்த ராஜபக்ச மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர் மூலம் சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக்கினர்.

அவருக்கு ஆதரவாக வழமையான சிங்கள – தமிழ் வலதுசாரிக் கட்சிகளான ஐ.தே.கவையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரவாகச் செயல்பட வைத்தனர். அத்துடன் மகிந்த அரசில் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்த சில முஸ்லிம் – மலையகக் கட்சிகளையும் இணைய வைத்தனர். இவர்கள் தவிர, வழமைக்கு மாறான ஒரு ஐந்தாவது அணியாக (Fifth Column) இடதுசாரி இயக்கங்களில் இருந்த சில ஓடுகாலிகளையும், ‘மனித உரிமை’ அமைப்புகளையும் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆக்கினர். இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் மகிந்த தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத, தேசபக்த அரசுக்கு முடிவு கட்டினர்.

ஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, ‘நல்லாட்சி’யின் இலட்சணத்தை கடந்த மூன்று வருட காலத்தில் நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். அந்த உணர்வின் வெளிப்பாட்டை கடந்த பெப்ருவரி 10இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கூட்டு எதிரணியை அமோக வெற்றிபெற வைத்ததின் மூலம் காட்டியும் விட்டனர்.

‘நல்லாட்சி’ ஆட்சியாளர்களால் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுடன். ரூபாயின் மோசமான மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கத் தவறியதின் மூலம் மக்களை வாழ முடியாத நிலைமைக்கும் தள்ளி விட்டுள்ளனர். இதனால் ‘நல்லாட்சி’யில் ஜனாதிபதி – பிரதமர் பதவிகளை வகிப்பவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் தினசரி அடிதடியும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை இலண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஏடான ‘எக்கோனமிஸ்ற்’ (Economist) சஞ்சிகையும் வெளிப்படுத்தியுள்ளது. இதே சஞ்சிகைதான் 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு “மகிந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது?” என்று தலைப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர். அற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் கொழும்பிலிருந்து ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், கடைந்தெடுத்த வலதுசாரியுமான எம்.ஏ.சுமந்திரன், அடுத்து வரும் தேர்தலிலும் 2015இல் ஏற்பட்ட அரசியல் கூட்டு தொடர வேண்டும் எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

எனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் கடமையாகும்.

“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்.வானவில் 93

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com