Saturday, June 18, 2016

இந்திய விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்க 3 பெண் பைலட் சேர்ப்பு

இந்திய விமானப்படை வரலாற்றில் புதிய சாதனையாக போர் விமானங்களை இயக்குவதற்கு முதல் முறையாக 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார். இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஆண் பைலட்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக பெண் பைலட்களும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்று வந்தனர். இதில் பயிற்சி முடித்த பீகாரைச் சேர்ந்த பாவனா கந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங் ஆகிய மூன்று பெண் பைலட்களும் விமானப்படையில் இன்று தங்கள் பணியில் சேர்ந்தனர்.

இவர்கள் 3 பேருக்கும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான ஹாக் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையில் பெண் பைலட்களை சேர்ப்பதென மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்து அறிவித்தது. இதை தொடர்ந்து, முதல் கட்ட பயிற்சியில், மூன்று பெண் பைலட்களும் சுமார் 150 மணி நேரம் இங்கிலாந்து போர் விமானத்தை ஓட்டி சாதனை படைத்தனர். இந்நிலையில், ஐதராபாத் துண்டிக்கல் விமான படை தளத்தில் விமானப் படை பயிற்சி முடித்த இளம் வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் மூன்று பெண் பைலட்களும் இடம் பெற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.

பெண் பைலட் மோகனாவின் தந்தை விமானப் படையில் அதிகாரியாக உள்ளார். அவரது தாத்தாவும் விமானப் படையில் பணி புரிந்தவர். பாவனாவின் தந்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவானியின் தந்தை மத்திய பிரதேச அரசில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். விமானப் படை தளபதி அரூப் ராகா கூறுகையில், ''பெண் பைலட்கள் என்பதால் சிறப்பு சலுகை எதுவும் அளிக்க முடியாது. விமான படையின் விதிமுறைகளின்படி அவர்கள் பணியாற்றுவார்கள்'' என்று தெரிவித்தார்.

பெண் பைலட்கள் கூறுகையில், ''இப்படியொரு பொன்னான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கனவு நிறைவேறியுள்ளது. நாங்கள் எங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவோம்'' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com