Wednesday, September 12, 2018

நுண்கடன்களை பெற்றுக்கொண்டுள்ள பெண்கள் இலங்கையில் எதிர்நோக்கும் சித்திரவதைகள் ஐ.நா வில்

இலங்கையில் நிதி நிறுவனங்களிடம் நுண் கடன்களை பெற்றுக்கொண்ட பெண்கள், அதனை மீளச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர் என ஐ.நா நிபுணர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் முடிவில் ஐநாவின் வெளிநாட்டு கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி இதனைத் தெரிவித்தார்.

கடன்களை மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்களால், பெண்கள் உளஉடல்ரீதியான வன்முறைகளை சந்திக்க நேர்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 நாள்கள் கொழும்பில் தங்கியிருந்து அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தின் நிறைவில் இன்று (11) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.

“நுண்கடன் நிறுவனங்கள், தாம் வழங்கும் கடன்களுக்கு 220 வீத வட்டியை அறவிடுகின்றன. கடன்பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்பதற்கு முயன்ற சம்பவங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன்.

சிலர் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வேறு சிலர் ஒப்பந்தத்தை மீறியதற்காக வன்முறைகளை சந்தித்துள்ளனர் அல்லது பெற்ற கடனை மீள திருப்பி செலுத்துவதற்காக பல மணிநேரம் வேலை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணமாகவுள்ளது.

நுண்கடன்களைப் பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுமுள்ளன.

எனினும் இலங்கையில் நுண்கடன்களை வழங்கியவர்களின் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தின் தீவிர தன்மையை கருத்தில்கொள்ளும்போது அரசு இதில் தலையிடவேண்டியது அவசியம்.

இலங்கையின் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலவும் பகுதிகளை நுண்கடன் நிறுவனங்கள் இலக்குவைப்பதை நான் அறிந்துள்ளேன்” என்று ஐ.நா. நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com