Saturday, September 8, 2018

இராணு முகாம்களின் எண்ணிக்கை தெரியப்படுத்தினால் அதற்கேற்ப செயற்படுவாராம் ரணில்.

வட-கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை குறைப்பது தொடர்பில் பாராளுமன்றில் பேசப்பட்டபோது, முகாம்களின் எண்ணிக்கையை எமக்குத் தெரியப்படுத்தப்படுமாயின் அதற்கேற்ப நாம் செயற்படுவோமெனப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியுயர்வு பிரச்சினையில்லை. இது இராணுவத்தின் உள்ளக மறுசீரமைப்பாகும். அதில், ஜனாதிபதியும் நானும் தலையிடவில்லை என்றார்.

இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையையடுத்து பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதியின் தீர்மானத்துக்கமையவே, படைகளில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பதவி நிலைகள் உள்ளன. அவை எச்சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படமாட்டாது என்று தெரிவித்த பிரதமர், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. எமக்கு முகாம்களின் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துங்கள். அதற்கேற்ப நாம் செயற்படுவோம் என்றார்.

படைகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமையானதொரு விடயமாகும். அதற்கேற்பவே, தற்போதும் படையினர் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நானும் ஜனாதிபதியும் தலையிடுவதில்லை என்றார்.

இதேவேளை, ஆவாக் குழுவினர் பயங்கரவாதிகள் அல்லர். அவர்களை பொலிஸாராலேயே கையாள முடியும். இதில் சட்டமும் ஒழுங்கும் பிரச்சினையே உள்ளது எனவும் தெரிவித்த பிரதமர், முகாம்கள் மற்றும் படையினர் விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சியினர், இராணுவத் தளபதியுடன் சந்தித்துக் கலந்துரையாடலாம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com