Sunday, May 29, 2016

ஒரு வருடத்தில் யாழ்ப்பாண கல்விநிலையை உயர்த்துவோம் – நீதிபதி இளஞ்செழியன்

நான் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது தண்டனைகள் தாம் சமூகத்தை திருத்தும் என நம்பிக் கொண்டு வந்தேன். ஏனெனில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் அகோரம். மீண்டும் எங்களது சமுதாயம் மோசமான நிலைக்கு சென்றுவிடக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது.

திட்டமிட்டு, குறிக்கப்பட்ட காலவரையறைக்குள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவாவில் தான் கல்முனையிலிருந்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று வந்தேன். செய்கின்றேன், செய்துகொண்டிருப்பேன். செய்து முடிக்கும் வரையும் ஓய மாட்டேன். இதனை நான் உங்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எந்த தடங்கல்கள் வந்தாலும், நான் நேர்ப் பாதையில் செல்கின்றேன். குறுக்குப் பாதையில் வரும் தடைகள் அத்தனையினையும் வெட்டிக்கொண்டு போவேன். எங்களது சமூகம் நீதி நியாயமாக வாழவேண்டும். அதற்கு நீதி நியாயமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த கோணத்தில் எங்களது பணி அமைந்திருக்கின்றது.

பட்டம் பதவிகள் வீட்டை அலங்கரிப்பதற்கல்ல. இதை வைத்து சமூகத்தை எவ்வகையில் வழிகாட்ட முடியும் என சிந்தித்து, அந்த வகையில் நாம் அதனை கொண்டு செல்ல வேண்டும்.

விசேடமாக நான் கவலைப்படும் ஒன்று எங்களது மாணவர் சமுதாயம் பற்றியது. மாணவர் சமுதாயம் என்பது சிறுவர்களைக் கொண்டது. அவர்கள் அப்பாவிகள். அந்த அப்பாவிகள் தடம்புரண்டு போக நாம் விடக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மாணவர் சமுதாயத்தை திருத்த வேண்டும். அதில் நீங்கள் மூர்க்கமாக இருங்கள். என்னுடன் ஒத்துழையுங்கள். ஒரு வருடத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் 1970 ஆண்டிருந்த கல்வி கலாசாரத்தை ஏற்படுத்துவோம்.

இதனை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், முப்பது ஆண்டு காலம் நாம் கல்வியை இழந்து விட்டோம். இனியும் இழப்பதற்கு தயாரில்லை. இழந்த கல்வியை நாம் மீண்டும் பெற வேண்டும். 70ம் ஆண்டு கொடிகட்டிப் பறந்தது யாழ். மாவட்டம். அனைத்து பல்கலைக்கழகங்களையும் நிரப்பியது யாழ்.மாவட்டம். இன்று யாழ்.மாவட்டத்தின் கல்வி நிலையை பாருங்கள். 21ஆவது இடத்திற்கு யாழ்.மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது. ஒரு வருடம் அனைவரும் ஒன்று சேர்வோம். நீதிமன்றம் ஒன்று சேரும். அனைத்து சமூக சேவையாளர்களும் ஒன்று சேருங்கள். ஆசிரியர், அதிபர்கள் ஒன்று சேருங்கள். ஒரு வருடத்தில் யாழ்ப்பாணத்தில் சிறந்த கல்வித் தரத்தை கொண்டுவந்து, சிறந்த ஒழுக்கப் படையை கொண்டு வந்து பல்கலைக்கழகங்களை நிரப்ப வேண்டும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை.

நீங்கள் வாள்வெட்டுக்காரர்களுக்கு பின்னால் போகத் தேவையில்லை. கொள்ளைடிப்பவர்களுக்கு பின்னால் போகத் தேவையில்லை. அவர்களை நான் பார்த்துக்கொள்ளுவேன். அவர்களை அடக்க வேண்டியது என்னுடைய கடமை. நீங்கள் அப்பாவி மாணவர்களை அடக்குங்கள். அவர்கள் பாவம் அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் வழிமாறி செல்ல விடக்கூடாது. அந்த மாணவர் சமுதாயத்திற்கு நாங்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களை சிறந்த கட்டமைப்பிற்குள் கொண்டு வர நீதிமன்றம் மட்டும் போதாது. போலிஸ் மட்டும் போதாது. அனைத்து தரப்பினரும் அதற்கு முன்வர வேண்டும்.

கடந்த இரண்டு கிழமையாக யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகின்றது. அமைதி கொண்டுவரப்பட்டது. மூன்று கிழமைக்கு முன்னர் ஒரு இரவு நீங்கள் தூங்க முடியாத நிலை இருந்தது. கொள்ளைகள், வாள் வெட்டுக்கள், சந்தி சண்டித்தனங்கள் அனைத்தையும் பத்து பதினைந்து நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். அந்த கட்டுப்பாடு நிலைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த பத்து நாட்களாக தாங்கள் அமைதியாக இருக்க முடிவதாக மக்கள் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள் எங்களுக்கு சந்தோசமாக இருக்கின்றது.

நீதிபதி என்ற முறையில் நான் எனது கடமையைத் தான் செய்ய வந்துள்ளேன். நீதிபதி என்பவரது கடமை என்ன? சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கி, சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்கி, நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமைப்பாடு நீதிபதிக்கு உண்டு. அந்த வகையில் எனது கடமைகளை செய்கின்றேன். தண்டனை மட்டும்தான் சமுதாயத்தை திருத்தும் என்பது எனது வாதம். அதற்காக மாணவர் சமுதாயம் தண்டிக்கப்படக் கூடாது என்பதும் எனது வாதம். ஏனெனில் அவர்கள் சிறுவர்கள், அப்பாவிகள். பதினெட்டு வயதிற்கு குறைந்த அவர்களுக்கு பிரச்சினைகளின் பாரதூர தன்மைகள் விளங்காது.

எனது கைகள் நடுங்குகின்றன. ஒரு மாணவனை விளக்கமறியலுக்கோ, சிறைச்சாலைக்கோ அனுப்புவதற்கு எனது கரங்கள் மறுக்கின்றன. எனது இதயம் மறுக்கின்றது. மாணவர்களை விளக்கமறிலுக்கு அனுப்ப நான் தயங்குகின்றேன். சட்டத்தின் முன் யாவரும் சமன். எனினும் மாணவர்களின் நலன் எனக்குத் தேவை.

சிறந்த பெற்றோர்கள், சிறந்த கல்விமான்கள் இங்கு இருக்கின்றார்கள். நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு வழிகாட்டுங்கள். வீதிகளில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போதும், அவர்கள் பாடசாலையை விட்டு திரும்பும் போதும் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்கும் படி அவர்களுக்கு கூறுங்கள்.
தயவு செய்து உங்கள் பெண் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். அவர்கள் ரியூசனுக்கு செல்லும் போது அவர்களை கண்காணிக்க வேண்டும். ரியூசன் நடைபெறுகின்றதா? பிள்ளை பாடசாலைக்கு சென்றாவா என்பது குறித்தெல்லாம் பெற்றோராகிய நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். சம்பவம் ஒன்று நடந்து முடிந்ததன் பின்பு வழக்கு விசாரணைகள் எல்லாம் இரண்டாவது விடயம். நடப்பதற்கு முன்னர் பாதுகாக்க வேண்டும். குற்றத்தை எப்படி தடுப்பது- குற்றச்செயலிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்பது தான் முதலில் எங்களுக்கு தேவையானது.

யாருமே பிறப்பால் கிரிமினல்கள் இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை கிரிமினல்களாக்குகின்றது. அவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலை அமைய நாம் இடமளிக்கக் கூடாது.
சந்திகளில் கூடுவதை நாம் நிறுத்த வேண்டும். ஐந்து பேருக்கு மேல் சந்திகளில் கூடி நின்றால் அது சட்டவிரோத கூட்டம். கைது செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனை. பெண்பிள்ளையின் கையைப் பிடித்தால் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை. பெண்பிள்ளையை கடத்தினால் ஏழு வருட சிறைத்தண்டனை. பாலியல் வல்லுறவிற்கு இருபது வருட சிறைத் தண்டனை. கொலை செய்தால் மரண தண்டனை. இது சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டுளளது. இதனை நாங்கள் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும்.

நான் யாழ். மாவட்டத்திற்கு வந்ததன் பின்னர் ஒன்பது மரணதண்டனைகளை விதித்துள்ளேன். இருபதிற்கு மேற்பட்டோருக்கு 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனைகளை வழங்கியுள்ளேன். நடந்தவை கொலை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றங்கள். இதற்கெல்லாம் ஆலோசனைகள் கிடையாது. தண்டனைகள் மட்டுமே தீர்ப்பு. இவ்வாறான தண்டனைகள் மூலம் குறுகிய காலகட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் நல்லதொரு சமுதாயத்தை கட்டமைப்பது என்னுடைய கடமை. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய உங்களது கடமை.

நான் நேரான பாதையில் செல்கின்றேன் நீஙகள் என்னுடன் வாருங்கள். செய்வோம். இன்னும் ஒரு வருடத்தில் எங்களது கல்வி உச்சநிலையை அடைய வேண்டும்.

நான் படித்தது பரியோவான் கல்லூரியில். அங்கு ஒழுக்கத்தை சொல்லித் தந்தார்கள் வழிநடத்தினார்கள். படித்தேன், இன்று நீதிபதியாக வந்து நிற்கின்றேன். ஒவ்வொரு மாணவனுக்கு பின்னால் ஒரு ஆசிரியர் நிற்பார். ஒரு தந்தை நிற்பார். அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கவ்வியையும் சொல்லிக் கொடுங்கள். அவர்களை எதிர்கால நாயகர்களாக்குங்கள். இது உங்களுடைய கையிலுள்ளது.

இளைஞர்களை பெற்றெடுத்த பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்குங்கள். சட்டத்தின் வரம்புகளை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒழுங்குகளை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள்.

சுதந்திரம் என்பது என்ன? உன்னுடைய விரலை எனது மூக்கு நுனிவரை கொண்டு வருவது உனது சுதந்திரம். மூக்கைத் தொட்டால் உனது மூக்கை உடைப்பது எனது சுதந்திரம். அது தான் தற்காப்பு சுதந்திரம். அதனை நீங்கள் பின்பற்றுங்கள். ஒவ்வெருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. அதனை நீதிமன்றில் வந்து சொன்னாலும் பயமில்லாமல் சொல்லுங்கள். என் கையை பிடித்தான் மூக்கை உடைத்தேன், என் தங்கையின் கையை பிடித்தான் அவனது மூக்கை உடைத்தேன் என பயமில்லாமல் சொல்லுங்கள். நீதிமன்றம் உங்களை விடுதலை செய்யும்.

ஏனெனில், அதுதான் தற்காப்பு உரிமை. சட்டப் புத்தகத்தில் உள்ளது. ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல், மரணம் விளைவிக்கும் சந்தர்ப்பத்தில் அவரை கொலை செய்யலாம். இதனை தற்காப்புரிமை என சட்டம் சொல்கிறது. என்னை ஒருவன் கொல்ல வருகின்றான் என்றால், நான் இரண்டு கைகளாலும் அவனை கும்பிட்டுக்கொண்டிருக்க மாட்டேன். எதிர்த் தாக்குதல் நடத்துவேன். அதனால் அவன் இறந்தால் அது எனது தற்காப்புரிமை. ஆகவே தற்காப்புரிமை எல்லோருக்கும் உள்ளது.

மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள். ஒரு ஒழுக்கப் படையை அமையுங்கள். பாடசாலைகளில் ஒழுக்கப் படைகளை அமையுங்கள். நல்லதொரு கல்விச் சமுதாயத்தை உருவாக்குவோம். ஒரு வருடத்தில் எங்களது பல்கலைக்கழகங்கள் மாணவர்களால் நிரப்பப்பட வேண்டும். யாழ்.குடாநாடு சரித்திரம் படைக்கின்ற இடமாக மாற வேண்டும்.

வாள்வெட்டு, கொள்ளை, கடத்தல் சொல்லவே வெட்கமாக இருக்கின்றது.

வெளி மாவட்டங்களுக்கு நான் நீதிபதியாகப் போகின்றேன். தற்போதும் போகின்றேன். திருகோணமலை மாவட்டத்திற்கு நீதிபதியாக போகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு போகின்றன். இங்கெல்லாம் பதில் நீதிபதியாக போய் வருகின்றேன். அங்கு கேட்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் என் இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்று. அது எப்படிப்பட்ட ஊர் அந்த ஊரில் ஏன் வாள்வெட்டு நடக்கிறது. அங்கு ஏன் போதைவஸ்து வந்தது. ஏன் சந்தியில் நின்று அடிபடுகின்றார்கள். யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் எங்கு போனது? இன்றும் நாங்கள் யாழ் நூலகத்தை ஆசியாவின் கல்விக்களஞ்சியம் என்று கூறிவருகின்றோம். பெருமைப்படுகின்றோம். அப்படிப்பட்ட யாழ்ப்பாணம் இன்று ஏன் இவ்வாறான பாதையில் செல்கின்றது? இதனைத் திருத்துங்கள் என அங்கு அவர்கள் என்னிடம் கேட்கின்றார்கள். நான் என்னால் இயன்றவரை செய்வேன்.

சட்டம், சமுதாயம், கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றை உள்ளடக்கி, என்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் நான் செய்வேன்.

ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள். நீதித்துறையின் விசேட அறிக்கையாளர்கள், சித்திரவதை தொடர்பான விசேட அறிக்கையாளர்கள். அவர்கள் வந்த சமயம் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் உச்சக்கட்டத்திலிருந்தன. என்னைக் கேட்டார்கள் என்ன நடைபெறுகிறது என்று. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் ஒரு நீதிபதியாக இருந்தும், என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனது இயலாமை வெளிக்காட்டப்பட்டுவிடுமோ என பயந்தேன். பின்னர் கடும் நடவடிக்கை எடுத்தேன். தற்போது சட்டம் ஒழுங்கு ஓரளவிற்கு கட்டுப்பட்டிற்குள் வந்துள்ளது. தொண்ணூறு வீதமான மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். அனைவரதும் ஒத்துழைப்பு எனக்குத் தேவை. நீதிபதியான நான் நீதிமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எனது கடமையை செய்வேன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி இரு மாவட்டங்களுக்கும் கடமை நீதிபதி நான்தான். அந்த வகையில் என்னால் இயன்றவற்றை செய்வேன்.

குடாநாடு அமைதியாக இருக்க வேண்டும். எங்களது பெண்கள் யாழ். வீதிகளில் இரவு 12 மணிக்கும் சுத்நதிரமாக நடமாடும் குரல்கள் எமக்கு கேட்க வேண்டும். அந்தப் பெண்கள் தாங்களுக்கு எவ்வித பாதகாப்பும் தேவையில்லை நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என்று கூறும் சமுதாய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த குரல்கள் கேட்கும் போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவேன்.

நான் எப்பொதும் நேசிப்பது மூன்று இனங்களும் வாழும் மாவட்டத்தில் நீதிபதியாக இருப்பதைத்தான். ஏனெனில், அங்குதான் பிரச்சினைகள் அதிகம். அந்த வகையில் வவுனியாவில் ஒன்பது வருடங்கள் இருந்தேன். திருகோணமலையில் நான்கு வருடங்கள் இருந்தேன். கல்முனையில் மூன்று வருடங்கள் இருந்தேன். இன்று 99 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழும் தனித்தமிழ் மாவட்டத்தில் கடமையாற்றுகின்றேன். மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது நான் பிறந்த மாவட்டம். நான் பிறந்த இந்த மாவட்டத்திற்கு நான் ஒரு கடமையை செய்யக் கூடாதா? பிறந்த மண்ணிற்கு செய்யும் அந்த கடமை என்னை அழைக்கின்றது. அதனை நான் செய்கின்றேன். அதனை நாங்கள் அனைவரும் இணந்து செய்வோம்.

(யாழ்ப்பாணத்தில் சர்வோதயம் நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் ஆற்றிய உரை)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com