Wednesday, October 17, 2018

கிளிநொச்சியில் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் , மக்கள் அவலம் !

மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மை நாட்களாக கிளிநாச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்புக்கள் இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மின்சார சபையினால் முறையாக காலத்திற்கு காலம் மின் வாசிப்பு பட்டியல் வழங்கப்படாதவர்கள் இவ்வாறான செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் வாசிப்பு மாதத்தின் குறித்த காலப்பகுதிக்குள் வாசிக்கப்பட்டு மின்பாவணைக்கான கட்டண விபரம் மக்கள் மத்தியில் கொடுக்கப்படாது, வெவ்வேறு காலங்களில் வாசிக்கப்படுவதால் மக்கள் சாதாரணமாக செலுத்த வேண்டிய தொகைக்கு மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறான மிக நெருக்கடியான சூழலி்குள் இலங்கை மின்சார சபையின் மக்களை இழுத்து சென்றுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக மின் வாசிப்பாளர்கள் இல்லாமையினால் மின் பாவணை சிட்டை வழங்க முடியவில்லை என தெரிவித்த மின்சார சபையினர், எவ்வித முன்னறிவித்தல் துண்டு (ரெட் நோட்டிஸ்) விநியோகிக்காது அவசர அவசரமாக குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டமை மக்களை மேலுமொரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சில வறிய குடும்பங்களிற்கு பத்தாயிரத்திற்கு அதிக தொகை கட்டணமாக கிடைத்துள்ள நிலையில் அவற்றை செலுத்த முடியாது மீண்டும் கடன் சுமைக்குள் மக்களை இலங்கை மின்சார சபையினர் தள்ளியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை புதிய மின்பாவணைக்கான இணைப்புக்கள் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். தமக்கான புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆகியுள்ள போதிலும் இதுவரை இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். மின் துண்டிப்பு செய்வதில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர், புதிய இணைப்புக்களை வழங்குவதற்கு பின்னடிப்பது தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பல குடும்பங்கள் புதிய மின் இணைப்புக்களிற்காக பணத்தை செலுத்தி காத்திருக்கும் அதேவேளை, அவ்வாறான இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு அளவீடு செய்து கட்டணம் தொடர்பில் அறிவித்தலை பெற்றுக்கொள்வதற்காக பல விண்ணப்பதாரிகள் நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவ்வாறான இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு கடந்த காலங்களில் ஏழை மக்களிடமிருந்து தலா 1000 ரூபா பெறப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சியில் உள்ள பிரதான மின்பொறியியலாளரிடம் முறையீடு செய்தபோது அவ்வாறு பணம் வாங்கிய சந்தர்ப்பங்கள் இருந்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், நாங்கள் அவ்வாறு பணம் எதுவும் பெறுவதில்லை எனவும் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிடம் விண்ணப்ப படிவம் கையளித்து 2 வாரத்தில் அளவீடு செய்யப்பட்டு கட்டண தொகை தொடர்பில் விண்ணப்பதாரிக்கு வழங்கப்படும் எனவும், அவர் பணம் செலுத்தி 2 வாரங்களிலேயே அவர்களிற்கான புதிய இணைப்புக்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். எது எவ்வாறாயினும் புதிய இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு குடிமகன் 1 மாதம் காத்திருக்க வேண்டிய நிலையை இலங்கை மின்சார சபையின் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கவலை அடைவதாகவும், இணைப்புக்களை துண்டிப்பதற்கு இவ்வாறான கால அவகாசங்களை வழங்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். திட்டமிட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இவ்வாறான இடையூறுகளை செய்வதுபோன்று தாம் சந்தேகிக்க வேண்டி உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி பொது சந்தையில் நான்கு கடைகளிற்கு ஓரு இணைப்பு என வழங்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தனித்தனியே வழங்காது இணைத்து வழங்கியமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு கடைகளும் வெவ்வேறு மின் பாவணையை மேற்கொள்வதனால் பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறான இணைப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொது சந்தையிலும் பெருந்தொகை பாவணை கட்டணம் குறிக்கப்பட்டு எவ்வித பாவணை சிட்டை வழங்கப்படு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சார சபையினரின் பொறுப்பற்ற இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர் என்பதுடன், முறைப்பாடு செய்யும் மக்களிற்கு பொருத்தமான பதில்கள் வழங்கப்படுவதில்லை என்பது தொடர்பிலும் கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் மாகாணத்திற்கு பொறுப்பாக உள்ள மின்சார சபை பொறுப்பதிகாரி ஆராய்ந்து முறையான சேவையை மக்கள் உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளவும், மாதாந்த மின்வாசிப்பு முறையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குாரிக்கை விடுக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com