Tuesday, October 23, 2018

கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை நியமனம் வழங்காமல் இருப்பது ஏன் ? இயலாமையா ? ஏமாற்றா ?

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும்பொருட்டு கடந்த வருடம் (2017) கல்வி அமைச்சினால் பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இதற்காக விண்ணப்பித்தவர்களில் தேசியரீதியாக விளையாட்டில் வெற்றி பெற்ற மற்றும் கல்வி தகமையுடயவர்களை நேர்முக பரீட்சை மூலமாகவும் செயல்முறை பரீட்சை மூலமாகவும் கல்வி அமைச்சு தெரிவு செய்திருந்தது.

இவ்வாறு தகமை அடிப்படையில் நாடுதழுவியரீதியில் தெரிவு செய்யப்பட்ட 3850 பயிற்றுவிப்பாளர்களின் பெயர் பட்டியலை கடந்த ஜூன் மாதம் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது.

இவர்கள் மாகான மற்றும் தேசிய பாடசாலைகளில் நியமனம் பெற இருந்தார்கள்.

ஆனாலும் இதுவரையில் தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் இன்னும் கல்வி அமைச்சினால் வழங்கப்படவில்லை. இழுத்தடிப்பு செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றது.

அவ்வாறு நியமனம் வழங்கப்படாமைக்கான நியாயமான எந்தவித காரணங்களையும் கல்வி அமைச்சு இதுவரையில் கூறவில்லை. மாறாக ஏதோ சாட்டுப்போக்குகளையே கூறிவருகின்றது.

இந்நியமனங்களை வழங்குமாறு கோரி தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களை சந்தித்து குறித்த நியமனத்தினை வழங்குமாறு பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

அதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றபின்புதான் நியமனம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறுகூறி பல மாதங்கள் கடந்தும் இன்னமும் அமைச்சரவைக்கு அது சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க குறித்த நியமனத்தினை பெறுவதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கும்பொருட்டு எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கும் குறித்த பயிற்றுவிப்பாளர்களினால் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும் எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை.

அரசாங்கம் இப்படியும் தங்களை ஏமாற்றுகின்றது என்பதனை அறிந்துகொள்ளாத பலர், தங்களுக்கு விரைவில் நியமனம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தாங்கள் இவ்வளவு காலமாகா தனியார் துறையில் செய்துவந்த தொழில்களையும் விட்டுவிட்டு இன்று நடுத்தெருவில் நிற்பது மிகவும் பரிதாபகரமான விடயமாகும்.

எனவேதான் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்குரிய நியமனத்தினை கல்வி அமைச்சு வழங்குமா அல்லது தொடர்ந்து ஏமாற்றுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.


முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com