Monday, May 8, 2017

சிறிசபாரட்ணத்திற்கு அஞ்சலி செலுத்த கோண்டாவில்லுக்குச் சென்ற ஜனா கொக்கட்டிச்சோலையிலும் செய்வாரா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதை மயானத்தை நோக்கி திரும்பிய முக்கியமான சந்தி புலிகள் ரெலோ இயக்கத்தினரை தடை செய்து அவ்வியக்கத்தினரை அழிக்க முடிவு செய்ததாகும். புலிகளியக்கத்தின் ஏகபிரதிநிதித்துவ மோகத்தால் ரெலோவின் தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இம்மாதத்துடன் 31 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ரெலோவின் தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் அவர்கள் கோண்டாவில் மற்றும் வவுனியாவில் இவ்வருடமும் நினைவு கூறப்பட்டிருக்கின்றார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பிலிருந்து கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவ்வியக்கத்தின் மூத்த உறுப்பினருமாகிய ஜனா எனப்படுகின்ற கோவிந்தன் கருணாகரனும் கலந்து கொண்டுள்ளார்.

செட்டிபாளையத்திலிருந்து கோண்டாவிலுக்கு ஸ்ரீ சபாரட்ணத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற ஜனா, 1986ம் ஆண்டு மே மாதத்தில் கொக்கட்டிச்சோலை ரெலோ முகாமொன்றில் அம்மன் நோயினால் பீடிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாது படுத்திருந்தபோது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்களை நினைவுகூற இதுவரை மறுத்துவருவது முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை எழுப்பியுள்ளது.

ரெலோ இயக்கத்தினரை தடைசெய்து, யாழ்பாணமெங்கும் அவர்களை கொன்று குவித்து, உயிருடன் ரயர் போட்டெரித்து புலிகள் கோரத்தாண்டவமாடினர் என்பது வரலாறு. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அநேகர் மட்டு அம்பாறையை சேர்ந்த உறுப்பினர்கள்.

மேற்படி போராளிகள் சிந்திய இரத்தம் இன்று ஜனா போன்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் செங்கம்பளமாக மாறியுள்ளது. இவர்களின் தியாகங்களை தங்களுக்கு மேற்குலகில் தஞ்சம் கோரும் துருப்பாகவும், இலங்கையிலே வாக்குவங்கிக்கான மூலதனமாகவும் பயன்படுத்தும் ஜனா மட்டக்களப்பு போராளிகளுக்காக அந்த மண்ணிலே ஓர் நினைவுகூறலை ஏற்பாடு செய்ய மறுப்பதன் குறுகிய அரசியல் லாபம் பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

புலி ஆதரவாளர்களின் வாக்குகளுக்காக சகதோழர்களை கொச்சைப்படுத்தி மட்டக்களப்பில் நிகழ்தப்படும் புலிகளின் நினைவுகூறல்களுக்கு ஜனா அழையா விருந்தாளியாக நுழைவதாக ஏளனஞ்செய்யப்படுகின்றார்.

இந்நிலைமைகளை கருத்திலெடுத்து புலிகளுக்கு மட்டக்களப்பில் விழாவெடுக்கும் ஜனா முன்னாள் ரெலோ உறுப்பினர்களை நினைவுகூறவும், அவ்வியக்கதிலிருந்து உயிரிழந்தவர்களின் விபரங்களை ஆவனப்படுத்தவும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுப்பாரா?

இதேநேரம் ஸ்ரீ சபாரட்ணம் அவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான அவ்வியகத்தின் உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் இப்படுகொலைகளை வருடாந்தம் நினைவுகூர்ந்து அரசியல்லாபம் தேடிக்கொள்ளும் ரெலோவின் தலைமை இக்கொலைகள் புலிகளால் நடத்தப்பட்ட கொலைகள் என்பதை சூட்சுமமாக மறைக்க முனைந்து வருகின்றது. இது தொடர்பில் லண்டனில் தற்போது தலைமையுடன் முரண்பட்டு வருகின்ற அவ்வியக்கத்தின் முன்னாள் உறுப்பினரான சோதிலிங்கம் தனது தலைமை பாசிஸ்டுக்களான புலிப்பயங்கரவாதிகளால் காவு கொள்ளப்பட்டது என்பது தெட்டத்தெளிவாக கூறப்படவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com