Sunday, June 12, 2016

புதிய தேர்தல் முறை தொடர்பில் NFGG நடாத்திய விசேட செயலமர்வு.

உத்தேசிக்கப்படும் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது தொடர்பான விஷேட செயலமர்வொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏற்பாட்டில் கடந்த 8.6.2016 அன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு ஹார்ட்டி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் முறைகள் குறித்த சர்வதேச நிபுணரான கரே வோலன் அவர்கள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை முன்வைத்தார்.

NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், கலாநிதி சுஜாதா கமகே, கலாநிதி சுசந்த லியனகே, 'கபே' அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோன், சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம், சட்டத்தரணி YLS.ஹமீட் உட்பட NFGG தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் ஏனைய பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

உத்தேச புதிய யாப்பில் முக்கிய பகுதிகளில் ஒன்றான புதிய தேர்தல் முறை உருவாக்கத்தின் போது, சிறுபான்மை சமூகத்தினதும் சிறிய கட்சிகளினதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உத்தரவாதம் செய்வது என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக இன்று மாறியிருக்கின்றது. தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார முறை மாற்றப்பட்டு, தொகுதிவாரி தேர்தல் முறையும் விகிதாசார முறையும் கலந்த ஒரு புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தேசிய ரீதியிலான கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ரீதியிலான விகிதாசார தெரிவு முறையாகக் காணப்படும் தற்போதைய தேர்தல் முறையும் கூட தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ரீதியில் 4.6 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்ட ஒரு கட்சி பாராளுமன்றத்தில் 7 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ள அதே வேளை, தேசிய ரீதியில் 4.9 வீதமான வாக்குகளைப்பெற்ற மற்றுமொரு கட்சி 2.7 வீதமான பாராளுமன்ற ஆசனங்களையே பெற்றுக்கொண்டுள்ளது.

அந்த வகையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையாக உருவாக்கப்படும் புதிய தேர்தல் முறையானது ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்கு விகிதாசாரத்தினை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் எவ்வாறு அமைய முடியும் என்ற பல முற்போக்கான முன்மொழிவுகளை வோலன் அவர்கள் இக்கலந்துரையாடலின் போது முன்வைத்தார். குறிப்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்ற யோசனைகளை அவர் உதாரணங்களுடன் முன்வைத்து விளக்கினார்.

தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் விகிதாசார முறையும் தொகுதிவாரி தேர்தல் முறையும் பொருத்தமான முறையான விகிதத்தில் கலந்ததாக புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என்ற தனது திட்ட முன்மொழிவுகளை அவர் சமர்ப்பித்தார். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள வெட்டுப்புளளி முறையினை முற்றாக ஒழிக்கவேண்டும் அல்லது கணிசமாக குறைக்க வேண்டும் என்பதும் வோலன் அவர்களின் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்றாகவும் இருந்தது. இது போன்ற தேர்தல் முறைகள் ஜேர்மன்,சுவிட்சலாந்து போன்ற நாடுகளில் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்ற தனது சொந்த அவதானங்களையும் அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.இந்த யோசனைகளை ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினருக்கு தான் சமர்ப்பித்திருப்பதாகவும் அவை தொடர்பில் அரசு சாதகமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com