Tuesday, August 21, 2018

அல்கொய்தாவின் ரமஸி யூசுப் போன்ற கொலை வெறியனே ஒற்றைக்கண் சிவராசன். ஸ்ரேன்லி ராஜன்.

அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப். முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க தனி தீவில் அடைத்திருக்கின்றது, மகா ஆபத்தானவன் அவன்.

அவனை போலவே புலிகளில் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சிவராசன், ஒற்றைகண் சிவராசன், அவன் இயற்பெயர் பாக்கியநாதன், புலிகளுக்கு யாரையாவது கொல்லவேண்டும் என்ற கொள்கைதான் மாறாதே தவிர பெயர் மாறிகொண்டே இருக்கும்.

ஈழத்தில் புலிகளுக்க்காக பல கொலைகளை செய்தவனை பத்மநாபா கொலைக்காக தமிழகம் அனுப்பினார் பிரபாகரன்.

இங்கு வந்தவன் தன் சக புலியினை மாணவனாய் நடிக்க வைத்து பத்மநாபாவிடம் உதவி கோர செய்து அப்படியே அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்னை சூளமேட்டில் பத்மநாபா மற்றும் 13 பேரை கொடூரமாக கொன்றான். அன்றிரவு அவனை தமிழக போலிஸ் பிடித்தது, ஆயினும் மேலிட உத்தரவுபடி விடுவிக்கபட்டான். மேலிடம் என்றால் அன்று திமுக ஆட்சி, 1989ல் கலைஞர் வந்து அமைதிபடை எல்லாம் திரும்பெற்று அந்த படையினை கூட வரவேற்கமாட்டேன் என தேசதுரோகம் செய்த காலங்கள்.

ஆம் ஒரு முதல்வராக இருந்து கலைஞர் அப்படி செய்தது நிச்சயம் தேசதுரோகம் சந்தேகமில்லை, ஆயினும் விபிசிங் அரசு கலைஞரை டிஸ்மிஸ் செய்யவில்லை. முதல்வரே தங்களுக்கு சாதகம் எனும் நிலையில் புலிகள் பேயாட்டம் ஆடினர், சிவராசன் பத்மப்நாபா கொலைக்கு பின்னும் இங்கு சில கொலைகளை செய்தான், தமிழக காவல்துறையினரையே தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வந்தன‌. எல்லாம் அன்று வைகோ கலைஞருடன் இருந்த தைரியம், முரசொலிமாறன் புலிகளுக்கு காட்டிய அனுதாபம். இந்த தைரியத்தில் தமிழகத்தை ஈழமாகவே நினைத்து சுற்றிவந்தான் சிவராசன், அவனுக்கு இங்கு எந்த தடையுமில்லை.

இந்நிலையில்தான் ராஜிவினை கொல்லும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கபட்டது, தீக்குழந்தை என பெயரிடபட்ட தனுவும் மற்றவர்களும் இங்கு வந்தனர். வழக்கபடி படகில் வேதாரண்யம் வந்த சிவராசன் கடத்தல் தங்கத்தை காசாக்கி சதி வேலையினை தொடங்கினான். இங்கு அவனின் கும்பலில்தான் முருகன் இருந்தான், பேரரிவாளன் இருந்தான் , ஹரிபாபு இருந்தான், ஸ்டூடியோ சபாரத்தினம் இருந்தார். இன்னும் பலர் இருந்தனர்.

சிவராசனின் திட்டம் முதலில் நளினிக்கு தெரியவில்லை, ஆனால் பேரரிவாளன் போன்றவருக்கு தெரிந்தது. காரணம் பேரரிவாளன் இலங்கை சென்று புலிகளை சந்தித்தவர். காரியம் முடிந்ததும் இலங்கைக்கு செல்ல வேண்டியவர் பட்டியலில் பேரரிவாளன் ஹரிபாபு பெயர் எல்லாம் இருந்தது.

பத்மநாபா போல் அல்லாமல் ராஜிவ் கொலை மிக சிரமாக இருந்தது, கூடவே கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்ட நேரம் என்பதால் எங்காவது பேசினால் ஈழதமிழ் காட்டிகொடுத்துவிடும் என்பதாலும் நளினி , பேரரிவாளன் போன்றவர்களை பயன்படுத்திகொண்டான் சிவராசன்.

இது போக தமிழக காங்கிரஸிலும் அவன் கரங்கள் ஊடுருவின, ராஜிவினை புலிகள் கொல்வார்கள் என கொஞ்சமும் நம்பாத காங்கிரசாரில் சிலர் அவன் புலிகளால் பாதிகபட்ட தமிழன் என்றே நம்பினர். அவனும் அப்படியே நடித்து பலரை ஏமாற்றினான். அப்படியே விபி சிங் நடத்திய கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்து கொண்டான்.

பின் ராஜிவ் கொலையினை மிக நுட்பமாக திட்டமிட்டு அதை நடத்தியும் முடித்தான். அதுவும் சென்னையில் ராஜிவ் தப்பினால் கிருஷ்ணகிரி அங்கும் தப்பினால் டெல்லியில் கொல்ல இன்னொரு பெண் ஆதிரை என ஏற்பாடு செய்திருந்தான். ராஜிவ் திருப்பெரும் புதூரிலே சிக்கினார்.

கென்னடி கொலைபோல மர்மமான கொலை என்றாலும் சிவராசன் எதில் சிக்கினான் என்றால் இரு விஷயங்கள். முதலில் பத்மநாபா கொலை போல அல்லாமல் இங்கு ராஜிவ் கொலைக்கு உள்ளூர் ஆட்களை பயன்படுத்தியது. இரண்டாவது அந்த ஹரிபாபுவின் கேமரா.

இரண்டாவது விஷயம்தான் மகா கொடுமை, முதலில் குண்டு வைக்கும் இடம் தொடர்பாக சில போட்டோங்களை அனுப்ப அவன் ஹரிபாபுவினை கூட்டிகொண்டு அலைந்தான், ஆனால் கடைசி நொடியிலும் ஏன் என்றால் அங்குதான் புலிகளின் கோழைத்தனம் தெரிந்தது.

பிரபாகரனுக்கு விசித்திரமான மனநோய் இருந்தது, தன் எதிர்களின் கடைசி நொடியினை அவர் பார்த்து திருப்தி அடைவது அவரின் ஸ்டைல் அப்படித்தான் இந்த படங்களும் எடுக்கபட்டன‌.

குண்டுவெடிப்பின் வீரியம் சிவராசனுக்கு தெரிந்தும் அவனை அனுமதித்தான் , ஆனால் ஆர்வ கோளாறில் உட்சென்று உயிர்விட்டான் ஹரிபாபு. அந்த கலவரத்தில் கேமரா பற்றி மறந்துவிட்டான் சிவராசன்.

நீதி அந்த கேமரா வடிவில் துப்பு துலக்க உதவியது. அதுவரை புலிகள் கண்ணீர் வடித்தனர், கிட்டுவோ லண்டனில் இருந்து முடிந்தால் கொலைகாரர்களை இந்தியா கண்டுபிடிக்கட்டும் என எகத்தாளம் செய்துகொண்டிருந்தான்.

இந்தியா தீவிரமாக துப்பு துலக்கியது, பேரரிவாளன் நளியின் அண்ணன் அச்சகத்தில் இருந்த புலிகளின் குகையில் எனும் வீடியோக்கள் எல்லாம் சிக்கின‌. அதில் சிவராசனின் வீடியோ, வைகோ ஈழம் சென்ற வீடியோ எல்லாம் இருந்தது, விஷயம் உறுதிபடுத்தபட்டபின் அவனை இந்திய விசாரணை குழு தீவிரமாக தேடியது.

புலிகளின் பெயர் அடிபட ஆரம்பித்தவுடன் அவனை காப்பாற்றும் முயற்சியினை பிரபாகரன் கைவிட்டார். இந்திய குழு இலங்கைக்கு செல்லும் வயர்லெஸ் தொடர்புகளை ஒட்டுகேட்டபொழுது சிவராசனின் படுபயங்கர திட்டம் வெளிதெரிந்தது.

ஆம், பூந்தமல்லியில் இருந்த ராஜிவ் கொலை விசாரணை அலுவலகத்தை தாக்கி கார்த்திகேயனை கொல்ல அவன் திட்டமிட்டது எல்லாம் தெரிந்தது. எவ்வளவு தைரியம்? யார் கொடுத்த தைரியம் என்றால் சாட்சாத் திமுகவும், திகவும் கொடுத்த தைரியம். தமிழகத்தில் புலிவேட்டை தொடங்கியது, 30க்கும் மேற்பட்ட புலிகள் சயனைடு குடித்தனர், திமுக உறுப்பினர் எல்லாம் கைதாயினர், திமுக கனத்த அமைதி.

இனி தமிழகம் தன்னை காப்பாற்றாது என உணர்ந்த சிவராசன் பெங்களூர் தப்பினான், அதுவும் டாங்கர் லாரியில் அவனும் சுபாவும் தப்பினர். இங்கு பேரரிவாளன், நளினி உட்பட பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமான சிவராசன் அங்கும் ஒரு குடும்பத்தை கெடுத்தான். அவன் பெயர் ரங்கநாத். ரங்கநாத் ஐரோப்பாவில் வசித்தபொழுது எப்படியோ புலிகளிடம் சிக்கிகொண்டார், அந்த தொடர்பில் அவரை பிடித்த சிவராசன் வலுகட்டாயமாக பயன்படுத்தினான்.

இந்தியா முழுக்க அவனை காவல்துறை தேடிகொண்டிருக்க அவனோ பெங்களூர் அருகே புறநகரில் பதுங்கி இருந்தான், துப்பு கிடைத்த காவல்துறை வளைத்தது. கமாண்டோபடை வரும் வரை ரகசிய காவல் இருந்தார்கள், இந்திய வழக்கபடி கமாண்டோ படை தாமதமாகவே வந்தது. முதலில் அவனுக்கு சந்தேகம் வராதவாறுதான் வளைத்தார்கள் ஆனால் அங்கு வந்த டெம்போ ஒன்று பழுதானவுடன் சந்தேகபட்டு முதலில் தாக்கியது சிவராசன் குழு. சண்டை வெடித்தது, கமாண்டோ களமிறக்க சில தாமதாமாக ஆவணங்களை எல்லாம் எரித்துவிட்டு தற்கொலை செய்தான் சிவராசன்.

ஆம் இதே ஆகஸ்டு 20, அன்று ராஜிவ் காந்தியின் பிறந்த நாள். ராஜிவ் கொல்லபட்டு 3 மாதத்திற்குள் மிக சரியாக ராஜிவ் பிறந்தநாள் அன்று சிவராசனின் கதை முடிக்கபட்டது.

ஈழபுலிகளில் மிக மிக கொடூரமானவன் சிவராசன், யாரும் செய்ய துணியாத கொடூரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்தவன். புலிகளின் பயிற்சி அப்படி இருந்திருக்கின்றது. அவனை கொண்டாடிய புலி இயக்கம் அவனாலே அழிந்தது, அவனை ஆதரித்த பாவத்திற்காக நளினி குடும்பம் அழிந்தது. பேரரிவாளனின் தாயார் இன்றுவரை கண்ணீர் விடுகின்றார். தமிழகத்தில் புலி இயக்கமே அவனின் செய்ய கூடாத செயலால் கருவருக்கபட்டது. பெங்களூர் ரங்கநாத் குடும்பம் அவனால் பிரிந்தது.

புலிகளுக்கு கொல்ல , அழிக்கவே தெரியும் யாரையும் வாழவைக்க தெரியாது என்பதற்கு சிவராசன் பிரபாகரனை விட பெரும் உதாரணம். இவ்வளவு நடந்தும் பேரரிவாளன் தாயாரோ, நளியோ யாராவது சிவராசனை கண்டித்தோ அவனை அனுப்பிய பிரபாகரனை கண்டித்தோ ஒருவார்த்தை பேசியிருப்பார்களா?

ஏன் பேசவில்லை? ஒன்று அவர்களிடமிருந்து பெற வேண்டியதை பெற்று பேசாமல் இருக்க வேண்டும் அல்லது நாங்கள் செய்தது சரி சட்டத்தின் ஓட்டையில் எங்களை விடுங்கள் என மறைமுகமாக சொல்லவேண்டும்.

அவர்கள் இந்த இரண்டையுமே செய்திருக்கின்றார்கள் பின் எப்படி அவர்களை விடுவிப்பார்கள்.

சிவராசன் சந்தித்த திமுகவினர் ஏராளம் உண்டு அதில் முக்கியமானவர் வைகோ . அவரை போல இன்னும் நிறையபேர் உண்டு. சிவராசனின் கூட்டாளியாக கருதபட்ட, யார் மூலம் சிவராசன் தப்பி செல்ல முயன்றானோ அந்த சந்திராசாமியினை யாரும் தொடவில்லை. சந்திரசாமி பெரும் ஆயுத வியாபாரி, அந்த பெல்ட் வெடிகுண்டு இப்படி வந்திருக்கலாம் என்பது யூகம்.

சுப்பிரமணியன் சாமி என்பவரும் சிக்கவில்லை, ராஜிவிற்கு கருப்பு பூனை படையினை வாபஸ் வாங்கியதே அவர்தான். இந்த புலி, வைகோ, சு.சாமி, சந்திரசாமி எல்லோருக்கும் இடையேயான ஒற்றுமை அந்நிய நாட்டு கைகூலிகள். இதில் சிவராசன் செத்தான் மற்றவர்களை ஏதோ ஒரு சக்தி காப்பாற்றிற்று. அவர்களை எல்லாம் வழக்கிலிருந்து ஒரு சக்தி காப்பாறிற்று, அதே வைகோ பின் மன்மோகன் அரசில் எல்லாம் இருந்தார். யாருக்கும் வெட்கமில்லை என்பது இதுதான், அரசியல்வாதிகள் அப்படித்தான்.

சிவராசனின் சாகசம் பற்றி அங்கிள் சைமனுக்கு இன்னும் தெரியாது போல, இல்லாவிட்டால் சிவராசனுக்கு கண்ணாடி வாங்கி கொடுத்ததே நான் என கிளம்பிவிடுவார். இங்கு நடமாடவிட்ட பாவத்திற்காக பலரை கொன்ற , பல குடுமபங்களை சீரழித்த அந்த சிவராசனை போன்ற ஈழ ஈனதமிழர்கள் இனி பிறக்காமலே போகட்டும்.

கொடுமதியாளர்களாலும் கொலைகாரர்களாலும் நிரம்பிய புலிப்படை, அதில் அரக்கனான சிவராசனை வளர்த்துவிட்டு அவனாலே அழிந்தும் போனது. 2009 சம்பவங்களுக்காக கலைஞரை திட்டமுடியாது. ஆனால் 1990 சம்பவங்களுக்காக அவரை திட்டாமல் இருக்கவும் முடியாது. ஆம் பத்மநாபா கொலைவழக்கிலே சிவராசனை பிடித்து சாத்தி இருந்தால், தா கிருட்டினன் கொலைவழக்கில் காட்டிய வேகத்தை பத்மநாபா கொலைவழக்கிலே காட்டி இருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது. அந்த பழியில் இருந்து தப்பிய கலைஞர், செய்த பாவத்திற்கு தப்பிய கலைஞர் 2009ல் செய்யாத பாவத்திற்கு மாட்டிகொண்டார்.

சிவராசன் என்பவன் ராஜிவ் கொலையில் சம்பந்தபடாமல் இருந்தாலோ இல்லை கொல்லபடாமல் தப்பி இருந்தாலோ தமிழகம் அவனால் நாசக்காடு ஆகியிருக்கும். அப்படி ஒரு வெறிபிடித்த மிருகம் அவன்.

தமிழகம் சிந்தவேண்டிய‌ முழு இரத்தபழியினையும் தாங்கி, தன்னை கொடுத்து தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கின்றார் ராஜிவ் காந்தி

இவ்வாக்கமானது ஸ்ரேன்லி ராஜன் என்பவரின் முகநூலிலிருந்து பெறப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com