Friday, February 2, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 2) வ.அழகலிங்கம்.

எப்படி உயிர்வாழ்வுக்குப் பிராணவாயு அவசியமோ அதேபோல உயிர்வாழ்வுக்கு அரசியலும் அத்தியாவசியமாகும். அசுத்தமான காற்றைச் சுவாசித்தால் எப்படி நோய்வாய்ப் படுகிறோமோ அப்படியே பிழையான அரசியலைக் கிரகிக்க நிர்பந்திக்கப்பட்டால் வாழ்வே நரகமாகி விடும். எப்படி நச்சு உணவை உட்கொண்டால் உடல் நலம் கெட்டுவிடுமோ அதே மாதிரியே நச்சு அரசியலை உட்கொண்டால் வாழ்வு கெட்டுவிடும். அரசியலை விட்டு மக்கள் ஓடலாம். ஆனால் அரசியல் மக்களை விட்டு ஓடாது. எப்படி ஊழ்வினையை விட்டு மக்கள் தப்ப முடியாதோ அதேபோல் அரசியலை விட்டும் மக்கள் தப்ப முடியாது.

'மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லெனத்
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு,,

மழைவளம் மாறுபடுமானால் மிகப் பெரிய அச்சம், யாதானும் ஒரு காரணத்தால் உயிர்கள் வருத்தமுறின் அதனினும் பெரிய அச்சமுண்டாகும், குடிகளை அறத்துடன் காத்து வரும் செயலை மேற்கொள்ளும்போது, தட்டித் தவறிக் கொடுங்கோன்மை ஆகிவிடுமோ என்று அஞ்சியும், மக்களைக் காத்துவரும் நல்ல மன்னர் குடியிலே பிறத்தல் என்பது என்றும் துன்பமேயல்லாது போற்றத்தக்கதன்று, என்று மனம் உளைந்து, பாண்டியனுக்கு உற்ற துன்பத்தினைத் தெளிவாக அறிந்துவந்து உரைத்த நன்நூற் புலவரான சாத்தனாருக்கு, மிக வருத்தத்தோடு கூறினான் சேரன் செங்குட்டுவன்.

இதைப்போலத் தன் பொறுப்பை உணர்ந்ததுபோல் எத்துணைப் பேர் உணரமுடியும்? மன்னர்கள் தம் கடமைகளை உணராமல் உரிமையை நிலைநட்ட முயன்ற பொழுதுதான் 'குடியாட்சி என்ற வித்து இந்த மானிலத்தில் ஊன்றப் பெற்றது. பண்டைய அரசர்கள் தம் பொறுப்புகளையும் கடமைகளையும் பெரிதும் உணர்ந்திருந்தமையால் புறநானூற்றுப் புலவர் மோசி கீரனார், நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்-186 என்று பாடினார். மன்னன்தான் நாட்டின் உயிர் என்று அக்காலக் கொள்கையை வெளியிட்டார். காலப் போக்கில் மக்கள் குரலுக்கு மதிப்பு ஏற்பட்டது.

பாடல் பின்னணி: இவ்வுலகிற்கு மன்னன் இன்றியமையாதவன் என்பதை அறிந்து நடப்பது மன்னனின் கடமை என்று இப்பாடலில் புலவர் மோசிகீரனார் வலியுறுத்துகின்றார்.

'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.||

பொருளுரை: நெல்லும் உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை. இந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது. அதனால், தானே உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை.

புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும். மக்களை உடம்பாகவும் காட்டப் பெற்றது. காரணம், இக்கருத்து அக்காலத்தில் நிலவி வந்ததால், கம்பன் காலத்தில் இக்கருத்து மெல்ல மெல்ல மாறி வந்து மக்கள் உயிராகவும் மன்னன் உடம்பாகவும் மாற்றப்பெற்றிருப்பதால் மக்களாட்சிக்கு வித்திட்டது போன்ற ஒரு புதுக் கருத்தைக் காண முடிகின்றது. தசரதச் சக்கரவர்த்தி நாட்டைப் பாதுகாத்தல் சிறப்பைப்பற்றிக் கூற வந்த கம்ப நாடன்,

'வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.,,

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் மக்கள் குரலுக்கு மதிப்பு இருந்ததை, வையம் மன்னுயி ராக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னவன்:
வயிரம் பதித்த அணிகலன்களை அணிந்த, ஆண் சிங்கம் போன்ற வலிமையுடைய தசரதன் மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதிக் காப்பான். எனவே குற்றம் அற்ற அவனது நாட்டிலே உள்ள நடமாடும் உயிர்கள், நடமாடாமல் நிலைத்து நிற்கும் மரம், செடி போன்ற உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒன்றாகத் தங்கியிருக்கும் ஓர் உடம்பு போல இருந்தான்.

வையம் மன் உயிர் ஆக அம் மண் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?

தன் நாட்டு மக்களே தனக்கு நிலைபெற்ற உயிராக, அம் மக்களை நல்வாழ்வு பெறும்படி அவற்றைத் தாங்கும் உடம்பைப் போன்ற மன்னனுக்கு, அறநெறி தவறாமல், அருளிலும் சத்தியத்திலும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நின்ற பின்பு, வேள்வி செய்தலும் வேண்டுமோ? வேண்டாம். அப்படியான மன்னன் முத்தியடைவது திண்ணம். எவன் தன் தொழிலைச் சிரத்தையோடு செய்கிறானோ அவன் கட்டாயம் முத்தியடைவான். செய்யும் தொழிலே தெய்வம்.

இம்மாதிரியான மன்னர் குடிப்பிறப்பு மிகவும் துன்பமானது. அரச பதவி என்பது, முட்களால் சூட்டப்பட்ட முடி என்று சொல்லுகிறான்.

இதையெல்லாம் கேட்பது ஒரு கனவாக இருக்கிறதா? இப்படி ஒரு அரசா? இப்படி ஒரு காலம் இருந்ததா? மன்னர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா? இன்று போல குடியாட்சியில் அல்ல, ஜனநாயகக் காலத்தில் அல்ல, மன்னர் ஆட்சியில். அப்படி அறம் சார்ந்த அரசோச்சியவர்கள் தமிழ் மன்னர்கள்.

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரீகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

சந்திரபாபு நாயுடு ஒருதடவை சொன்னார் 'நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்' தலைமைக் கூலிக்காறன் என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம்! அவர் ஆட்சியில் பெங்களுர் உலகின் கணணி நகரமாகியது.

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே 'நான் அரசன் என்ற தொழிலாளி' என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைக் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்! வரலாறற்ற தேசங்கள் என்ற அரசியற் கலைச் சொல்லை பிடெறிக் ஏங்கல்ஸ் கையாண்டுள்ளார். வரலாறு என்பது மாபெரும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறே என்று கார்லைல் என்ற ஆங்கில அறிஞர் சொன்னார்.

மாமனிதக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டின் கருத்தாகும், இவற்றின் அடிப்படையில், மாமனிதர்களின் அல்லது ஹீரோக்களின் தாக்கத்தால் வரலாற்றை பெரும்பாலும் விளக்க முடியும்;. அவர்களின் செல்வாக்கு, உளவுத்துறை, பரஞானம் அல்லது அரசியல் திறமை ஆகியவற்றின் காரணமாக, ஒரு சக்திவாய்ந்த வரலாற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தித் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வரலாற்றைப் படைப்பார்கள். இந்த கோட்பாடு 1840 களில் ஸ்கொட்டிஷ் எழுத்தாளர் தாமஸ் கார்லைல் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் 1860 ஆம் ஆண்டில் ஹெர்பெர்ட் ஸ்பென்சர் இந்த வாதத்தை எதிர்த்தார். ஸ்பென்சர் சொன்னார்: 'இத்தகைய பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களின் படைப்புக்களே. அவர்கள் வாழ்த காலத்திற்கு முன்பு இருந்த சமூக நிலைமைகள் இல்லாவிடில் அவர்களது நடவடிக்கைகள் இயலாது.,, ஒரு பெரிய மனிதனின் தோற்றத்தை அவரைத் தோற்றுவித்த இனம், மற்றும் அந்த இனம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலைமைகள், அவரை உருவாக்கிய சமூகத்தின் நீண்ட சிக்கலான செல்வாக்கின் தாக்கத்தை சார்ந்துள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் .... அவர் சமுதாயத்தை உருவாக்க முன், அவரது சமுதாயம் அவரை உருவாக்கியது.,,- ஹெர்பர்ட் ஸ்பென்சர், சமூகவியல் பற்றிய ஆய்வு. பிடெறிக் ஏங்கல்ஸ் எழுதிய டூறிங்குக்கு மறுப்பு என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் 'அரசியல் என்பது ஒட்டுமொத்த மனிதர்களின் சிந்தனையின் கூட்டுத்தொகையின் சராசரிப்; பாதையிலேயே நடைபோடும். எந்த மாமனிதனின் தாக்கமும் பங்களிப்பும் வரலாற்றைப் பொறுத்த வரை மிக மிக அற்பமும் விலக்கற்பாலதுமாகும். வரலாற்றில் ஏற்பட்ட பெரிய பெரிய சம்பவங்களுக்கிடையே நிலவிய இடைத் தொடர்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தெரிந்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள், என்கிறார். எது எப்படி இருந்தாலென்ன, நாட்டின் தகுதிக்கேற்ற அரசே அமையும் என்பது வெளிப்படை.
பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற ஐயத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்!
சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற ஐயம் தோன்றாமலில்லை!

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமொடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
-பாரதிதாசன்

புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்
– பாரதிதாசன்

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்றான் பாரதி. என்ன மிடுக்கு. இந்தச் சரியைப் பற்றிப் பாராதிக்கு ஒரு சின்ன ஊசலாட்டமும் இருக்கவில்லை.

'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.,,-(1062)

மனிதர்கள் பிச்சை எடுத்துத்தான் வாழுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பாயானால் நீ கடவுள் அல்லவே அல்ல. எவ்வளவு கெதியாக நீ சாக முடியுமோ அவ்ளவு கெதியாகச் செத்துப் போ! இதுதான் தமிழர் காட்டிய நன்நெறி.

தசரதன் வேண்டுகோளை ஏற்று, இராமனின் மனை புகுந்த வசிட்டன், முடி சூடுவதற்கு முன் இராமனுக்கு சில புத்தி மதிகளை கூறுகிறார்.

உயர் அறங்களை அவனுக்கு ஓதத் தலைப்படுகிறார். அங்ஙனம் அவன் ஓதும் உயர் அறங்களில், இன்றுவரை கற்றோர் உலகம், உச்சிமேல் வைத்து உவக்கும் செய்தியாய்க் கொள்வது,
'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது,, எனும் கருத்தினையேயாம்.

நட்டார், பகைவர், நடுநிலையார் எனும் முத்திறத்தாரோடும், பகை கொள்தலை ஒருவன் தவிர்ப்பானானால், புகழ் ஒடுங்காது நிற்கப் போர் ஒடுங்கும் என, கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க, வசிட்டன் வழியுரைக்கிறான் பாரதிதாசன்.

போர் ஒடுங்கிய புத்துலகைக் காணும் வழியினை, வசிட்டன் வாயால் வழிமொழிகிறான் கம்பன்.
'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்கல் செல்லாது அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ.

-அயோத்தய காண்டம், மந்தரை சூட்சிப் படலம் பாடல் 106.(குறிப்பு:- இந்தப் பாடலே தமிழ் இலக்கியத்தில் அதிக தடவை மேற்கோள் இடப்பட்ட பாடல்.)

ஓர் அரசன் எவரிடமும் பகை கொள்ளாதவன் என்னும் நிலை உண்டான பின்பு அவன் நாட்டில் போர் இல்லாமல் போகும். ஆனால் அவனுடைய புகழ் குறையாது. அவனது படையும் அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது ..'அத்தகைய நன்மை உண்டான பின்பு, அந்த அரசன் வேரோடு அழியும் நிலை உண்டாகுமோ ? உண்டாகாது.,,

எல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை 'பலத்தால் வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது கேடு செய்வான். அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல்
செய்யான்' என்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப்பா ர்க்கலாம்.

'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' என்னும் (கொன்றை வேந்தன் கருத்தையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். அரசியல் என்பது இரத்தம் சிந்தாப் போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். உலகம் முழுவதும் முன்பு நடந்தேறிய பேர்கள்கள் பற்றியும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற போர்கள் பற்றியும் ஸ்தூலமான அறிவில்லாத அரசியல்வாதிகள் மக்களை வழிநாடத்துவார்களே ஆனால் அழிவொளிய ஆக்கம் வரப் போவதில்லை. அரசியல்வாதிகளை அளந்தறியும் உரைகல்தான் அவர்கள் ஒவ்வொரு போரின்போதும் எடுக்கும் நிலைப்பாடுகள். ஏனெனில் நவீன அரசியல் என்பது தொண்ணூறுவீதமும் சர்வதேச இரகசிய இராஜதந்திரமாகும். அரசியல்வாதிகள் மேடைகளிலே முணுமுணுப்பதும் புலம்புவதும் மக்களின் கண்களிலே மண்ணைத்தூவும் கைங்கரியங்களாகும். உப்புச் சப்பற்ற உலுத்தர்களின் உளறல்கள்.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும் என, வசிட்டர் உரைத்த அரசநீதியில், தன் அனுபவப் பதிவேற்று, மாற்றம் செய்துரைக்கிறான் இராமன்.

முன் சொன்ன போர் பற்றிய தனது கருத்தினை, சுக்கிரீவனுக்கான அறிவுரையில், அவன் தெளிவுறப் பதிவு செய்கிறான்.

'நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும், அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.,,

குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில்எ வரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்பது கருத்தாம்.

'குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்,
வடுவன்று வேந்தன் தொழில்',
'கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்ட தனொடு நேர்',
'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்,
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து';
'கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்' (குறள் 549, 550, 561, 567) என்னும் கருத்துக்கள் இங்கு காணத்தக்கன.

மேற்பாடலில், வசிட்டனின் கருத்தினை உள்வாங்கி, அனுபவத்தால் இராமன் செய்த மாற்றங்கள், தெளிவுற வெளிப்படுகின்றன. இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில், அன்பினால் உலகைக் காக்கும் அவசியத்தை உரைக்கும் இராமன், அதே நேரத்தில் அவ்வன்பினை உணர்வார்க்கே, சமூகம் பற்றிய உயர்ந்த உணர்மையடைந்தவர்க்கே, அந்நடைமுறை சரியாம் என்பதையும் தெளிவு பட உரைக்கின்றான்.

யாரொடும் என, வசிட்டன் வகுத்த வரம்பினைச் சற்று மாற்றி, தாங்குதி தாங்குவாரை என, இராமன் புதிய வரைவு செய்கிறான்.

அது மட்டுமன்றி தீமை வலிந்து தாக்கவரின், அற வரம்பு சிதையாவண்ணம், அதனைத் தாக்குதலும் தர்மமே என அழுத்தி உரைக்கிறான். தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.

அற வரம்பினைக் காக்கச் செய்யும் போரில், காட்ட வேண்டிய வலிமையையும், இராமன் குறிக்கத் தவறினானில்லை. சுடுதியால் எனும் இராமனின் உத்தரவில், அக்கருத்தை நாம் உணருகிறோம்.

அரசன் நாட்டின் காவலனே அன்றித் தலைவன் அல்லன் என்பதைக் கம்பன் வற்புறுத்துகிறான்.

தேவரும் வெஃகற்கு ஒத்த
செயிர்அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,
அன்னது கருதிக் காண்டி.(4124)

நாட்டின் செல்வம் குடிமக்களுக்கே உரியது என்ற புரட்சிக் கருத்தையும் கம்பன் எடுத்துக் கூறுகின்றான். நாட்டின் செல்வத்தைக்காக்கும் காவலாளியே அரசன் ஒளிய அதன் உரிமைக்காரனல்ல.

'கலம் சுரக்கும் நிதியம், கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறைவளம், நல்மணி
பிலம் சுரக்கும், பெறுதற்கு அரிய நம்
குலம் சுரக்கும் ஒழுக்கும் குடிக்கு எலாம்.(69)

கப்பல்களும், நிலமும், சுரங்கங்களும் தரும் செல்வம் எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் உரியவை என்பதையே கம்பன் இப்பாடல் மூலம் கூறுகின்றான். எந்த மக்கள் விரோதக் கொள்கையையும் கம்பன் ஏற்றவன் அல்லன். அரசன் எவ்வகையிலும் பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்பக் கூடாது. மேவின வெஃகல் இன்மை(4125) என்று சொல்வதன் மூலம் அச்செல்வம் மக்கள் தங்கள் உரிமையால் பெற்றது என்பதையும் உணர்த்துகிறான்.

அரசன் என்று நிருவாக வசதிக்காக ஆட்சித்தலைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கம்பன் விரும்பினாலும் இறையாண்மை முழுவதையும் அவனிடம் ஒப்படைக்க வில்லை. அவனுடைய அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com