Thursday, September 6, 2018

நீதிமன்றில் பரபரப்பு தகவல் தெரிவித்த இளைஞர் மட்டு சிறைச்சாலையில் உண்ணா விரதம்.

காத்தான்குடி முஸ்லிம்களிடம் 66 ஏகே 47 ரக ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை யாரிடம், அவற்றின் இலக்கங்கள் என்ன என்ற சகல விடயங்களும் தனக்கு தெரியும் எனவும் குற்றவாளிக்கூண்டில் நின்றவாறு பரபரப்புத்தகவல் தெரிவித்த நபர் கடந்த நான்கு நாட்களாக மட்டு சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

கடந்த 08.06.2018 அன்று காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளரான பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் எனும் முதியவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மூவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து கடந்த 11.06.2018 அன்று நீதிமன்றில் ஆஜர் செய்தபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 16.08.2018 அன்று நீதிவான் றிஸ்;வி முன்னிலையில் சந்தேகநபர்களை சிறைக்காவலர்கள் ஆஜர்படுத்தியோது, குற்றவாளிக்கூண்டில் நின்றவாறு கையை உயர்த்திய சந்தேகநபரான ரவீந்திரன் குகன் (வயது 38) , தன்னை போலிக்குற்றச்சாட்டில் கைது செய்துள்ளார்கள் என்றும் குறித்த கொலையை செய்தவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளதுடன் காத்தான்குடியில் ஆயுதங்களை வைத்துள்ள 66 நபர்களின் விபரங்களும் அவ்வாயுதங்களின் இலங்கங்களும் தனக்கு தெரியும் என்றும கூறியுள்ளார்.

தான் நீதிமன்றில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நீதிபதி றிஸ்வி அவர்கள் நடவடிக்கை எடுக்காமை தொடர்ந்தே தான் இவ்விடயங்களை நீதியமைச்சு , சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தும் நோக்கில் உண்ணா விரதத்தினை மேற்கொண்டுவருவதாக தெரிவித்து வருகின்றார் என மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலிலிருந்து வெளியேறிய காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

உண்ணவிரதமிருக்கும் நபர் குறிந்த வயோதிபரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தனக்கு நன்றாக தெரியும் என்றும் பா.உ ஹிஸ்புல்லாவும் காத்தான்குடி நகர சபைத்தலைவரும் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாகவும் கூறிவருகின்றார் எனவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு, நாவலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான ரவீந்திரன் குகன் 2004ம் ஆண்டுவரை புலிகளமைப்பிலிருந்தவர் என்பதுடன் இஸ்லாம் மதத்தை தழுவி காத்தான்குடி பெண்ணொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அவர் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com