கடந்தகால உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! வெளிவிகார அமைச்சர் மங்கள
கடந்த காலத்தின் துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நாட்டில் நிகழ இடமளிக்கப்படக்கூடாது. அனைவரும் இணைந்து முன்னோக்கி பயணிக்கவேண்டும். அப்படி முன்னேறுவதற்கு கடந்த காலத்தில் இடம் பெற்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோ சனைகளைப் பதிவதற்கான இணையத் தள அங்குரார்ப்பண நிகழ்வும், விசேடசெயலணியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் ஆரம்ப வைபவமும் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைகளைப் பதிவதற்கான இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்க இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் அடிப்படையிலான ஆணையுடன் கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட் டார்.
போர்க்குற்றம் மற்றும் நீதி வழங்கலை உறுதிப்படுத்துதல் தொடர்பான ரோம் உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால் அவ்வாறான விடயங்கள் தொடர்பாக நீதி கிடைப்பதை உறுதிசெய்வதற்கு சுயாதீனமான, தேசிய நீதி வழங்கல் பொறிமுறை போதுமான தாக இருக்கும்.
இதனை ஜனாதிபதியினுடைய 100 நாள் வேலைத்திட்ட விஞ்ஞாபனத்தின் 93 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிர சிங்க ஆகியோரின் அரசாங்கம் பொறுப்பேற்கப்பட்டபின் உண்மையை அறிதல், பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களை ஒரு கட்டமைப்பை உருவாக்கி ஆராயவேண்டும் என்பதால் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதை பிற்போடும்படி மனித உரிமை ஆணையாளரைக் கேட்டுக் கொண்டோம்.
இந்த முறைமையை தொடருவதற்கான மக்கள் ஆணை கடந்த செப்ரெம்பரில் மீண்டும் ஒருமுறை கிடைத்த பின் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளை இணைத்து அரசாங்கத்தை உருவாக்கிய பின் நான் மீண்டும் ஜெனிவா சென்று நல்லிணக்கம், சீர்படுத்தல் மற்றும் பொறுப்புக் கூறலின் அடிப்படையிலான கட்டமைப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் விளக்கினேன்.
பின்னர் நான் அங்கு கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிநிதித்துவம் கொண்டிருக்கும் நாடுகளும் ஒரு தீர்மானத்தை கூட்டாக முன்மொழிந்தன. ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த வருடத்தில் பல முறை நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் தொடர்பாக தாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டையும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தங்களுக்குள்ள அசையாத உறுதிப்பாட்டையும் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள்.
யுத்தத்தினால் ஏற்பட்ட ரணங்களை குணப்படுத்தவும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற்றுத் தருவதற்குமான பொறுப்பு என்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தின் உச்ச பயனைப் பெற்று ஜனநாயக பிரஜைகளுக்கான உரிமைகளை அனைவரும் ஒரேவிதமாக அனுபவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
2009 மே 19ம் திகதி யுத்தம் முடிந்த கையோடு அமைதியான சுழ்நிலையை நாம் எல்லோரும் அனுபவித்தோம். ஆனால் நாம் பெற்ற அனுபவங்களை கொண்டு நாங்களே செய்யவேண்டியதாக இருந்த பணிகளை நாம் செய்து முடிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அபிவிருத்தி முக்கியமென்றாலும் மக்களின் மனங்களையும் உள்ளங்களையும் வெல்லாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.
இருவாரங்களுக்கு முன் சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா உரையாற்றும் பொழுது, ஜெனிவா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்களிடம் வந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்திலிருந்து உச்ச பயனை பெறவேண்டியிருந்தாலும் அதனை சர்வதேச அழுத்தத்துக்காக அல்லாமல் எமது தேசத்தின் எமது மக்களின் எமது படையினரின் கௌரவத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதனை செய்ய வேண்டும். அதன் மூலமே சர்வதேச சமூகத்துக்குள் இலங்கைக்கு அதற்கு உரித்தாக வேண்டிய சக்திவாய்ந்த ஜனநாயக ரீதியான ஸ்தானத்தை மீண்டும் ஸ்தாபிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
எங்களுக்கு பல விருப்பத் தெரிவுகள் இருந்தாலும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் எவ்வாறு அடையப்பட வேண்டுமென்பது அனைத்து பங்கீட்டாளரோடும் ஆராயப்பட வேண்டும்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை தீர்மானத்தை கூட்டாக முன்மொழிந்த பாராளுமன்ற விவாதத்தின் போது த.வி.கூ. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நல்லிணக்கம் தேவையென ஏற்றுக் கொண்டுள்ளன. நல்லிணக்கமும் பொறுப்பு கூறலும்தான் எமது அணுகுமுறையென பிரதமர் ரணில் கூறியுள்ளார். கடந்த காலத்தை உணராது விடின் எமது நாட்டையும் மக்களையும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூகரீதியாக முன்னேற்ற முடியாது.
இங்கு ஒரு தாயை சந்தித்தேன். அவரின் கணவரும் அவரை தொடர்ந்து மூத்த மகனும் புலிகளுடன் இணைந்து சண்டையிட்ட போது கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அவர் அழுதார். இவ்வாறான பாதிப்புக்கள் தெற்கிலும் உண்டு. படைவீரர்களினதும் அரசியல் செயற்பாட்டாளர்களின் தாய்மாரும் இப்படி அழுகிறார்கள்.
எமது அரசு பல விடயங்களை மேற்கொண்டுள்ளது. இம்முறை சுதந்திரதின விழாவில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 3ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் மக்களிடம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. 39 கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். விசேட நீதிமன்றம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது வடக்கிலும் கிழக்கிலும் குடிசார் நிர்வாகம் மீள நிறுவப்பட்டுள்ளது.
8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 429 தனிநபர்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. சட்டம் நீதியினுடைய ஆட்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது
கறைப்படுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைகளின் நற்பெயர் தற்போது சீர்செய்யப்படுகிறது.
கறைபட்ட பெயரை சீர் செய்ய குற்றமிழைத்தோரை தண்டிப்பதொன்றும் புதிய எண்ணக் கரு அல்ல. 1970களின் மனம்பேரி சம்பவத்தையும் 1990 களின் கிருஷாந்தி குமாரசுவாமி சம்பவத்தையும் இங்கே நினைவுகூருகிறேன். ஆயுதப்படைகளின் நற்பெயரை களங்கப்படுத்திய ஒரு சில குழப்படிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
நாங்கள் நல்லிணக்க முயற்சியை சர்வதேச அழுத்தம் காரணமாக மேற்கொள்ளவில்லை. எமது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எமது குடிமக்களை சமத்துவம் மேன்மை கௌரவம் கொண்டவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே அதனை மேற்கொள்கிறோம்.
கடந்த காலத்தின் துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நிகழ இடமளிக்கப்படக்கூடாது. எல்லோரும் இணைந்து முன்னேற வேண்டும் அப்படி முன்னேற கடந்த கால உண்மைகள் அறியப்பட வேண்டும் தீவிரவாதம் வடக்கிலோ தெற்கிலோ எழுப்ப அனுமதிக்க கூடாது.
எமது அரசானது நீண்டகால மற்றும் நிலை பேற்றுத்தன்மை அடிப்படையில் நல்லிணக்கம் சமாதானம் அபிவிருத்தி என்பவற்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறுவ முயல்கிறது. இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்யமுடியும்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கலாநிதி மனோரி முத்து குமாரசாமி தலைமையில் மான்பு மிக்கவர்கள் 25 மாவட்டங்களுகுக்கும் சென்றுநேருக்கு நேராக சந்தித்து கருத்துககைள பெற்று பகுப்பாய்பு செய்து ஒருஅறிக்கையை அரசுக்கு தருவார்கள். அதன் அடிப்படையில்அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
அரசாங்கத்தின் சார்பில் இந்த முயற்சியிலே அனைவரையும் பங்குபற்ற அழைக்கின்றேன். 1940 ஆம் ஆண்டுகளில் இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்தது. கடந்த காலத்தில் இந்து சமுத்திரத்தின் கண்ணீர்துளியாக மாறிய இலங்கை மீண்டும் முத்தாகமாறவேண்டும்.
வங்குறோத்தாகிவிட்ட அரசியல் வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் மக்களின் உணர்ச்சிகளை தூண்ட முயற்சிக்கிறார்கள். எமது அரசாங்கம் நாட்டினை பல்லின, பல்மொழி, பல்மத, பல் கலாசாரமாக மாற்றவே முயற்சி செய்கிறது. எமது எதிர்காலத்தை வடிவமைத்து வரையறை செய்து உருவாக்கவே முயற்சிக்கிறோம் . கடந்த செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைசபையில் “கனவுகான பயப்படாமலிப்போம் கலந்துரையாடலில் ஈடுபட பயப்படாமலிருப்போம்"என நான் கூறிய வசனங்களை கூறி முடிக்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment