Wednesday, February 1, 2017

உலக மக்கட்தொகையின் அடிமட்டத்து அரைவாசிப்பேர்களின் செல்வத்திற்கு சமமான அளவிலான செல்வத்தை எட்டு பில்லியனர்கள் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். By Nick Beams

பிரிட்டனை தளமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் ஆலோசனை குழுவின் படி, உலக சமத்துவமின்மை மீதான அண்மைய அறிக்கை எட்டு பில்லியனர்கள், அதிலும் குறிப்பாக அவர்களுள் ஆறுபேர் அமெரிக்கர், உலக மக்கட்தொகையின் கீழ் மட்டத்து அரைவாசிப்பேரின் ஒட்டுமொத்தமான செல்வத்திற்கு சமமானளவை தமக்கு சொந்தமாகக் கொண்டுள்ளனர் என்கிறது.

இந்த அறிக்கையானது, அதிசெல்வந்தர்கள் இந்தவாரம் சந்திக்கும். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் மலைவாச ஸ்தலத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் இறுதிக்கூட்டம் நிகழவிருப்பதற்கு முன்னர், திங்களன்று வெளியிடப்பட்டது. ஆக்ஸ்ஃபாம் ஆவணம், சமூக சமத்துவமின்மை கூர்மையாக அதிகரித்துள்ளதை காட்டும் விபரங்களை  கொண்டிருக்கின்றது. சிறு நிதிய தட்டுக்கும் உலகின் ஏனய மக்களுக்கும் இடையிலான வருவாய் மற்றும் செல்வத்தின் இடைவெளியானது விரைவான வேகத்தில் விரிவடைந்து கொண்டு செல்கிறது என்பதை அவை காட்டுகின்றன.

ஆக்ஸ்ஃபாமுக்கு கிடைத்திருக்கும் புதிய தரவுகள் இந்த செல்வத்தின் அளவானது இவ்வமைப்பு முன்னர் நம்பியதைவிடவும் அதிகமான அளவு செறிந்து குவிந்துள்ளதை காட்டுகிறது. கடந்த ஆண்டு, மனித குலத்தின் அடிமட்ட பாதிப்பேரின் செல்வத்தைப் போன்று 62 பேர்கள் செல்வத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று அறிவித்தது. அதன் அண்மைய அறிக்கையின்படி, அறக்கட்டளையானது ”புதிய தரவு கடந்த ஆண்டு கிடைத்திருந்தால், ஒன்பது பில்லியனர்கள் உலகின் மிக ஏழ்மையால் பீடித்துள்ள அரைவாசிப்பேரின் செல்வத்தை வைத்திருக்கின்றனர் என்று காட்டியிருக்கும்.”

2015க்குப் பின்னர் இருந்து, உலக மக்கள்தொகையில் 1 சதவீத மிகசெல்வம் படைத்தோர் உலகின் ஏனையோரது மொத்த செல்வத்தைவிட அதிகம் வைத்திருக்கின்றனர். கடந்த கால்நூற்றாண்டில், உயர் 1 சதவீதம் அடிமட்ட 50 சதவீதத்தினரைவிட அதிகவருமானத்தை கொண்டுள்ளனர் என ஆக்ஸ்ஃபாம் எழுதுகின்றது.

“வருமானம் மற்றும் செல்வம் மேலிருந்து கீழ்நோக்கி குறைவதனைக் காட்டிலும் எச்சரிக்கும் வீதத்தில் மேல்நோக்கி உறிஞ்சப்பட்டு வருகின்றன. ஃபோர்ப்ஸ் இன் 2016 செலவந்தர் பட்டியலில் 1810 டாலர் பில்லியனர்கள் 6.5 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளனர் எனக் குறிக்கிறது. இது மனித குலத்தின் அடிமட்டத்து 70 சதவீதத்தினருடையதை போன்றது.”

அடுத்த 20 ஆண்டுகளில், சுமார் 500 பேர் தங்களது வாரிசுகளுக்கு 2.1 டிரில்லியன் டாலர்களை வழங்குவர், இது 1.3 பில்லியன் மக்ளைக் கொண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட பெரியது.
ஆக்ஸ்ஃபாம் பொருளியல் வல்லுநர் தோமஸ் பிக்கெட்டி மற்றும் பலரால் நடத்தப்பட்ட ஆய்வினை மேற்கோள்காட்டுவது, அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் அடிமட்டத்து 50 சதவீத்தினரது வருமான அதிகரிப்பு பூச்சியமாகவும், அதேவேளை உயர் மட்ட 1 சதவீதத்தினரது வருமானம் 300 சதவீதம் உயர்ந்துள்ளது எனக்காட்டுகிறது.

இதே போக்குதான் உலகின் மிக வறிய நாடுகளிலும் நடந்துகொண்டிருக்கின்றது. வியட்நாமின் மிகச் செல்வம் படைத்த ஒரு மனிதன் ஒரு நாளில் நாட்டின் மிக ஏழையான மனிதன் 10 ஆண்டுகளில் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறான்.

சமுதாயத்தின் உயர் மட்டத்திற்கு உலக செல்வம் உறிஞ்சப்படும் திட்டமிட்டரீதியிலான தன்மை பற்றி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வர்த்தகத் துறையானது “”செல்வந்த உடைமையாளர்களுக்கும் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் என்றுமிராத வகையில் உயர் இலாபத்தை வழங்குவதில் கவனத்தை குவித்து”, நிறுவனங்கள் “வரிகளை ஏமாற்றுவும், தொழிலாளர் கூலிகளை குறைப்பதற்கும் மற்றும் உற்பத்தியாளர்களை கசக்கிப் பிழியும்” வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் மிகக் காட்டுமிராண்டித்தனமான குற்றச் செயல்முறைகளும் உள்ளன. ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில், 21 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 150 பில்லியன் டாலர்கள் இலாபம் சம்பாதிப்பதற்காக கட்டாய பணிகளில் இருத்தப்பட்டிருப்பதாக ஆக்ஸ்ஃபாம் மேற்கோள்காட்டுகிறது. உலகின் பெரிய ஆடை நிறுவனங்கள் வழக்கமாக பெண்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தும் இந்தியாவிலுள்ள பருத்தி நூற்பு ஆலைகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளன.

சிறு விவசாயிகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்: 1980களில் கொக்கோ உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஒரு சாக்லெட் துண்டின் 18 சதவீத மதிப்பைப் பெற்றனர், அதனை ஒப்பிடுகையில் இன்று வெறும் 6 சதவீதமே பெறுகின்றனர்.

நிறுவனங்களது அதிகாரம் விரிவாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிதரும் புள்ளிவிவரங்கள் பலவற்றில் எடுத்துக்காட்டப்படுகிறது. வருவாய் என்ற அர்த்தத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார அலகுகளாக இருப்பது நிறுவனங்களே தவிர நாடுகள் அல்ல. வால்மார்ட், ஷெல், மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் உள்பட உலகின் 10 பெரிய நிறுவனங்கள் சேர்ந்து மொத்தமாகக் கொண்டிருக்கும் வருவாய் 180 நாடுகளின் அரசாங்கத்தின் மொத்த வருவாயைவிடவும் அதிகமாகும்.

இவ்வறிக்கையின் ஆசிரியர்கள் இலாப நோக்கு அமைப்பு முறையை எந்த வகையிலும் கண்டிக்காவிட்டாலும், அவர்களது அறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்கள் முதலாளித்துவ அமைப்பின் மீது திகைப்பூட்டும் தீர்ப்பை வழங்குகிறது. நவீன சோசலிசத்தின் ஸ்தாபகரான கார்ல் மார்க்ஸால் கோடிட்டுக்காட்டப்பட்ட இரண்டு மைய நிகழ்ச்சிப்போக்குகளை தகவல்களிலும் எண்களிலும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

இலாபத்திற்கான உந்தலின் அடிப்படையிலமைந்த முதலாளித்துவ அமைப்பின் புறநிலை தர்க்கம், ஒரு முனையில் என்றுமிரா அதிகளவு செல்வக்குவிப்பையும் மறுமுனையில் வறுமை துன்பம் மற்றும் இழிநிலையையும் உற்பத்திசெய்வதாகும் என மார்க்ஸ் மூலதனத்தில் விளக்குகிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையில் அனைத்து அரசாங்கங்களும் முதலாளித்துவ வர்க்கத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான நிறைவேற்றுக்குழு என்று அவர் விவரிக்கிறார்.

இது வரிக்கொள்கைகள் மற்றும் உலகம் முழுதும் அரசாங்கங்களால் எடுக்கப்படும் இதர “வணிக-நட்பு” நடவடிக்கைகளால் விளக்கிக் காட்டப்படும். ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தொழில்நுட்ப பகாசுர நிறுவனமான ஆப்பிள் அதன் ஐரோப்பிய இலாபத்தில் வெறும் 0.005 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தியதாக கூறப்படுகிறது.

நிறுவனங்களுக்கு மோசமான வரி ஏமாற்று மற்றும் வரிவிலக்குகள் அளித்ததன் விளைவாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்துள்ளன. கென்யாவில், வரிவிலக்குகளின் காரணமாக வருடத்திற்கு 1.1 பில்லியன் டாலர்கள் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது, இத்தொகையானது நாட்டின் வருடாந்தர சுகாதார வரவு-செலவு திட்ட கணக்கைவிட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

அரசாங்கத்தின் வரிக்கொள்கை, வரி ஏய்ப்பு மற்றும் குற்றத்தன்மையுடன் கைகோர்த்து வேலை செய்கிறது. பொருளியலார் காப்ரியல் சுக்மானின் மதிப்பீடான 7.6 ட்ரில்லியன் டாலர் உலகச் செல்வம், கரைகடந்த வரிச்சலுகை கொண்ட சொர்க்கங்களில் மறைக்கப்படுகிறது. வரி ஏய்ப்பு புகலிடங்களை பயன்படுத்துவதன் மூலம் ஆபிரிக்கா மட்டும் ஆண்டு வருவாயில் 14 பில்லியன் டாலர்களை இழக்கிறது: இது நான்கு மில்லியன் குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றும் சுகாதார பராமரிப்பிற்கு செலவிடப் போதுமானதுடன் மற்றும் ஒவ்வொரு ஆபிரிக்க குழந்தையும் பள்ளிக்குச் செல்வதை உறுதிப்படுத்த போதுமான ஆசிரியர்களை பணியில் அமர்த்தப் போதுமானது.

சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு பற்றிய ஆக்ஸ்ஃபாம் கலந்துரையாடலில் ஒரு முக்கிய தவிர்ப்பு இருக்கிறது. வங்கி பிணையெடுப்புகள் மூலம் வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களை வழங்கும் உலகின் பெரிய அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளது கொள்கைகளின் முக்கிய பங்கு பற்றி மற்றும் 2008ல் ஏற்பட்ட உலக நிதிய நெருக்கடியின் வெடிப்புக்கு பின்னரான “அதிக பணத்தை அச்சடித்துவிடல்” கொள்கைகளின் பங்கு பற்றி எந்தக் குறிப்பிடலும் இல்லை.

இந்த உண்மைகள் பற்றிய ஒரு கலந்துரையாடல், தர்மசங்கடமான அரசியல் பிரச்சினைகளை எழுப்பும். இந்த அறிக்கையானது, மக்களின் 1 சதவீதம் மற்ற 99 சதவீதத்தினரது அளவுக்கு செல்வத்தை உடைமையாகக் கொண்டிருக்கும் உலகம் ஒருபோதும் ஸ்திரமாக இருக்க முடியாது என்று 2016ல் ஐ-நா சபைக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா குறிப்பிட்ட கருத்தை தனக்கு சாதகமாக மேற்கோள் காட்டி அறிக்கையை தொடங்குகிறது.

ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் அதே கொள்கைகள்தான் இந்த உலகை உருவாக்குதற்கு ஒரு முக்கிய பங்கை ஆற்றியது. நிதிய சிறு குழுவினரை அவர்களது சொந்த குற்ற நடவடிக்கைகளின் விளைவிலிருந்து பரந்த அளவு வங்கி பிணையெடுப்புக்களால் மீட்ட பின்னர், ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க மத்திய வங்கியும் அதி வட்டிகுறைந்த பணத்தை அளித்ததன் மூலம் அவர்கள் மேலும் செல்வம் கொழிப்பதை உறுதிப்படுத்தியதானது அவர்களின் சொத்துக்களின் மதிப்பை பெரிதாக்கியது.

ஒபாமாவின் கீழ், ஒட்டுண்ணித்தனத்தினுள்ளும் குற்றத்தன்மைக்குள்ளும் ஆளும் வர்க்கம் இறங்குவதுடன் சேர்த்து, சமத்துவமின்மையின் பத்தாண்டுகால நீண்ட வளர்ச்சி விரைவுகண்டது. அவர் நிதிய குழுவினர் நேடியாக அதிகாரத்தை கைப்பற்றுதற்கு வழியமைத்தார், அது சூதாட்டவிடுதி (கேசினோ) மற்றும் ரியல் எஸ்டேட் பில்லியனர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்து ஜனாதிபதியாவதில் உருப்படுத்திக்காட்டியது, அவரிடம்தான் வெள்ளிக்கிழமை அன்று அவர் வெள்ளை மாளிகையின் திறப்பை ஒப்படைப்பார்.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் பின்னே இருக்கும் மற்றெதனையும் விட முக்கியத்துவம் வாய்ந்த நோக்கம் என்னவெனில், என்றும் அதிகரித்துவரும் சமத்துவமின்மையின் அரசியல் விளைவுகளின் அச்சமும் அதன் விளைவுகள் மீது பெருகிவரும் கோபத்தை தீங்கற்ற வழிகளில் திசைதிருப்பும் ஆவலும் ஆகும். அது “மனிதாபிமான பொருளாதாரம்” எனும் முன்னோக்கை முன்னெடுக்கிறது, ஆனால் இது முதலாளித்துவ சந்தை அடிப்படையில், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் தங்களின் மனதை மாற்றிக்கொள்வார்கள் எனும் அடிப்படையில் அடையப்பட முடியும் என்று கூறுகிறது.

இந்த முன்னோக்கின் அபத்தமானது, ஒரு நூற்றாண்டு காலமாக பிரிட்டிஷ் நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையில் மேலாதிக்கம் செய்திருந்த பிரிட்டிஷ் ஃபாபியனிசத்தின் நீண்டகாலமாய் செல்வாக்கிழந்துவிட்ட கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டிருந்தது, இதனை இந்த அறிக்கையானது இந்த வாரம் டாவோஸ் உச்சிமாநாட்டில் கூடுகின்ற நிதிய செல்வந்தத்தட்டுக்களுக்கு அவர்களின் வழியை மாற்றுவதற்கான ஒரு அழைப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதில் காணமுடியும்.

இந்தக் கண்ணோட்டத்தின் திவாலானது தற்போதைய உண்மைகள் மற்றும் எண்ணிக்கைகளால் மட்டுமல்ல,  வரலாற்று அனுபவத்தாலும் விளக்கிக் காட்டப்படும். கால்நூற்றாண்டுக்கு முன்னர், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, எங்கும் முதலாளித்துவ வெற்றிவாதமே வியாபித்திருந்தது. சோவியத் ஒன்றியத்தினால் தடைசெய்யப்பட்டதிலிருந்து  விடுபட்டு, உலகித்தை மேலாதிக்கம் செய்யவும் தாராள முதலாளித்துவ ஜனநாயகமானது மனித சமுதாயத்திற்கு அதனால் என்ன செய்ய முடியுமென்று காட்டப்போவதாக கூறப்பட்டது.

அது நிச்சயமாக என்றுமிராத சமத்துவமின்மையால் குறிக்கப்படும் ஒரு உலகச் சந்தையை உருவாக்கியுள்ளதுதான், அருவருப்பான மட்டங்களுக்கு செல்வத் திரட்சி, ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக எதிர்ப்பு வடிவ ஆட்சி, சமுதாயத்தின் மிக உயரத்தில் குற்றத்தன்மை, மற்றும் அதிகரித்த அளவில் ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் சாத்தியத்திற்கான தீக்குறி ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.

இந்த வரலாறு இன்னொரு ஆண்டு நிகழ்வினது மீதும் கவனத்தை கொண்டுவருகின்றது: அது ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கைகளில் அதன் அடுத்தடுத்த காட்டிக்கொடுப்புக்களுக்கு மத்தியிலும், ரஷ்ய புரட்சியானது, முதலாளித்துவத்திற்கும், அதன் சமூகத் துன்பங்களுக்கும் கேடுகளுக்கும் அப்பால், மற்றும் எல்லாக்காலத்திற்குமான ஒரு உலகம் சாத்தியம் என்பதை ரஷ்ய புரட்சி அளிக்கமுடியாதபடி எடுத்துக்காட்டியது. அதன் படிப்பினைகள் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் விவரிக்கப்பட்ட சமூக நிலைமைகளிலிருந்து வெடிக்கவிருக்கும் ஆழமான சமூகப் போராட்டங்களுக்கான வழிகாட்டும் முன்னோக்காக இருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com