Sunday, June 12, 2016

"ஏன் இப்படி பூச்சியமானது?"

தமிழினி தனது கூர்வாளில் "ஏன் இப்படி பூச்சியமானது?" என கேள்வி எழுப்பி, அவர் தனது அரசியல் நம்பிக்கைக்குள் அதற்கு விடை காணவும் பதிலிறுக்கவும் முனைகின்றார். புலிப்பாசிசம் தான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி, அதற்காகவே வாழ்ந்த தமிழினி, புலிகளை என்றும் யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்ற நம்பிக்கையில் தன் எண்ணங்களையும், செயற்பாடுகளையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட உணர்ச்சிகள் எல்லாம் சிதைந்த போது, ஏன் இப்படி நடந்தது என்ற சுய அனுபவவாதத்தை காரணமாகக் காட்டி எழுதியதே "கூர்வாள்".

தமிழினி தன்னுரையில் இந்த நூலின் நோக்கம் குறித்து "எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடம் பல தடவை கேட்டுக் கொண்டேன். ஒரு பதில் தான்; என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக் கொண்ட போராட்டம், இலட்சோப லட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படிப் பூச்சியமானது? உலகம் அதிர்ந்து போன கேள்வி இது" இந்தக் கேள்விக்கு அவரின் சுய அனுபவம் சார்ந்த விமர்சனமாக வெளிவந்த "கூர்வாள்" விடை தந்து இருக்கின்றதா எனின், இல்லை.

புலிகளில் இருந்த பின் இன்று தங்களை "முற்போக்காளராக - அறிவுஜீவியாக" வெளிப்படுத்திக் கொள்ளும் பலரும், தமிழினி போல் ஒரேவிதமான காரணங்களையே முன்வைக்கின்றனர். தமிழினி விதிவிலக்காக கடந்த நிகழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வெளிப்படை தன்மையுடன் - எல்லோரையும் போல் தமிழ் இனவாதக் குட்டைக்குள் நின்று "ஏன் பூச்சியமானது" என்று காட்ட முனைகின்றார்.

இப்படி காரணத்தைக் கண்டறிய முடியாத வண்ணம், தொடர்ந்து புலிகள் கொண்டிருந்த அதே சமூகப் பொருளாதார உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டே தமிழினி விடை தேடுகின்றார். தமிழினி தன் அகநிலையிலான அனுபவவாதம் சார்ந்த எதார்த்தத்தில் தீட்டிய "கூர்வாள்", புறநிலையான சமூகப் பொருளாதார எதார்த்தத்தைக் கொண்டதல்ல. நிலவும் சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த எதார்த்தம் முழு உண்மையாகவோ, குறித்த சூழலை ஆராய போதுமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நிலை குறித்து, யுத்தம் - யுத்தத்துக்கு பிந்தைய அனுபவவாதம் சார்ந்து தமிழினி சொல்லும் உண்மைகள், தனிச் சிறப்பாக "கூர்வாள்" மூலம் வெளி வந்திருக்கின்றது. பெண்களை இழிவாக சமூகம் ஏன் கையாளுகின்றது என்ற கேள்விக்கு, தமிழினி தன் அனுபவவாதத்தால் அவர்கள் மேலான அனுதாபத்தையே ஏற்படுத்த முடிந்துள்ளது.

"ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்று அனைத்துக் கேள்விகளுக்கும், "கூர்வாள்" மூலம் தமிழினி தீட்டிக் காட்டியவை

1. கேள்விக்கு உள்ளாக்க முடியாத "தலைவரின் - அண்ணரின்" அதிகாரமும் தனித்த முடிவுகளும்,

2. அதிகாரத்தைக் கொண்டு "தம்பி" (பிரபாகரனின் மகன்) இட்ட கட்டளைகள்

3. இயக்கத்தின் கண் மூடித்தனமானதும், பிழைக்கத் தெரிந்தவர்களாலும் "அண்ணை" மற்றும் "தலைவர்" வழிபாடு,

4. கட்டாய ஆட்சேர்ப்பும், அதற்காகக் கையாண்ட கெடுபிடிகளும்

5. கண் மூடித்தனமான வரி அறவீடுகளும், அதற்காகக் கையாண்ட வன்முறைகளும்

6. ஆயுத வழிபாடும், அது சார்ந்து எடுத்த முடிவுகளும்

7. இயக்கத்தின் ஆள் பிடிக்கும் அரசியலும், அதற்கு ஏற்ப மக்கள் மற்றும் பெண்கள் இயக்கம்,

8. அரசியல் ராஜதந்திரமற்ற - இராணுவவாத முடிவுகள்,

9. உள்ளியக்க (மாத்தையா, கருணா..) முரண்பாடுகளைக் கையாண்ட முறையும் - படுகொலைகளும்

10. மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததும், சுட்டுக் கொன்றதும்

11. இயக்கத்தில் உள்ளவர்கள் பற்றிய உளவு பிரிவின் (பொட்டரின்) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தண்டனைகளும் - யுத்தம் பற்றி ஓரு தலைப்பட்சமான திணிப்புகளும்

இப்படி தமிழினி தன் சொந்த அனுபவம் சார்ந்து கண்டறியும் பல உண்மைகளா புலிகளின் தோல்விக்கு காரணமெனின் இல்லை. மாறாக இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தது புலிகளின் அரசியல் என்பதும் அந்த அரசியல் தான் தோல்விக்கான காரணமுமாகும்.

தமிழினி தன் அனுபவவாதம் சார்ந்து வெளிப்படுத்தும் உண்மைகள் அனைத்தும், புலிகளின் வெற்றிகளும், அதிகாரமும் உச்சத்தில் இருந்த காலத்திலேயே புலிகள் கொண்டிருந்தனர். தமிழினியை இயக்கத்தில் உள்வாங்கியதும், இயங்க வைத்ததும் இதே கூறுகள் தான். புலிகள் பற்றிய போலிப் பிரமைகள் எதார்த்தமாக இருந்த காலத்தில், "உண்மைகளற்று" காணப்பட்ட உண்மைகள், தோல்வியே எதார்த்தமாக மாறிய சூழலில் "உண்மையாக" மாறி விடுவதையே, "தமிழினி" புதிய எதார்த்தத்துக்கு ஏற்ப பிரதிபலித்து இருக்கின்றார். இது தான் "கூர்வாள்".

குறிப்பாக போராட்ட வெற்றிக் காலத்தில் குடும்பத்தை கைவிட்டு போராடச் செல்வதை பெரிதாக அலட்டிக் கொள்ளாத எதார்த்தம், தோற்ற போது என்னத்தைக் குடும்பத்துக்கு கொடுத்தோம் என்ற எதிர்நிலையான மனநிலையை தமிழினி பிரதிபலிக்கின்றார். மாறிவிட்ட சூழலில், இருவிதமான எதார்த்தத்திற்குமான அகநிலை முரண்பாடே "கூர்வாளாக" பிரதிபலிக்கின்றது.

மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து போராட்டமே விலகிப் பிரிந்து இருந்தது என்ற உண்மையை, கூர்வாளில் காணமுடியவில்லை. ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தில் பிரதிபலிக்கும் வண்ணம் உறைக்கின்றது. "கூர்வாள்" அரசியல் ரீதியான தவறை இனங்கண்டு காட்டுவதற்கு பதில் தனிமனித உணர்ச்சிக்கு ஊடாக காட்டுகின்ற முந்தைய அதே தவறை தொடருகின்றார்.

தமிழினி இயக்கத்தின் அரசியல் வழியில் முரண்படாது, பொது மற்றும் தனிப்பட்ட சொந்த அதிருப்தியைக் கொண்டு இவைதான் காரணம் என்று முன்வைக்கின்றார். சம்பவங்கள், புலிகளின் நடத்தைகள் தொடர்பாக தமிழினி "கூர்வாள்" மூலம் முன்வைத்தவை அனைத்தும், புலிகள் தொடர்பாக புலிகளின் காலத்தில் வெளிவந்த விமர்சனத்தில் காண முடியும். இவை எவையும் புதிய விடையங்கள் அல்ல.

இதேபோன்று யுத்தங்கள் குறித்து அவரின் வருணனைகளில் அவரின் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர, புலிகள் யுத்தகாலத்தில் வெளியிட்ட நூல்களின் காணமுடியும். புலிகளின் நடத்தை குறித்தான விமர்சனங்களில் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர புலிக்கு எதிரான கடந்தகால விமர்சனத்தில் பொதுவாக வெளிவந்தவையே.

இவை யாருக்குப் புதியவை என்றால் புலிப் பாலைக் குடித்துக் கொண்டு கண்ணை மூடி வாழ்ந்து கொண்டு இருந்த இருக்கின்ற புலிக் குட்டிகளுக்கே. இதைப் போன்று தான் சாத்திரியின் உண்மைகள், "ஆயுத எழுத்து" மூலம் வெளிவந்தது. சாத்திரி புலியாக நின்று அதை நியாயப்படுத்திச் சொல்ல, தமிழினி புலியாக நின்று தன் அனுபவத்தை நியாயப்படுத்தி சொல்ல முடியவில்லை.

புலிக்கு புலியைப் பற்றி, புலித் தாய் கூறும் விடையங்கள் ஆச்சரியமாகவும், அதிர்வாகவும், எதிர்ப்பாகவும் இருப்பது வியப்பானதல்ல. மக்கள் சார்ந்த அரசியலைக் கொண்டிராத புலியெதிர்ப்பு அரசியலுக்கு, உகந்த விபரங்களாக இருப்பதிலும் ஆச்சரியமல்ல. இங்கு புலி - புலி எதிர்ப்பு என்ற இரு முனையில் எதிர்ப்பும், ஆதரவும், கூர்வாளுக்கு ஏற்படுகின்றது. "ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்ற தமிழினியின் அடிப்படையான கேள்விக்கும், விவாதத்துக்கும் பதில் கிடைக்கவில்லை என்பதே, சமூகப் பொருளாதார முரண்பாடுகளற்ற சமூகத்தை முன்னோக்காகக் கொண்ட அரசியலின் விமர்சனமாகும். "ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்பது அரசியல் ரீதியானது என்ற உண்மையை, தமிழினி கண்டு கொள்ளவில்லை. அந்த அரசியல் என்னவென்பதை இந்த நூல் கண்டறியவில்லை.

1970 களில் புலிகளின் உடைவு, 1980களில் மாற்று இயக்கப் படுகொலைகள் என அனைத்து புலிகளின் மக்கள் விரோத வரலாற்றின் தொடர்ச்சியில், இதற்கான கேள்விகளும் பதில்களும் கூடவே இருந்து வந்துள்ளது என்பதே வரலாற்று இயங்கியல் உண்மையாகும்.

தமிழினியோ புலித் தலைவர்கள், தலைவிகளில் ஒருவர். புலிகளின் மகளிர் அணியின் தலைவி. புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களுடன், பிற இன மக்களுடன் உறவாடிய, எல்லா உண்மைகளையும் தெரிந்த அறிவுஜீவியாக தன்னை முன்னிறுத்திய ஒருவர். எல்லாவற்றையும் நியாயப்படுத்தி, அனைத்துத் தவறுகளுக்கும் வக்காளத்து வாங்கிய அந்த அரசியலுக்கு பொறுப்பக் கூற வேண்டிய ஒருவர். வெறும் பொம்மையாக தான் இயங்கிய பின்னணியைக் கூறும் "கூர்வாள்" அதற்கான தன்னிலையான அகக் காரணத்தை ஆராயவில்லை.

உண்மைகள் தெரிந்த போதும், முரண்பாடுகள் தோன்றிய போதும், அதை அடக்கிக் கொள்ளக் காரணம் உயிர்ப் பயம் தான். அதுவே எதிர்நிலையான வழிபாடாக, காரணங்களைக் கற்பிக்கின்ற நியாயப்பாட்டை கொண்டு தவறுகளை பலப்படுத்தி விடுவதை தமிழினி தவறாக முன்வைக்கவில்லை. மக்களுக்கான “அர்ப்பணிப்பு தியாகம்” அனைத்தையும் கொண்ட போராட்டம், மக்களை ஒடுக்கியும், கொன்றும் குவித்த போது இவரை மௌனமாக்கியது எது? அதையே செய்யத் தூண்டியது எது? மக்களுக்காக "அர்ப்பணிப்பு தியாகத்தை" செய்ய தயாரற்ற, சமூகப் பொருளாதார அரசியல் ஏற்படுத்திய சுயநலம் சார்ந்த, வர்க்க ரீதியான உணர்வு சார்ந்த பயம் தான். புலிகளுக்குள் எதையும் தங்களால் செய்ய முடியாது என்று கூறுகின்ற பின்னணியில், வர்க்க ரீதியான பயவுணர்வு தான் முதன்மை பெற்று இருந்தது என்பதே உண்மை.

தமிழினியின் தனித்துவத்தை "கூர்வாள்" வெளிப்டுத்துகின்றதா?

தமிழினியின் தனிப்பட்ட தலைமைத்துவ ஆளுமைகள், பால்ரீதியாக பெண்களின் துயரங்கள் மீதான அவரின் தனிப்பட்ட அக்கறைகள், சாதிரீதியான இழிவுக்கு எதிரான தனிப்பட்ட குமுறல்கள் இவை அனைத்தையும் இழந்து, "தலைவருக்கும் - அண்ணைக்கும்" (பிரபாகரனுக்கு) அடிமைகளாக மாறி, செக்கு மாடுகளாக வாழ்ந்த தன் (புலிகளின்) கதையைத் தான் தமிழினி "ஒரு கூர்வாளின் நிழலில்" ஊடாக திரும்பிப் பார்ப்பதையே தன் வரலாறாகக் கூறுகின்றார்.

தன் வரலாறாக முன்வைக்கும் தமிழினி, தன்னைச் சுற்றிய சம்பவங்களும், புலிகளின் பொது நடத்தை சார்ந்த பொது "உண்மை" என்னும் ஒளியில் நின்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. புலிகள் காலத்தில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அதிருப்தியைக் கொண்டு, அதை முன்வைக்கின்றாரே ஓழிய, அவரே "கூர்வாளில்" முன்வைக்கும் "புரட்சிகரமான" வழியில் ஆராயவில்லை. "புரட்சிகரமாகச்" சிந்திப்பது பற்றி தமிழினியே பேசுகின்றதால், இந்த நூல் மீதான விமர்சனமாக இருக்கின்றது.

தமிழினி பெண்கள் குறித்து பேசும் போது "புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்துக்கு உட்பட்டார்கள் என்று கூற முடியாது" என்று கூறுகின்ற அவர், தன் அளவில் "புரட்சிகரமான புதிய சிந்தனை"யைக் கொண்டு இந்த நூல் வெளிவரவில்லை என்பதே கசப்பான உண்மை. "புரட்சிகரமான புதிய சிந்தனை"யாக தமிழினி எதைக் கருதுகின்றார்?

"புரட்சிகரமான புதிய சிந்தனை"யானது என்ன? சமூகப் பொருளாதார முரண்பாடுகளைக் களைவதை அடிப்படையாகக் கொண்டதே புரட்சிகர சிந்தனை. சமூகப் பொருளாதார முரண்பாடுகளைப் பாதுகாக்கின்ற, தக்க வைக்கின்ற எந்தச் சிந்தனையும், நடைமுறையும் புரட்சிகரமாக ஒருநாளும் இருப்பதில்லை.

சமூகப் பொருளாதாரத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை முன்னிறுத்திய செயற்பாடுகள், புரட்சிகரமானதாகவோ, மக்கள் இயக்கமாகவோ ஒரு நாளும் இருப்பதில்லை.

இயல்பாகவே பிற்போக்கான தனியுடமை மற்றும் தனிமனிதத் தன்மையை கொண்டதாகவே இருக்க முடியும். என்ன வேஷம் போட்டாலும், எந்தச் சொல்லைக் கொண்டு மூடிமறைத்தாலும், அனைத்தும் தனிவுடமை, தனிமனித கோட்பாடுகளைக் கடந்தவையல்ல. இந்த வகையில் அரசியல் இலக்கியத்தில் "புரட்சிகரமான புதிய சிந்தனை" மறுதளிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சூழலில், தமிழினியிடம் அதைக் காணமுடியாதுள்ளது. அவர் "புரட்சிகரமாகக்" கருதியது மேம்போக்கான புரிதல் மற்றும் தனிப்பட்ட அதிருப்தியைத்தான். அதாவது சொந்த அனுபவவாதத்தைத்தான்.

பெண்கள் மீதான தமிழினியின் அக்கறை சொல்லிமாளாது

தமிழினி பெண்ணாக இருந்ததால் ஆணாதிக்க இயக்கத்தில் பெண்கள் சந்தித்த பிரச்சனையை அணுகும் விதம் மிகவும் நுட்பமானது தனித்தன்மையானது. இந்த வகையில் பெண்கள் பிரச்சனை தொடர்பாக சமூகத்தின் மேல் அவர் கொண்டிருந்த அதிருப்தியை பல முனையில் வெளிப்படுத்துகின்றார்.

இயக்கத்தில் பெண்கள் இருந்த நிலையை "..கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ.. அதேபோல் கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்" மிகவும் துல்லியமான மிகவும் சரியான, ஓப்பீட்டுரீதியான உண்மையாகும்.

யாழ் மையவாத வெள்ளாள சாதிய ஆணாதிக்கத்தின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பை, புலிகள் தங்கள் அமைப்பு வடிவமாக்கினர். அதே ஏற்றத்தாழ்வு, அதே படிநிலை வடிவத்தில் சமூகத்தை உறைநிலைக்கு கொண்டுவந்து, அதைத் தலைமை தாங்கினர். இந்த வகையில் நிலவிய ஆணாதிக்க வக்கிரத்தையே, தமிழினி மிக அழகாக தன் தனிப்பட்ட சுய அனுபவத்தில் இருந்து ஒப்பிட்டுச் சொல்ல முடிந்திருக்கின்றது.

பெண்கள் தொடர்பாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பு சார்ந்த புலிகள் இயக்கம் எடுத்த முடிவுகளை, பெண்ணாக நின்று ஏற்க முடியாதவராகவும், அதேநேரம் அதையே முன்னின்று அமுல் செய்பவராக தமிழினி இருந்துள்ளார்.

சாதியம், ஆணாதிக்கம் என அனைத்து சமூக பொருளாதார முரண்பாடுகளையும் உறை நிலையில் வைத்திருக்கும் புலிகளின் அரசியல் செயற்பாடு போரை நடத்துவற்கு ஆட்களை திரட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தது. உறைநிலையைக் கடந்து இன்று விசுவரூபம் எடுத்து வெளிப்படுகின்ற இன்றைய சாதிய ஆணாதிக்க எதார்த்தத்தைப் பேணுவது தான் புலிகளின் அன்றைய அரசியல் கொள்கையாகும்.

ஆண் மேலாதிக்க இயக்கத்தினது அதிகாரம் குறித்து தன் அனுபவத்தை தமிழினி "பல வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்வதற்கான அனுமதியைக் கேட்கும் போது தர்மசங்கடமான பிரச்சனைகள் எழுவது வழக்கம்" என்கின்றார். வயது குறைந்த இளம் பெண்களைக் கோருவது, அடங்கி நடப்பார்கள் என்பதால்தான். ஆணை விட பெண்ணினது வயது குறைவாக இருக்க வேண்டும் என்பதே திருமணம் தொடர்பான சமூக நடைமுறை. புலிகள் இயக்கத்தில் அதிகாரத்தைக் கொண்டு, கேட்பாரற்ற மிகக் குறைந்த வயது பெண்களைக் கோரிய போது முரண்பாடாக மாறுகின்றது. ஆணாதிக்க அதிகாரம், தலைமைத்துவம் என்ற இடத்தில் இருந்து கொண்டு, பெண்களை குடும்பம் என்னும் ஆணாதிக்க வடிவத்துக்குள் பலியிடுகின்ற இணக்கமான சங்கடங்களையே, தமிழினி இங்கு எடுத்துக் காட்டுகின்றார்.

இந்த ஆணாதிக்கம் குறித்து பாலசிங்கம் முன்வைத்த கருத்தை, தமிழினி தனது கருத்தாக மீள கூர்வாளில் முன்வைக்கும் போது ".. தங்களோடு சண்டைக் களத்தில் நின்று போராடிய பெண் போராளிகளைக் கலியாணம் கட்டுவம் என்று யோசிக்காமல், அழகான, நல்ல உத்தியோகம் பார்க்கின்ற அல்லது வெளிநாட்டில் சொந்தக்காரராக இருக்கிற பொம்பிளைகளைத் தேடித் திரிகினம்" என்கிறார். இந்த உண்மையானது அர்ப்பணிப்பு தியாகம் என அனைத்தும் யாழ் மேலாதிக்க சாதியம் வர்க்கம் கடந்தல்ல என்ற உண்மையையே உணர்த்தி நிற்கின்றது. இங்கு யுத்தக் கருவிகளாகவே மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட அதேநேரம், பெண்களை உணர்ச்சியற்ற மந்தையாக இருக்குமாறு போராட்டம் வழிநடத்தி இருக்கின்றது.

இதற்கு உதாரணம் தான் தமிழினி எடுத்துக்காட்டுகின்ற, மூன்று பெண்கள் இயக்கமல்லாத வெளியாருடன் பாலியல் தொடர்பைக் கொண்டு இருந்தாகக் கூறி, அனைத்துப் பெண்களையும் கூட்டி அவர்கள் முன் மரணதண்டனை வழங்கிய ஆணாதிக்கம், குறித்த ஆண்களுக்கு மக்கள் முன் வைத்து மரண தண்டனையை வழங்கியது. புலி ஆண்கள் புலி இல்லாத வெளிப் பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவாடுவதையும், திருமணம் செய்வதையும் தடுக்கவில்லை. பிரபாகரனின் திருமணம் உட்பட எத்தனையோ சம்பவங்கள் புலிகள் வரலாற்றில் உண்டு. புலி ஆணாதிக்கம் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி வழங்குகின்றது. இதுதான் ஆணாதிக்க புலிக் கோட்பாடாகவும், புலிக் கட்டுப்பாடாகவும், அதன் ஒழுக்கக்கேடுகள் "ஒழுக்கமாகவும்" இருந்து இருக்கின்றது. விபச்சாரம் செய்யும் பெண்ணை தண்டிக்கும் உலகளாவிய ஆணாதிக்கச் சட்டங்கள், விபச்சாரம் செய்யும் ஆணைத் தண்டிப்பதில்லை. இதை இங்கு ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.

புலிக்கு பின் பெண்களின் நிலை குறித்து தமிழினி


பாலியலை முன்னிறுத்தி ஆணாதிக்க இனவாத அரசியல் செய்கின்ற போக்கு, புலிகளின் ஆரம்ப காலம் முதல் தொடருகின்றது. இருந்தபோதும் தமிழினி யுத்தத்திற்கு பிந்தைய தமிழ் இனவாத அரசியலும், தமிழ் ஊடகங்களும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி பிழைப்பதை எதிர்த்து எழுதும் போது, இராணுவம் போல் "விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களில் இருந்தவர்கள் கூட பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்" என்ற உண்மையை போட்டு உடைத்து விடுகின்றார். இராணுவம், புலி ஊடகவியல் எதுவும், ஆணாதிக்க சிந்தனை முறைக்கும், அதன் பொது நடத்தைக்கும் விதிவிலக்கல்ல.

தமிழினி தொடர்ந்து இந்தப் போக்கை அம்பலப்படுத்தும் போது "..விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால் அந்தப் பெண்ணை மானமிழந்து போனவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பாங்கு கொண்ட மனிதர்கள் சமூகத்தில்" இருப்பது போல் "... தமிழ்ப் பெண்களின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டு அரசியல் நலன் தேடும் சுயநலமிகளும்..." இருக்கவே செய்கின்றனர். இந்த வகையில் "இடதுசாரியம் மார்க்சியம்" பேசும் இனவாத தமிழ் தேசியம் பேசும் சாக்கடைக் கூட்டம் வரை இதற்குள் அடங்கும். இலங்கையில் ஒரு நிகழ்வு என்றால், அதை அரசு ஆதரவாகக் காட்டுவது முதல் பெண் இலங்கை இராணுவத்தில் இணைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவளை "மானம்கெட்டவளாக" காட்டுவது தமிழ் அரசியலாக இருக்கின்றது. கொலைகாரனும், பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சிவராமை (தராகியை) ஊடகவியலாளனாக கொண்டாடும் ஊடகங்கள், பெண்களை பாலியல் ரீதியாக சொற்களால் வன்புணர்ந்து கொச்சைப்படுத்தி காட்டுவதே அதன் பிழைப்பாக இருக்கின்றது.

இதைத்தான் தமிழினியும், சகபெண்களும் எதிர்கொள்கின்றனர். அது குறித்து தமிழினி "போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தி பார்க்கின்றது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகின்றது. போராட்டத்தில் பங்குபெற்று உயிர்மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்தான் வந்திருக்கின்றார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது..." ஊடகங்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும், இனத்தைச் சொல்லிப் பிழைக்கும் "இடதுசாரிகளினதும்" நடத்தையாக ஒழுக்கமாக மாறியிருக்கின்றது. இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதையே - தமிழினி சமூகத்திற்கு முன் கேள்வியாக விட்டுச்சென்று இருக்கின்றார்.

புலிகளின் போராடும் மனநிலையைத் தகர்த்தது எது?

புலிகளின் முக்கிய யுத்த தளபதியும் தலைவருமான விதுசா, தமிழினியிடம் "இந்தச் சண்டையில் நாங்கள் வெல்லுவம் எண்டு நீ நினைக்கிறியா?" என்று கேட்டு "எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்படி ஒரு வாழ்க்கை? உலகம் எங்கேயோ போயிட்டுது, நாங்கள் மட்டும் காட்டுக்குள்ளும், சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருகின்றோம்" என்று கூறுகின்ற மனநிலை தான், பெரும்பாலான புலித்தலைவர்களின் நிலையும் கூட என்று தமிழினி தன்னையும் சேர்த்துக் கூறுகின்றார்.

யுத்தத்தை வலிந்து தொடங்கி அதைச் செய்தவர்கள், யுத்தம் செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. புலிகளின் தலைவரும், அவரை அண்டிப் பிழைத்த தளபதிகளும், யுத்தம் மூலம் செல்வத்தை பெற்ற (புலம்பெயர் புலி மாபியாக்கள் வரை) புலிக் கூட்டமும், யுத்தம் ஊடாக பிழைப்பை நடத்திய ஊடகங்களுமே யுத்தத்தை விரும்பி அதை திணித்தன.

"அண்ணை - தலைவர்" "ஆயுதத்தை" முன்னிறுத்தி யுத்தத்தில் ஊன்றி நிற்க மற்றவர்கள் பணத்தை சம்பாதிக்க யுத்தம் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. புலிகளில் இருந்து என்னத்தைக் கண்டோம் என்று தமிழினி சொந்த அவலம், மறுபக்கத்தில் யுத்தத்தை நடத்தி புலியை அழித்ததன் மூலம் புலிக் கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கின்றது என்பதே எதார்த்தம்.

யுத்தமற்ற அமைதிக் காலமானது, உண்மையில் பொருட்களை சந்தைப்படுத்திய காலம். யுத்த பிரதேசத்திற்குள் நவீன பொருட்கள் சென்றதுடன், அதை அனுபவிக்கின்ற குறுகிய நுகர்வுப் பண்பாட்டையும் கொண்டு சென்றது. பணப்புழக்கம் அதிகரிக்க வாழ்க்கை முறையே தலைகீழாக மாறியது.

இந்தப் பின்னணியில் யுத்தப் பிரதேசத்தினுள் புலம்பெயர் சமூகத்தின் ஆடம்பரமான நகர்வுகள், புலித் தலைவர்களுக்கு கொடுத்த உயர்ரகமான அன்பளிப்புகள், தன்னார்வ நிறுவனங்களும் மேற்குநாடுகளும் புலிக்கு கொடுத்த அன்பளிப்புகள், இவை அனைத்தும் விரும்பியோ விரும்பாமலோ யுத்த மனநிலையில் இருந்து தளபதிகளை நுகர்வு மனநிலைக்கு மாற்றி விடுகின்றது. இதுதான் விதுசாவின் கூற்று மட்டுமின்றி, தமிழினியின் மனநிலையும் கூட.

சாதாரணமான போராளிகள் இதே சூழலுக்குள்ளும், அதேநேரம் தங்கள் உறவுகளுடன் மீள உறவுகளை ஏற்படுத்திய போது, ஏற்பட்ட புதிய மனக் கிளர்ச்சி யுத்தமற்ற அன்பான மனித உறவுகள் கொண்ட இயல்பான நுகர்வு வாழ்க்கையைக் கோரியது.

இந்த பின்னணியில் யுத்தம் என்பது ஒட்டுமொத்தத்தில் வலிந்து திணிக்கப்பட்ட ஆயுதத்தையும் பணத்தையும் காதல் செய்த முட்டாள்களினதும் சுயநலமிகளினதும் விருப்பமே யுத்தமாகும்.

முடிவாக

தமிழினி பதிலளிக்கும் முன்பே அவரின் மரணம் முந்திவிட்டது. அவர் தன்னையொத்த பெண்கள் நிலை குறித்து முன்வைத்தவை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் எதார்த்தம். இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றோம் என்பதற்கு சமூகம் என்ற வகையில் அனைவரும் நடைமுறையில் பதிலளித்தாக வேண்டும்.


ரயாகரன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com