Friday, June 15, 2018

ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும் - வை எல் எஸ் ஹமீட்

பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு மீண்டும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எப்போது பெருநாள் கொண்டாட வேண்டும்; எனத்தீர்மானிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு எந்த அதிகாரமும் இருக்கமுடியாது. இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிவாயில்களில் அதுவும் ஒன்று, அவ்வளவுதான்.

பிறைகண்டு நோன்பு பிடிக்கவும் பிறைகண்டு நோன்பை விடவும்தான் இஸ்லாம் கூறியிருக்கின்றது. இதற்குள் புதிதாக வானசாஷ்திரத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் வானசாஷ்திர மத்ஹபை உருவாக்கி முஸ்லிம்களை குழப்பிக்கொண்டிருக்கின்றது.

மறுபுறம் உலமாசபை பிறைகண்டு பிடிப்பதையும் பிறைகண்டு விடுவதையுமே இதுவரை பேணிவருகின்றது சிலநேரங்களில் சில சறுக்கல்கள் இருந்தபோதிலும்கூட.

“வியாழக்கிழமை பிறைகண்டால் வெள்ளிக்கிழமை பெருநாளும் பின் ஒரு நோன்பை கழா செய்யவேண்டும்”; என்ற மார்க்க சட்டத்தை உலமாசபைத் தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி அவர்கள் தெளிவாக கூறியிருந்தார்.

இந்நிலையில் வியாழன் பிறை தென்பட்டாலும் வெள்ளி பெருநாள் இல்லை; என்ற நிலைப்பாட்டில் “வெள்ளிக்கிழமைதான் பிறைக்குழு கூடும்;” என்ற தீர்மானம் ஜம்மிய்யத்துல் உலமாவுடன் இணைந்து எடுக்கப்பட்டதாக கொழும்புப் பெரிய பள்ளிவாசலினால் அறிவிக்கப்படுகிறது.

பிறைகண்டால் பெருநாளாகும். பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பது ஹறாமாகும். இந்நிலையில் இந்த முடிவு ஏன்? அவ்வாறாயின் மார்க்கச்சட்டம் தெரியாமலா உலமா சபைத்தலைவர் ஏற்கனவே அந்த அறிவிப்பைச் செய்தார்? அல்லது அவர் ஏற்கனவே செய்த அறிவுப்பு சரியென்றால் இப்பொழுது இந்த பிழையான தீர்மானத்திற்கு உலமாசபை இணங்கியதேன்?

பிறைகண்டு நோன்பை விடத்தான் இஸ்லாம் சொல்லியிருக்கின்றதே தவிர கொழும்புப் பெரிய பள்ளிவாசலோ அல்லது உலமாசபையோ எப்பொழுது பெருநாள் என்று அறிவிக்கின்றதோ அப்பொழுது பெருநாள் கொண்டாடுங்கள்; என்று இஸ்லாம் சொல்லவில்லை

இருந்தாலும் பிறைகாணப்பட்டதை உறுதிப்படுத்தி முழு நாட்டிற்கும் அறிவிப்பதற்கும் ஓர் ஏற்பாடு வேண்டும்; என்பதற்காக நாட்டின் உயர் மார்க்க ஸ்தாபனம் என்ற அடிப்படையில் உலமாசபையை மக்கள் ஏற்றுக்கொள்ளலாம். கொழும்புப் பெரிய பள்ளிவாசல் இதற்குள் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை.

எது எவ்வாறான போதிலும் இந்தத் தீர்மானத்திற்கும் ஏற்கனவே உலமாசபைத் தலைவர் செய்த அறிவிப்பிற்குமுரிய நியாத்தை, மார்க்க விளக்கத்தை உலமாசபை மக்களுக்கு அவசரமாக தெரிவிக்க வேண்டும். வீண் குழப்பங்களுக்கு இடமளிக்க வேண்டாம்.

இல்லையெனில் முஸ்லிம் விவகாரத்திணைக்களம் உடனடியாக தலையிட்டு ஒரு தகுதியான குழுவை நியமித்து பிறை காணப்பட்டதை உரிய சாட்சிகளுடன் மார்க்கச் சட்டப்படி அறிவிப்பதை உறுதிப்படுத்தி மக்களுக்கு தெரிவிக்கும் பணியைச் செய்யவேண்டும்.

இங்கு செய்யவேண்டியதெல்லாம் பிறை காணப்பட்டதை உறுதிப்படுத்துகின்ற பணிமாத்திரமே தவிர எப்பொழுது பிறைபார்க்க வேண்டும்; எப்பொழுது பெருநாள் கொண்டாடவேண்டும்; என்று உத்தரவுபோடுவதல்ல. ஏற்கனவே அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் ( ஸல்) அவர்களும் எப்பொழுது பெருநாள் கொண்டாடவேண்டும்; என்று உத்தரவு போட்டுவிட்டார்கள்.

இவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பிறைகண்ட பின்பும் நோன்பு பிடித்து ஹறாத்தைச் செய்யமுடியாது. எனவே, முஸ்லிம் விவகார அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நாம் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

( குறிப்பு: இது ஓர் நன்னோக்குடன் எழுதப்பட்டிருக்கின்றது. அல்லாஹ்வுக்காக, யாரையும் தாக்கும் விதமாகவோ அல்லது மனதைப் புண்படுத்தும் விதமாக இந்த புனித ரமளானில் யாரும் பின்னூட்டங்களை இட்டுவிடவேண்டாம். அல்லாஹ்வைப் பயந்துகொள்வோம்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com