Saturday, April 16, 2016

யூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்.. -விஜயகுமாரன்-

இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான் என்று மார்க், மத்தியு என்ற சீடர்கள் எழுதிய ஆகமங்கள் (கொஸ்பல்) குறிப்பிடுகின்றன.

இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) அன்று கல்லறையில் இருந்து வெளி வருகிற கதையின் நம்பியாராக யூதாஸ் இருக்கிறான்.

நமது ஈழக்கதைகளிலும் துரோகிகள் இன்று வரையும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டாயிரம் வருடக்கதை என்று சொல்லப்படுகிற பைபிளின் துரோகியான யூதாசின் கதையிலும், இந்த நூற்றாண்டின் ஈழக்கதையின் துரோகிகளையும் ஒப்பிட்டுப் பார்த்த போது என் சிற்றறிவிற்கு தென்பட்ட சில ஒற்றுமைகளையும் அதையொட்டி எழுந்த சில கேள்விகளையும் இங்கு பதியா விட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதனால் பென்னெழுத்துக்களால் எனது ஆய்வை இங்கு பொறிக்கிறேன்.

துரோகிகளைப் பற்றி எழுதுவதால் நானும் துரோகிகள் பட்டியலில் இடம்பெறும் அபாயம் இருந்தாலும் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற நம்பிக்கையுடன் எழுதி மேல் செல்கிறேன்.

இஸ்ரேலின் வடபகுதியான கலிலீயின் நசரேத்தில் இருந்து தன்னை “கடவுளின் குமாரன்” என்று சொல்லி வந்த இயேசு கிறிஸ்து, இஸ்ரேலின் தலைநகரான ஜெருசலமிற்கு கழுதையில் ஏறி வருகிறார்.

கீபுரு மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் பைபிளில் “ஒரு ரட்சகன், யூதர்களை காப்பாற்ற வருவான்” என்ற தீர்க்கதரிசனத்தை மெய்யாக்க்குவதற்காக வேண்டுமென்றே அவர் ஜெருசலம் செல்கிறார்.

அவரின் மேல் பற்றுக் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. இயேசு ஜெருசலமின் பெரிய யூதக் கோவிலிற்கு சென்று கடவுளுடைய இல்லத்தை சந்தையாக மாற்றுகிறீர்கள் எனச் சண்டை பிடிக்கிறார்.

யூத மத குருமார்கள் இயேசு “தேவகுமாரன்” என்று தன்னைச் சொல்லி வந்தது யூத மதத்திற்கு எதிரானது என்பதாலும், அவரால் தங்களினுடைய இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள்.

இஸ்ரேலை ஆண்டு வந்த ரோமர்களும் அவருடைய கவர்ச்சி (charisma) யூதர்களிடையே ஒரு எழுச்சியை உண்டாக்கி ரோமப்பேரரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை உருவாக்கக் கூடும் என்று பயந்தார்கள்.

மேலும் உலக மக்களின் பாவத்தின் தண்டனைக்காக தன்னைப் பலி கொடுக்கும் இயேசுவின் முதலாவது வருகைக்கான தருணத்தை நிறைவேற்றப்பட வேண்டிய காலமும் நெருங்கி விட்டது என கொஸ்பெல்கள் தெரிவிக்கின்றன.

யூதாஸ் பேராசையினால் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுக்கிறான். மேலும் இயேசு மனிதர்களின் பாவங்களிற்காக தன்னை பலி கொடுக்க வேண்டும் என்று தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மையான தந்தையான தேவ அப்பாவின் சித்தத்தின் படி இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும்.

ஆதலால் தேவ அப்பாவின் நாடகத்தில் தன்னையறியாமலே ஒரு பாத்திரமாகி யூதாஸ் காட்டிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை எல்லாம் வல்ல தேவ அப்பா ஜூதாசை படைக்கும் போதே தலையில் எழுதி விட்டார்.

அப்படி என்றால் தன் மகனை தியாகியாக்க இன்னொரு தாயின் மகனை வேண்டுமென்றே துரோகியாக தேவ அப்பா படைத்திருக்கிறார். ஒரு கடவுள் செய்கிற வேலையா இது?

யூதாஸ் துரோகி என்றால் அவனை துரோகியாக படைத்த எல்லாம் வல்ல தேவ அப்பாவை என்னவென்று அழைப்பது?

சாதாரண மனிதர்கள் செய்தது பாவமென்றால் எல்லாம் வல்ல கடவுளான தேவ அப்பா செய்த தேவ பாவத்தை என்னவென்று சொல்வது?

மனிதர்களின் பாவங்களிற்காக இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டுமென்றால் இப்படி ஒரு மனிதனை துரோகியாக வேண்டுமென்றே தேவ அப்பா படைத்த பாவத்திற்காக ஒருத்தரும் தங்களைப் பலி கொடுக்கத் தேவையில்லையா?

இயேசு யூதர்களின் பெரிய கோவிலிற்குப் போய் பகிரங்கமாக வியாபாரிகளோடு சண்டை போடுகிறார். அவரைக் கண்டதும் மீட்பர் வந்திருக்கிறார் என்று பெரிய கூட்டம் கூடுகிறது.

அவரும் அவரது பன்னிரு சீடர்களும் ஒளித்திருக்கவில்லை. இயேசுவை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அவரை யூத குருமாரோ, ரோம படையினரோ நேரே போய்ப் பிடிக்க வேண்டியது தானே?

எம்.ஜி.ஆர் கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டை மட்டும் ஒட்டி விட்டு மாறுவேசத்தில் எதிரிகளிற்கு அடையாளம் தெரியாதாம் என்று தமிழ்ப்படங்களில் எதிரிகளின் கோட்டைக்குள் போவது போல இயேசு ரோமர்களின் கோட்டையான ஜெருசலத்திற்குள் போகவில்லை.

பிறகு ஏன் யூதாஸ் மினக்கெட்டு இயேசுவின் கன்னத்தில் கொஞ்சி அடையாளம் காட்ட வேண்டும்?

இயேசுவை யூதாஸ் முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் என்ற பைபிள் புராணக் கதையைப் போல ஈழப்போராட்டமும் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு வல்லரசுகளின் துணையோடு இலங்கை அரசால் அழிக்கப்பட்டது என்று சில ஈழப்புராணங்கள் உலா வருகின்றன.

இந்தியா கொடுத்த இராணுவப்பயிற்சியை எல்லா இயக்கங்களும் இரு கை நீட்டி ஏற்றுக் கொண்டன. மேற்கு நாடுகளின் அரசாங்கங்களும், உளவாளிகளும் புலம்பெயர்நாடுகளில் இருந்த “தேசபக்தர்களுடன்” நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தன.

“ஒபாமாவிற்கான ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு” என்று உலக மகா கொலைகாரர்களான அமெரிக்க ஜனாதிபதிக்காக சங்கம் வளர்த்த அல்லக்கைகள் உலக வரலாற்றிலேயே இவர்களாகத்தான் இருக்கும். இப்படி உளவாளிகளுடனும், வல்லரசுகளுடனும் இரண்டறக் கலந்து விட்டு “எங்களை துரோகிகள் காட்டிக் கொடுத்து விட்டார்கள்” என்கிறார்கள்.

ஈழப் போராட்டத்தில் முதலே உட்கொலைகள் பற்குணம், கண்ணாடி பத்மநாதன் என்று தொடங்கியிருந்தாலும் புலிகளில் இருந்து விலகி புளொட் அமைப்பைக் கட்டி இயங்கிக் கொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் கொலை செய்து துரோகியாக்கியது தான் துரோகி என்று அறிவிக்கப்பட்ட முதலாவது கொலை.

சுந்தரம் புலிகளை விட்டு விலகி தனிப்பட்ட வாழ்க்கை வாழவில்லை. வெளிநாடு போய் வசதி வந்த பிறகு தேசபக்தி பேசவில்லை.

அவரது அரசியலின் சரி, பிழைகளிற்கு அப்பால் அவர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டார்.

அப்படியென்றால் வெளிநாடு போகாமல், தனிப்பட்ட வாழ்வு வாழாமல் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது தான் துரோகமா?

ஜே. ஆர். ஜெயவர்த்தனா என்ற ஐக்கிய தேசிய கட்சியின் இனவெறியன் திட்டமிட்டு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளினால் அல்லல்பட்டு வன்னிக்கு வந்த மலையகத்தின் ஏழை தோட்டத் தொழிலாளர்களின் துயர் துடைக்க டேவிட் அய்யா, ராஜசுந்தரம் போன்ற காந்தியம் அமைப்பினைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து செயற்பட்டவர் சந்ததியார்.

வங்க தேசத்திலும், முக்தி பாகினி விடுதலை அமைப்பிலும் இருந்த முற்போக்காளர்களை கொன்று இந்தியா எப்படி தனது கைப்பாவைகளைக் கொண்டு வங்கதேச புரட்சியை அழித்தது என்பதை “வங்கம் தந்த பாடம்” என்று தனது புத்தகத்தின் மூலம் விளக்கி இந்திய வல்லரசை ஈழப்போராட்ட அமைப்புகள் சார்ந்திருப்பதன் அபாயத்தை ஆரம்ப நாட்களிலேயே அறிய வைத்தவர்.

அவர் இணைந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பின் அராஜகங்களையும், ஜனநாயக மறுப்பையும் எதிர்த்தினால் துரோகியாக்கப்பட்டு தலைமையினால் கொல்லப்பட்டார்.

மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து வந்து மக்களிற்காகவே வாழ்ந்த அந்த போராளியை கொன்று விட்டு தலையை ஓரிடத்திலும், உடலை இன்னொரு இடத்திலும் போட்டிருந்தார்கள். மக்களை நேசித்தது தான் அவன் செய்த துரோகமா?

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைமையுடன் முரண்பட்டு ஆனால் அமைப்பை விட்டு விலகாமல் குறிப்பிட்டளவு போராளிகளுடன் அவ்வமைப்பின் இராணுவப்பிரிவின் பொறுப்பாளர்களில் ஒருவரான தாஸ் வடமராட்சியில் தங்கியிருந்தார்.

பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவரை வடமராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு வரவழைத்து நோயாளிகளின் முன்னிலையில் தாசையும் ஐந்து போராளிகளையும் சுட்டுக் கொன்றது ரெலோவின் தலைமை.

நீண்ட நெடுங் காலமாக ரெலோவின் தலைமை தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது தளத்தில் இருந்து போராடிய தாஸ் துரோகியாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மற்ற இயக்கங்கள் வெறும் இராணுவக் கண்ணோட்டம் கொண்டவை என்றும் தாங்கள் மக்கள் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) என்பனவும் தங்கள் பங்கிற்கு போராளிகளையும், பொது மக்களையும் துரோகிகளாக்கிக் கொன்றார்கள்.

இங்கு இலங்கை அரசுகளுடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்தில் நீச்சலடித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (E.P.D.P) கருணா, பிள்ளையான் குழுக்கள் செய்த கொலைகளைப் பற்றி குறிப்பிட்டு சொல்லத் தேவையில்லை என்னுமளவிற்கு அவை நீண்டு செல்கின்றன.

இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என்பவை நடத்திய கொலை வெறியாட்டத்தால் மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். பல்துறை நிபுணத்துவம் மிக்கவர்களும் வெளியேறினர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கு உடற்கூறியல் துறைக்கு பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜினி திரணகம ராஜசிங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வந்து பேராசிரியராக பணி புரிந்தார்.

போரினால் தாய், தந்தையரை இழந்த பெண்குழந்தைகளிற்காக ஒரு இல்லத்தை மருதனார்மடத்தில் தொடங்கி நடத்தி வந்தார்.

ராஜினி திரணகம, ராஜன் கூல், தயா சோமசுந்தரம். சிறிதரன் ஆகிய பேராசிரியர்கள் சேர்ந்து Broken Palmyra என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அது பின்பு “முறிந்த பனை” என்று தமிழில் வெளிவந்தது.

இலங்கை அரசு, இந்திய அரசு, ஈழ விடுதலை இயக்கங்கள் என்று அத்தனை பேரும் தமிழ்மக்களைக் ஆயுதங்களால் கொடுமைப்படுத்திய அநியாயங்களை ஆவணப்படுத்தினார்கள்.

அந்த முறிந்த பனை என்ற தலைப்பில் வெளியான ஆவணத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்களும் பட்டியலிடப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை விமர்சன நோக்கிலேயே வெளியாகியிருந்தன.

புலிகளின் தலைமை கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டதில்லை. நூறுகருத்துக்கள் மோதினால் நூறு பூக்கள் மலரும் என்பார்கள். புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகள் மோதினால் ஒரு துப்பாக்கி ரவை போதுமானது என்பதே கோட்ப்பாடாக முன்வைக்கப்பட்டது.

அவ்வேளையில் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளை விமர்சித்த முறிந்த பனை வெளியான ஒருவாரத்திற்கு உள்ளாக ராஜினி திரணகம தெருவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆயுதங்களிற்கு அஞ்சி பலரும் வாய் மூடி இருந்த அந்த பயங்கரமான நாட்களில் அராஜகத்தை எதிர்த்த ஒரே காரணத்திற்காக ராஜினி கொலை செய்யப்பட்டார்.

ஒரு இராணுவமுகாமை தாக்க செல்வதற்கு முன் செய்யப்படும் நடவடிக்கைகளைப் போல ராஜினியை கொலை செய்ய ஆயத்தங்கள் செய்தார்கள்.

உடல்கூறியல் பேராசிரியர் இல்லை என்பதால் தனது வசதியான பிரித்தானிய வாழ்க்கையை விட்டு வந்த ராஜினியை அவரிடம் கற்றுக் கொண்டிருந்த மாணவர்களில் இருவரைக் கொண்டே உளவு பார்த்தார்கள்.

தெருவில் மிதிவண்டியில் போய்க் கொண்டிருந்த ராஜினியை ஒரு மாவீரன் பின்னால் போய் துப்பாக்கியால் சுட்டான். கீழே விழுந்த அந்தப் பெண்ணை, இரு குழந்தைகளின் தாயை அந்தக் கோழை மறுபடியும் சுட்டு விட்டு ஓடி மறைந்தான்.

ஏன் சுட்டோம் என்றோ, நாங்கள் தான் கொன்றோம் என்றோ மாவீரர்கள் சொல்லவில்லை. எப்படிச் சொல்ல முடியும்?

மனச்சாட்சி உள்ள மனிதர்கள் என்றால் தமது குற்றங்களிற்காக துக்கித்து, வெட்கித்து மனம் திறந்து மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் கொலை செய்வதையே இயக்க வரலாறாக கொண்டவர்களிற்கு மனம் என்ற ஒன்று இருந்தால் தானே மனச்சாட்சி என்ற ஒன்று இருந்து அவர்களை உறுத்தும், மன்னிப்பு கேட்க சொல்லும்.

தேவ அப்பா தனது தேவகுமாரனாகிய இயேசுவைத் தியாகியாக்க ஒரு மனிதனை துரோகியாக படைத்தார். நமது இயக்க கொலைகாரர்கள் தம்மை தலைவர்களாக்க போராளிகளை துரோகிகள் என்று பொய் சொல்லிக் கொன்றார்கள்.

இயேசுவையாவது விசாரித்து விட்டு சிலுவையில் ஏற்றியதாக கதைகள் சொல்லுகின்றன. ஆனால் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எல்லாம் ஈழம் என்று சொல்லிக் கொண்ட இயக்க தலைமைகள் ஒரு சக மனிதனை, ஈழத்திற்காக, மக்களிற்காக போரிட வந்த மகத்தான மனிதர்களை எந்த விதமான விசாரணைகளோ, தயக்கங்களோ இன்றி கணமும் தயங்காது கொன்றார்கள்.

“அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள், பிதாவே அவர்களை மன்னியும்” என்று இயேசு சொன்னதாக பைபிள் வசனங்கள் சொல்கின்றன. “இவர்கள் தெரிந்தே கொன்றார்கள், மக்களே இவர்களை மன்னியாதிரும்”.

-விஜயகுமாரன்-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com