Tuesday, October 30, 2018

ஏலத்தில் விடப்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் அரசியல் பெருந்தலைகள். பீமன்

இலங்கையில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அனைவரும் கூறிக்கொள்கின்றனர். இது எதிர்பாராத மாற்றமா அன்றில் எதிர்பார்த்த மாற்றமா? மக்களை பொறுத்தவரையிலும் இன்றைய காலகட்டத்திலும் இது எதிர்பார்த்த மாற்றமாகவே கருதப்படுகின்றது.

கடந்த மூன்றரை வருடங்களாக ஆட்சியை கைப்பற்றிருந்த நல்லாட்சி என்று பெயர் சூடப்பட்டிருந்த அரசாங்கத்தால் மக்களுக்கு எவ்வித நலனும் இடம்பெறவில்லை என்ற கருத்து உருவாகி, இவ்வரசாங்கம் தொலைந்து போக வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் வந்தபோதே மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக பல்வேறுபட்ட விளக்கங்கள் கூறப்படுகின்றது. நியமனம் சட்டவிரோதமானதும், அரசியல்யாப்பினை மீறுவதுமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாராளுமன்றின் விசுவாசத்தை பெற்றுக்கொள்ளக்கூடியவர் என ஜனாதிபதி கருதுகின்ற ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கலாம் என அரசியல் யாப்பு கூறுகின்றது.

விசுவாசத்தை பெற்றுக்கொள்ளுகின்றவர் யார் என்ற கேள்வியை கேட்டால் „ பெரும்பாண்மையை கொண்டிருக்கின்றவர்" என்று எடுத்துக்கொள்கின்றார்கள் அல்லது வாதிடுகின்றார்கள். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுகின்றவர் பெரும்பாண்மையை பாராளுமன்றில் நிரூபிக்க வேண்டும் என்று அரசியல் யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் „பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை" என்று பதில் வருகின்றது. ஆகவே மஹிந்த ராஜபக்ச பெரும்பாண்மை இன்றி பிரதமராக நீடிக்கலாம் என்பது அவர் தரப்பு சட்ட வல்லுனர்களின் விளக்கமாகவுள்ளது. ஆனால் பெரும்பாண்மை இன்றி எவ்வாறு பாராளுமன்றில் நீடிக்க முடியும்? நம்பிக்கையில்லை பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டால் பெரும்பாண்மை இல்லாத பிரதமரின் நிலை என்னவாகும்?

இந்த நிலையில் பாராளுமன்றை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, இலங்கை தமிழரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை சபாநாயகரை கேட்டுள்ளது. பாராளுமன்றை 16 ம் திகதி வரை பிற்போட்டுள்ளார் ஜனாதிபதி. ஜனாதிபதியின் மேற்படி உத்தரவை மேவி சபாநாயகர் பாராளுமன்றை கூட்டினால் என்ன நடக்கும் என்பதுதான் யாவரும் கேட்கின்ற கேள்வி.

பிரதமர் யார் என்பது, தொடர்பான தீர்ப்பு சிலநேரம் உச்ச நீதிமன்றினால் தீர்மானிக்கப்படலாம். மேற்படி விவாதங்களின் பிரகாரம் மஹிந்தவே பிரதமர் என்பது தீர்ப்பாகவும் அமையலாம். ஆனால் அடுத்த கட்டப்பிரச்சினை யாதெனில், வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம். வரவு செலவுத் திட்டம் நிறைவேற 113 வாக்குகள் வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 ஆசனங்களுடன் இன்று அரசுடன் இணைந்து கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களுடன் சேர்த்து 101 அத்துடன் ஈபிடிபி யும் சேர்ந்தால் 102 ஆசனங்கள் மாத்திரமே மைத்திரி-மஹிந்த தரப்பினரிடம் உள்ளது.

இந்நிலையில்தான் தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைகளை மொத்தமாகவோ அன்றில் சில்லறையாகவோ கொள்வனவு செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளார் பொதுஜன பெருமுனவின் இயக்குனர் என்று அறியப்படுகின்ற பசில் ராஜபக்ச. ஆட்களை வாங்குவதில் பசிலுக்கு நிகர் இலங்கையில் எவரும் இருக்கமுடியாது என்பதற்கு கடந்த 48 மணித்தியாலயங்களில் வடிவேல் சுரேஸ் அடிந்த அந்தர் பல்டிகள் தெளிவுபடுத்துகின்றது.

மஹிந்த ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்தவுடன் அவரை சனிக்கிழமை சந்தித்த வடிவேல் சுரேஸ், மஹிந்த ராஜபச்சவிற்கு தனது ஆதரவு என்றார். மறுநாள் அலரி மாளிகைக்கு சென்ற வடிவேல் சுரேஸ், ரணில் சேர் உங்களை நான் விட்டுட்டு போவேனா? நான் அங்கே சென்றது அவர் முதல் எனக்கு செய்த உதவிகளின் நிமிர்த்தம் ஓர் வாழ்த்துச் சொல்லத்தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை சேர். நீங்கள் அப்பிடி ஒன்று கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் தானே என்ர தங்கச் சேர் என்று தலையில் நெட்டியும் முறித்துக்கொண்டு வெளியே வந்து அலரிமாளிகை வாசலில் மேற்சொன்னவற்றை அப்படியே ஊடகங்களுக்கும் கூறியதுடன் நின்றுவிடவில்லை தான் தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டினார்.

ஆனாலும் பஸில் ராஜபக்ச, சலித்து விடவில்லை. ஆத்திரப்படவில்லை. தொலைபேசி அழைப்பெடுத்து பிளெடி ராஸ்கல் என்று பேசவும் இல்லை. சாதுரியமாக அழைத்து ஜனாதிபதி மாளிகையில் விட்டு அமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்யவைத்துள்ளார். இதுதான் பசிலின் முளைச்சலவை செய்யும் சக்தி.

பஸிலின் சூத்திரத்தை நன்கு அறிந்தவர்கள்தான் நமது முஸ்லிம் அமைச்சர்கள். மாட்டோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு விலையும் சலுகைகளும் அதிகரிக்கும் என்பது அவர்களுக்கு தெரியும், இந்தப்பேரம்பேசல் அவர்களுக்கு ஒன்று புதிது கிடையாது. அந்த அடிப்படையில்தான் தற்போது அவர்கள் ஐ.தே.க யுடன் நிற்பதாக பாசாங்கு செய்கின்றார்கள். நான் அடித்துக்கூறுகின்றேன். அது இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு மாத்திரமே.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரவுப் ஹக்கீம் சொல்லியிருந்த ஒருவிடயத்தை கவனிக்க வேண்டும். ஹக்கீம் எதிர்கட்சியில் உட்காருவதற்கும் தயங்கமாட்டாராம் என்பது அந்த செய்தி. உண்மையில் அவர் எதிர்கட்சியில் உட்காருவேன் என்பதல்ல அதன் அர்த்தம். தற்போது எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் விரைவில் ஆழும் கட்சியில் உட்கார்வார்கள் அப்போது அவர்களுடன் நானும் உட்காருவேன் என்பதுதான் அதன் பொருளாக அமைந்திருந்தது.

தலைகளை மாற்றி ஆட்சியை மாற்றும் பேரம்பேசல்கள் இடம்பெற்றபோது, ரவி கருணாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் 23 பேர் ராஜபக்ச பக்கம் தாவவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே ஹக்கீம் மேற்படி விடுகை விட்டிருந்தார். ஆனாலும் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினருடனான பேரம்பேசலில் எட்டமுடியாமல்போன சில விடயங்களுக்கு அப்பால் ரவியை ஏற்றுக்கொள்வதில் பொதுஜன பெருமுன வினரிடம் எதிர்ப்பு காணப்படுகின்றது.

அந்த எதிர்ப்பு ஒன்றும் ரவியுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது. எதிர்வரும் தேர்தலில், பொதுஜன பெருமுன வினரின் தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருளாக அமையப்போவது, பிணைமுறிக் கொள்ளையேயாகும். எனவே குறித்த பகல் கொள்ளையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பதவி பறிக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவை தம்பக்கம் வைத்துக்கொண்டு எவ்வாறு அதற்கு எதிராக பேசமுடியும் என்ற குழப்பம் உள்ளே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ரவியை விடுத்து ஏனையவர்களை ஒவ்வொருவராக எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் பஸில் ராஜபக்ச.

ரவி கருணாநாயக்க தலைமையில் 23 பேர் கட்சி தாவுகின்றார்கள் என்பதை அறிந்தவுடன், நீங்கள் அழைக்காவிட்டாலும் நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம் என்று மஹிந்தவிற்கு கூறியிருந்த ஹக்கீம் மற்றும் ரிசார்ட் தரப்பினர் தற்போது தங்களைது தலைகளை ஏலத்தில் விட்டுள்ளனர். தாவாமல் தடுப்பதற்கு ரணிலும், தாவுவதற்கு பஸிலும் தற்போது ஏலத்தில் நிற்கின்றனர்.

முஸ்லிம் மக்களை பொறுத்தவரை தமது தலைவர்கள் தேவையான தரப்பிடம் பணத்தை வாங்கி தங்கள் மடியை நிரப்பிக்கொள்ளலாம். அம்மக்கள் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தங்கள் தலைவர்கள் எதிர்கட்சியிலிருந்து, கூக்குரலிடுவதைக்கேட்டு தமிழரைப்போல் கைதட்டுவதற்கும் விசிலடிப்பதற்கும் அவர்கள் முட்டாள்கள் அல்ல. நேரடியாக கூறின், தமது தலைவர்கள் ஆட்சியில் பங்கெடுக்கவேண்டும் அதனூடாக பிரதேச அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளுக்கு வருடாந்தம் அரச வேலைவாய்ப்பு மற்றும் அரச சலுகைகள் யாவற்றையும் பெற்றுத்தரவேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பு.

ஹிக்கடுவ , திகண , அம்பாறை வன்செயல்கள் யாவும் ரணில் விக்கிரமசிங்கவினால் மஹிந்தவையும் முஸ்லிம் மக்களையும் பிரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி எனக்கூறும் முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் அரசில் தமது தலைவர்கள் உடனடியாக பங்கெடுக்கவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

இந்தப்படிப்பினையிலிருந்து தமிழ் மக்கள் தமது தலைமையையும் தாம் வழிநடாத்த தவறிவிட்டோம், தமது வழிக்கு எதிர்காலத்தில் தலைமையை கொண்டுவரவேண்டும் என்று உணரத்தொடங்கியுள்ளனர் என்பதை சமூக வலைத்தள பதிவுகள் எடுத்துக்கூறுகின்றது.

உணர்சிச்சி மாயையில் சிக்கியுள்ளவர்களையும் அவர்களது விதண்டாவாதங்களையும் கண்டுகொள்ளாது, முஸ்லிம் மக்கள் எவ்வாறு தமது தலைமையை வழிநாடாத்துகின்றார்களோ அவ்வாறு, இன்று தமிழ் மக்களும் தமது தலைமை அரசில் பங்கெடுக்கவேண்டும் அதற்கான பேரம் பேசலில் இறங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

ஏன் பட்ஜெட்டிற்கு ஆதரவளிப்பதாயின், அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுகின்ற பாரிய குற்றமிழைத்துள்ளோரை விடுவிப்பதற்கு இணங்கவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்குமாறு புலிகள் தரப்புக்கூட த.தே.கூட்டமைப்பினருக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததை குறிப்பிடலாம்.

ஆனால் இக்கருத்துடன் நேரடியாக மோதாத தமிழ் இளைஞர்கள் வர இருக்கின்ற அரசுடன், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு என்கின்ற சாத்தியமில்லாத நிபந்தனைகளை விடுத்து நடைமுறைச் சாத்தியமான நிபந்தனைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணையவேண்டும் என்று வேண்டுகின்றனர்.

ஆனால் அரசு கவிழ்ந்தபோது நமிட்டு சிரிப்புடன் ஊடகங்கள் முன்தோன்றிய சுமந்திரன் நாங்கள், மஹிந்த தரப்பிற்கு நிபந்தனை விதித்துள்ளோம் : வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, ஐ.நா வின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழிகளை தந்தால் பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு தெரிவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது தமிழ் மக்களிடமிருந்து வரும் அழுத்தத்திற்கான பதிலாக, தாம் இவ்வாறு பேசியிருக்கின்றோம் என்ற செய்தி. இரண்டாவது, அது நிறைவேறாத பட்சத்தில், ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம் எமது தேவைகளை பூர்த்தி செய்ய தயாராகவிருந்தபோது, ஜனநாயக விரோதமாக மஹிந்த தரப்பு ஆட்சியை கைப்பற்றி ரணிலை முடக்கிவிட்டார்கள், சர்வதேசம் கொதித்துப்போயுள்ளது எனவே தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆணையை ரணில் விக்கிரமசிங்கே யிற்கு வழங்கவேண்டும் என பழைய கள்ளை புதிய பிளாவில் தமிழருக்கு பருக்கி போதையேற்றலாம் என்பது.

சுமந்திரன் தரப்பு மேற்படி நிபந்தனைகளை வைத்தற்கான காரணமும் மிக தெளிவானது. மஹிந்த தரப்பினர் ஐ.நா வின் பிரேணையை முழுமையாக எதிர்கின்றனர். அப்பிரேரணையை நிறைவேற்ற அல்ல பரிசீலிக்கவே தாங்கள் தயாரில்லை என்று அறிவித்துள்ள நிலையில் சாந்தியமில்லா நிபந்தனையை விதித்து வெளியேறிக்கொள்ள முடியும் என்பதாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசொன்றே இலங்கையில் இருக்கவேண்டும் என்று மேற்குலகம் விரும்புகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்குலகின் ஏவலாளிகள். எனவே சூத்திரத்தை சிறுபிள்ளையாலும் விளங்கிக்கொள்ளமுடியும்.

எனவே தமிழ் தலைமையின் தலைகள் உள்ளுர் ஏலத்தில் இல்லை என்பது தெளிவு. ஆனாலும் ஓரிருவரை தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறாமலும் இல்லை. எது எவ்வாறாயினும் மேற்குலகினால் வழங்கப்படவுள்ள தொகையை பிரித்துக்கொள்வதில் பங்காளிக்கட்சிகள் நேரடியாக போர்க்கொடி தூக்கியுள்ளது.

அக்கட்சிகளின் தலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் தங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை அவர்களே முடிவுகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இம்முறை நாங்கள் அதற்கு அனுமதிக்கமாட்டோம் முக்கிய முடிவு எடுக்கின்றபோது நாமும் அதில் சம அந்தஸ்த்துடன் பங்கு கொள்ளவேண்டும் என்ற செய்தியை சொல்லியுள்ளனர்.

அதாவது நீங்கள் தொகையை வாங்க செல்லும்போது, நாங்களும் உங்களுடன் வரவேண்டும் எவ்வளவு வாங்குகின்றீர்கள் என்பதை நாமும் அறிந்தால்தான் அதை சரியாக பங்கிட்டுக்கொள்ள முடியும் என்ற அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவ்வச்சுறுத்தலுக்கு உறுதுணையாக கடந்த தேர்தலின்போது இந்திய றோ விடம் அள்ளி எடுத்துவிட்டு தமக்கு கிள்ளி கொடுத்த கதையை ஊடகங்களுக்கும் கசிய விட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இருக்கின்றார். மஹிந்த சம்பந்தனிடம் வேண்டிய ஒரே ஒரு வேண்டுகோள் „வாக்கெடுப்பை பகிஸ்கரியுங்கள் தேவையானதை தருகின்றோம்" என்பதாகும் . மஹிந்த ராஜபக்சவை சரியாக புரிந்து கொண்ட ஒரே ஒரு இராஜதந்திரி எரிக் சொல்கைம். சொல்கைம் புலிகள் மீதான விமர்சனங்களை விரித்து வைத்தபோது, பிரபாகரன் அரசியலில் ஒரு சூனியம், எதுவுமே விளங்காத ஒரு மூர்க்கன். அவர் மஹிந்த ராஜபக்சவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நிலைப்பதற்காக எதையும் வழங்ககூடியவர். அவரிடமிருந்து நிறையவே பெற்றிருக்கலாம். ஆனால் பிரபாகரனால் அது முடியாமல் போய்விட்டது. அவருக்கு அரசியல் சூனியம் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் எனது கணிப்பும் அவ்வாறே. மஹிந்தவுடன் சாத்தியமான விடயங்களை தமிழ் தரப்பு பேசுமாக இருந்தால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். காரணம் மஹிந்த தமிழர் தரப்புக்கு எதாவது செய்தால் அதைக்கண்டு சிங்கள மக்கள் மிரளவும் மாட்டார்கள், சிங்களவர்களை எவ்வாறு கையாள்வது என்பது மஹிந்தவிற்கு நன்கு தெரியும்.

எனவே மஹிந்தவை கையாளும் விடயத்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பே மேற்கொள்ளவேண்டும். காரணம் அரசுடன் இணைந்துள்ள உதிரிகளால் பேரம் பேச முடியாது. அவர்கள் தங்களது சொந்த நலனுக்காகவே இத்தனை காலமும் இணைந்து இருந்துள்ளார்கள். எனவே அவர்கள் வேண்டினாலும் அது எவ்வளவு தூரம் கணக்கிலெடுக்கப்படும் என்பது சிந்திக்கவேண்டிய விடயமே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com