Thursday, November 3, 2016

நீதி தேவதைக்கு கேரள கஞ்சா மீது காதலா? பருத்தித்துறை நீதவான் மீது சுயாதீன நீதிச் சேவைகள் அணைக்குழுவில் முறைப்பாடு. பீமன்.

வடகிழக்கிலே அரச காரியாலயங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைநிறைவேற்றுக்காரியங்களாக மாறியுள்ள நிலையிலே நீதிமன்றங்களும் அந்த அருவருக்கத்தக்க செயலை பின்பற்றுகின்றதா என்ற அச்சம்! நீண்ட நாட்களுக்கு பின்பு இக்கட்டுரையை வரைய நிர்ப்பந்தித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கே சொந்தமான கள்ளக்கடத்தலும் கைக்கூலிக்கு கலாட்டாபண்ணுதலும் மீண்டும் குடாநாடெங்கும் தலைதூக்கியுள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரரையும் கைக்கூலிக்கு பொல்லு தடி வாள்களுடன் கையாலாகத் தொழிலினை செய்து வருவோரை ஜீ.ஜீ பொன்னம்பலம் காலத்திலிருந்து காப்பாற்றிவந்த யாழ் கறுப்பு சட்டையணிந்த ஆசாமிகள் இன்றும் இழிசெயலை எவ்வித வெட்கதுக்கமோ தயவுதாட்சணியமோ இன்றி தொடர்ந்து வருகின்றனர். இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் தமிழ் தேசியம், தமிழரின் உரிமை, உரிமைப்போராட்டம், கலாச்சாரம் என்றெல்லாம் மேடை மேடையாக முழங்கும் ரெலோ முதல்வர் சிறிகாந்தா –படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில் என்ற பழமொழிக்கு ஒப்பாக கயவர்கள் - கஞ்சாக்கடத்தல்காரர்கள் சார்பாக ஆஜராகுவதாகும்.

சரி சிறிகாந்தா வாடகைக்கு அமர்த்ததப்படுகின்ற வக்கீல் வாங்குகின்ற பணத்திற்காக தன் கட்சிக்காரன் சார்பாக வாதாடுவார் என்று எடுத்துக்கொள்வோமே. ஆனால் நீதிபதிகள் கள்ளக்கடத்தல்காரர்களை காப்பாற்ற தமக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவரையறையை மீறி குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளக்கூடிய மற்றும் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துக்கின்றவிதத்தில் நடந்துகொள்வதன் மர்மம்தான் என்ன?

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மாதகல் பிரதேசத்திற்கு வந்திறங்கிய 60 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரும் கஞ்சாவுடன் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அதிபயங்கர போதைப்பொருள் சட்டத்தின்கீழ் குற்றவாளி மன்றில் ஆஜர் செய்யப்பட்டமையால் பிணை என்பது மஜிஸ்ரேட் நீதிமன்றில் கடினமான விடயம். சந்தேக நபர் சுமார் 6 மாத காலங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை ஒரு விசித்திரமான கதை. பிரதேசத்திலுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான இவன் தனது கடத்தல் தொழிலுக்கு ஒவ்வொரு முறையும் புதிய புதிய வியூகங்களை கையாண்டு வந்தமையால் பொலிஸார் இவன் விடயத்தில் தமது கைகளை கசக்கிக்கொண்டு பற்களை நறும்பிக்கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் இளவாலை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி காரியத்தை கையிலெடுத்துள்ளார். புலனாய்வுப் பிரிவொன்றின் முன்னாள் அதிகாரரியான அவர் மக்களுடன் பின்னிப்பிணைந்து தகவல்களை கறந்து கொள்வதில் கில்லாடி. பிரதேசத்திற்கு வந்து ஒரிருமாதங்களிலேயே தகவல் வழங்குனர்கள் வலையமைப்பொன்றை இலகுவாக கட்டமைத்து கொண்டார். இவருடன் ஜம்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞனும் தகவலாளியாக இணைந்தான். தகவலாளி என்றாலே சமூகத்தில் துரோகி பட்டம்தான் சுமக்கவேண்டுமென்பதை நன்றாக தெரிந்திருந்தும் அவன் இக்கருமத்தைச்செய்ய துணிந்ததற்கு காரணம் குற்றமற்ற, களவற்ற, கயவர்களற்ற ஒரு சமூகத்தை தான் காண விரும்பியதாகும்.

ஜம்பு சமூகவிரோத செயல்களை வெறுக்கின்றான் என்ற உண்மையை அறிந்திராக கடத்ததல்காரன் ஜம்புவுடன் நட்பு கொண்டான். நாளடைவில் தனது தொழிலுக்கு உதவி புரியுமாறு கேட்டான். என்ன அந்த உதவி? தான் கஞ்சாவை கடலால் இறக்கி கொண்டு செல்லுகின்றபோது பிரதேசத்தை நன்கு கவனித்து பொலிஸாரின் றோந்து மற்றும் அவர்களில் பிரசன்னம் இல்லாத பாதைகளை தொலைபேசியில் அறிவிப்பதாகும். நேரத்தையும் நாளையும் சொல்லுங்கள் உங்கள் பொருளை எங்கு கொண்டு செல்லவேண்டுமோ அங்கே நேரே கொண்டு செல்வதற்கு வழி செய்கின்றேன் என்றான் ஜம்பு. அர்த்தத்தை புரிந்து கொள்ளாத கடத்தல்காரன் நேரம் நாள் போன்ற தகவல்களை ஜம்புவிடம் கூறினான். சகல விடயங்களையும் கவனிக்கின்றேன் என பெருவிரலை உயர்த்தி காட்டிவிட்டு சென்ற ஜம்பு இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேரடியாக அழைப்பை எடுத்தான். விடயத்தை கூறினான். திட்டம் தீட்டப்பட்டது. மாதகல்லுக்கு வந்த கேரளகஞ்சா ஜம்பு கூறிய பாதை வழியே சென்று திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாட்டிக்கொண்டதது. கச்சிதமாக தீட்டப்பட்டிருந்த திட்டமாகையால் ஜம்பு மீது கடந்தல்காரனுக்கு சந்தேகம் வரவே இல்லை.

விசாரணைகள் நடைபெற்றது. எங்கிருந்து வந்தது? எங்கே போகின்றது என்ற கேள்விகளுக்கு கூட கடத்தல் காரன் கள்வரின் தாய்மொழியான பொய்யில் பதில் சொன்னான். X என்ற நபர் இப்பொதியை அனுப்பி வைத்ததாகவும் அவர் இதை எடுத்து கொண்டு ஒரிடத்தில் ஒப்படைக்க சொன்னதாகவும் பொதியில் கஞ்ஞா உள்ளது தனக்கு தெரியாது என்றும் றீல் விட்டு X இன் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தான். அத்தொலைபேசி இலக்கத்தை பரிசீலித்தால் அது கொழும்பிலுள்ள அபாணஸ் கொம்பனியில் பொது முகாமையாளரின் இலக்கம். ஆனால் நவீன தொலைத்தொடர்பியல் தொழினுட்பத்தினூடாக தேவையான தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு சகல உண்மைகளும் கண்டறியப்பட்ட பின்னார் கடத்தல்காரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

சுமார் மூன்று நான்கு மாதங்கள் விளக்கமறியலை கழித்த கடத்தல்காரனுக்கு தான் எவ்வாறு மாட்டினேன்? தனக்கு உலை வைத்தது யார்? என்ற உண்மைகள் தெரியவந்தது. தன்னை காட்டிக்கொடுத்தவனை என்ன செய்வது என்ற முடிவுக்கு வந்தான். நீதிமன்றில் யாழ்பாண சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டபோது கையை உயர்த்தி „ கனம் கோட்டார் அவர்களே! நான் ஒரு உண்மையை சொல்லப்போகின்றேன் என்றான். சொல்லலாம் என நீதிபதி அனுமதி வழங்கியபோது, ஜம்புவின் பெயரை குறிப்பிட்டு இவரே தன்னிடம் குறித்த 60 கிலோ கஞ்சாவையும் தந்ததாகக்கூறினான்". உடனடியாக ஜம்புவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆணையிடப்பட்டது. விசேட அறிக்கை ஒன்றை தயாரித்த பொலிஸார் நீதிபதியை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அதை பாரப்படுத்தினர். அவ்வறிக்கையில் குறித்த சம்பவம் தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட விசாரணையின் முழுவிபரமும் அடங்கியிருந்ததுடன் அதில் ஜம்பு சம்மந்தப்பபட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பதுடன் அதற்கான தகவலை ஜம்புவே தங்களுக்கு வழங்கினார் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை நிராகரித்த நீதிபதி கடந்தல்காரன் விசுவாமித்திர முனிவரின் அண்ணன் மகன் அவன் பொய்யே பேசமாட்டான் அவன் சொல்வதெல்லாம் உண்மையிலும் மகா உண்மை எனவும் ஜம்புவை கைது செய்திடுவீர் எனவும் பொலிசுக்கு மீண்டும் கட்டளை பிறப்பித்தார். நிலைமையை உணர்ந்த ஜம்பு உடனடியாக யாழ்தேவியில் ஏறி கொழும்புக்கு சென்று சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் நீதிபதிக்கு எதிரான முறைப்பாடு ஒன்றினை தனது கைப்பட எழுதி கொடுத்துள்ளார். ஜம்பு தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:

இரு குழந்தைகளின் தந்தையான நான் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றேன். கடற்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்ட எமது வாழ்வியலை மேற்படி போதைப்பொருள் கடத்தல் சீர்குலைக்கின்றது என்பதாலும் இதனால் எமது சமூகத்திற்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதாலும் நான் இவ்விடயத்தை பொலிஸாருக்கு காட்டிக்கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். ஆனால் தற்போது சந்தேகநபரின் பொய்யான தகவலை ஏற்று நீதிபதி என்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் செயற்பாடானது என்னைப்போன்று அநீதிக்கு எதிராக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கும் அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலைமை தொடருமாக இருந்தால் அது குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு தனது முறைப்பாட்டை சரியான ரீதியில் விசாரணை செய்து நீதிபதிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதேநேரத்தில் குறித்த நீதிபதி யாழ் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயலுக்கு எதிராக செயற்பட்டுவரும் தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர் ஒருவருக்கு எதிராக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு தடவைகளில் காரணங்களின்றி குறித்த பொலிஸ் உத்தியோகித்தரை சந்தேக நபர்கள் முன்நிலையில் திட்டியதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகித்தர் தனது மேலதிகாரியிடம் முறையிட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட , சமூக ஒழுங்கீனங்கள் தொடர்பில் பொலிஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என யாழ் மாவட்ட நீதிபதி திரு இளஞ்செளியன் அவர்கள் பொஸாருக்கு அறிவுரைகளையும் ஆணைகளையும் வழங்குகின்ற அதேதருணத்தில் யாழிலுள்ள சில நீதிபதிகள் சட்டத்தையும் ஓழுங்கையும் நிலைநாட்ட துடிக்கின்ற உத்தியோகித்தர்களை மனநலிவடையச் செய்வது மக்கள் நீதித்துறை மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கைக்கு கேடாக அமைகின்றது.

மறுபுறத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமையை செவ்வனே செய்துவரும் மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீது சேறு பூசல்களும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனச்செயலை செய்துவருகின்ற வக்கீல்களும் சில நீதிபதிகளும் உள்ளதாக நம்பப்படுகின்றது. அற்ப அரசியல் மற்றும் பொதுநலன்களுக்காக நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி செயற்படுகின்றபோது சாதாரண மக்களுக்கு நீதி என்பது கானல்நீர்தான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com