Wednesday, September 19, 2018

சேலையில் புத்தர். பெண் சட்டத்தரணி மீது வழக்கு தாக்கல்..

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸார் தேடினர்.

அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பொலிஸாரால் தேடப்பட்ட சட்டத்தரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் மீளவும் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார்.

எனினும் பெண் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருக்கவில்லை.

“இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரால் எனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் நான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லை” என்று இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்டபட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த விவகாரம், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாள்களின் பின், அந்தப் பெண் சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்த விவகாரம் பூதாகரமானது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கைபேசியை பெண் சட்டத்தரணி மிரட்டிப் பறித்தெடுத்தார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.

பொலிஸாரின் இந்த அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாகத் தீர்மானித்தது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான், மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஆலோசனை பெற்றது.

இந்த நிலையில் பெண் சட்டத்தரணி, புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்த விவகாரத்தை நீதிமன்றுக்கு பொலிஸார் கொண்டு வந்துள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com