Wednesday, January 20, 2016

காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் விழுந்த பனை. மகேந்திரன் திருவரங்கன்

மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உRajan Hooleறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திராணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல் கடந்த ஆண்டில் வெளிவந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே 1985ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரை கணிதத் துறை விரிவுரையாளராக ராஜன் ஹூல் கடமையாற்றினார். மனித உரிமைப் பணிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்ய முடியாத வகையில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது ராஜன் ஹூலும், மற்றொரு கணித விரிவுரையாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரனும் தலைமறைவாகி இருந்து இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை, அரசியல் ரீதியிலான ஆய்வுகளுடன் கலந்த வகையில், 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு அறிக்கைகளின் ஊடாக வெளிக்கொண்டு வந்தனர். இலங்கையில் மனித உரிமைகளுக்காக இவர்கள் ஆற்றிய பணிக்காக 2007ஆம் ஆண்டு சர்வதேசப் புகழ் வாய்ந்த மார்ட்டின் என்னல்ஸ் விருது இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில், 21 ஆண்டுகளின் பின்னர் ராஜன் ஹூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கணிதம் கற்பிக்கும் பணியினை ஆரம்பித்தார். நான்கு வருடங்களின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்திலே அவர் விரிவுரையாளர் பணியில் இருந்து இளைப்பாறினார்.

புத்தகத்தின் தலையங்கம் ராஜனியில் இருந்து போரின் முடிவு வரை என்று இருந்தாலும், நூலிலே பேசப்பட்டுள்ள விடயங்கள் போரின் முடிவின் பின் அரசினாலும், இராணுவத்தினராலும், மேற்கொள்ளப்பட்ட பல மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. போருக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் நிகழும் இராணுவ மயமாக்கம், தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுதல், 2011இல் இடம்பெற்ற கிறீஸ் பூதப் பிரச்சினை, 2012இல் பல்கலைக்கழக விடுதிகளிலே மாவீரர் வாரத்தின் போது நினைவுச்சுடர் ஏற்றியமைக்காக மாணவர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜெயக்குமாரியின் கைது போன்ற 2009இன் பின்னர் நாட்டின் வடகிழக்குப்பகுதியிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்ற பல்வேறு மீறல்களைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான ஆசிரியர்கள் அமைப்பின் மனித உரிமைப் பணிகள் புலிகள் அழிவுற்ற பின்னர் நின்றுவிட்டன என்று ஒரு சிலரால் வைக்கப்பட விமர்சனத்துக்கு விழுந்த பனை ஒரு வகையில் ஒரு பதிலாகவும் அமைகிறது!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து மனித உரிமைப் பணிகளிலே ஈடுபட்டமைக்காகவும், மாற்று அரசியலுக்கான வெளிகளைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதற்கு முயற்சித்தமைக்காகவும், 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு காணாமற் போகச் செய்யப்பட்ட துணிச்சல் மிக்க இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான செல்வி தியாகராஜா மற்றும் ஜோர்ஜ் மனோகரன் ஆகியோருக்கு இந்த நூல் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நூலின் முதற்பக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர்களின் சங்கத்தினால் 1989இல் வெளியிடப்பட்ட முறிந்த பனையின் ஆசிரியர்களில் ஒருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமாகிய, 1989இல் படுகொலை செய்யப்பட்ட, ராஜனி திராணகமவின் நிறப் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையிலான தத்துவார்த்த ரீதியிலான தொடர்புகளை விளக்குவதற்கு நூலின் அறிமுகப்பகுதி முற்படுகிறது. இந்த வகையிலே விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா தலைமையிலான நிறவெறிக்கு எதிரான போராட்டத்துக்கும் இடையில் ராஜன் ஹூல் அவதானிக்கும் வேறுபாடுகள் முக்கியமானவை.

பரந்துபட்ட விடுதலைப் பார்வையுடன் நெல்சன் மண்டேலா எவ்வாறு வெள்ளையர்களையும், கறுப்பினத்தவர் அல்லாதோரையும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திலே பங்குபற்றுவதற்குத் தூண்டினார் என்பதனைக் கோடிட்டுக் காட்டும் அறிமுகப்பகுதி, அவ்வாறான ஒரு பரந்த பார்வை விடுதலைப் புலிகளிடம் இருந்திருக்கவில்லை என்பதனையும் அவர்களால் தமிழர்களின் உரிமைகள் ஒரு வகையில் மனித உரிமைகளே என்ற விடயத்தினை வெளிப்படுத்தும் வகையிலே செயற்பட முடியவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான போக்கு விடுதலைப் புலிகளிடம் மட்டுமல்ல அவர்களுக்கு முன்னர் வந்த தமிழ்த் தலைமைகளிடமும் சரி அவர்களின் பின்னர் வந்த தலைமைகளிடமும் சரி காணப்படவில்லை என்பதனை நாம் அவதானிக்க வேண்டும். சிறுபான்மையினர், நாடற்ற பிரசைகள் போன்றோருக்கும் தேச அரசுக்கும் இடையிலான தொடர்பினையும், இடைவெளியினையும் விளக்குவதற்கு ராஜன் ஹூல் நூலின் அறிமுகப் பகுதியிலே மேற்கொள்ளும் காட்டும் ஹன்னா அரென்ட் குறிப்பிட்டது போல, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் அரசு-தேசம்-நிலம் என்ற மும்மூலகங்களினை ஒன்றுக்கொன்று என்ற வகையில் தொடர்புபடுத்தி எவ்வாறு எமது இனத்துக்கென ஓர் அரசியல் கட்டமைப்பினை உருவாக்கலாம் என்பதாகவே இருந்தது. போருக்குப் பின்னரும் இதே மாதிரியான ஒரு சட்டகமே பெரும்பாலான தமிழ்த் தேசியத் தரப்புக்களின் மத்தியிலே தொடர்கிறது. தற்போது அரசுக்குப் பதிலாக நாம் சட்டகத்திலே மாகாணம்/ மாநிலத்தினை நிறுத்தி இருக்கிறோம்.

புத்தகத்தின் முன்பகுதியில் இடம்பெறும் சில அத்தியாயங்கள் ராஜனி திராணகமவின் படுகொலையினைப் பற்றியும் அதற்கான பின்னணி பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றன. தனது கலாநிதிப்பட்ட ஆய்வினை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிய ராஜனி யுத்தம் மிக்க சூழலிலே தனது அரசியற் செயற்பாட்டினைப் பல்கலைக்கழகத்திலும் சமூகத்திலும் மிகவும் துணிச்சலுடன் மேற்கொண்டார் எனவும், இந்திய இராணுவத்தின் அடக்குமுறையின் போது அவர் தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த மாணவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் கூட இந்திய இராணுவத்தினருடன் முரண்பட்டார் எனவும் நூலிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளினை அரசாங்கம் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளை ராஜனி விமர்சித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆசிரியர்களிலே பலர் தனியார் மருத்துவக் கல்லூரியிலே கல்வி கற்பதற்கு விரும்பியிருந்த போது ராஜனி தனியார் மருத்துவக் கல்லூரிகளை இடதுசாரிப் பார்வையிலே எதிர்த்தமை மருத்துவபீடத்திலே அவரைத் தனிமைப்படுத்தியது என நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜனி திராணகமவின் கொலையின் பின்னணியினை ஒரு துப்பறிவுக் கதை போல ராஜன் ஹூல் இந்தப் புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். கொலையாளி தன்னைச் சுட்ட போது, ராஜனி திராணகம “Why are you shooting me?” ("என்னை எதற்காக சுடுகிறீர்கள்?") எனக் கொலையாளியினை நோக்கிக் கேட்டதனை கேட்டதாகக் கொலை நடந்த இடத்திற்கு அண்மையில் வாழ்ந்த ஒரு பெண்மணி வழங்கிய வாக்குமூலமும், கொலை செய்தவர்களும் இதே விடயத்தினைக் கொலை செய்தபின் தமக்குள்ளே பேசிக்கொண்டதனைக் கேட்ட சிறுவன் ஒருவனின் வாக்குமூலமும் நூலிலே உள்ளடக்கப்பட்டுள்ளன. ராஜனித் திராணகமவின் மரணம் மனித உரிமை ஆர்வலர் ஒருவரின் கொலை மட்டுமல்ல. அது தமிழ்த் தேசத்துக்கு வேண்டப்படாதவர்கள் என்ற வகையிலும், துரோகிகள் என்ற வகையிலும், தமிழ்த் தேசத்தின் நலனுக்காகப் பலிகொடுக்கப்படக் கூடியவர்கள் என்ற வகையிலும் கொல்லப்பட்ட, கொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகப் பேசிய ஒருவரின் மரணம் என்பதனையும் நாம் இங்கு நிலைநிறுத்த வேண்டும்.

ராஜனியின் படுகொலையினைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஆbook cover 2சிரியர்கள் மத்தியிலும் மாற்றுக்கருத்துக்களைப் பேசியவர்கள் புலிகளால் அச்சுறுத்தப்பட்டமைக்கும், ஆசிரியர்களிலே சிலர் பல்கலைக்கழக மேடைகளிலே தீவிரவாதக் கருத்துக்களை விதைத்துப் புலிகளின் புத்தகங்களிலே நல்ல பெயரினைப் பெற முற்பட்டமைக்கும் நூலிலே குறிப்பிடப்படும் உதாரணங்கள் சான்றாக அமைகின்றன. திறந்த விவாதங்களினூடே அரசியற் கருத்துக்கள் உருவாகுவதற்கு வழிசெய்யக்கூடிய சுதந்திரமான சூழலினை வளர்த்தெடுக்க வேண்டிய பல்கலைக்கழக ஆசிரியர்களிற் சிலர் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஜனநாயக விரோதப் பிரசாரங்களிற்கு முண்டுகொடுத்தனர். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழகத்திலே இடம்பெற்ற கூட்டமொன்றிலே, மாற்றுக்கருத்துக்களுடன் செயற்பட்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் கூறிய "இங்கு இன்னும் சில களைகள் இருக்கின்றன. அவற்றினை நாம் சகித்துக்கொள்ளப் போவதில்லை. இந்தக் களைகளும் பிடுங்கப்பட்டு வெளியகற்றப்படும்" என்ற வசனங்கள் நூலிலே மேற்கோள் இடப்பட்டுள்ளன. அதே போன்று, பல இளைஞர்களும் யுவதிகளும் புலிகளின் தடுப்பு நிலையங்களிலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது, புலிகளையும் அதன் தலைமையினையும் போற்றும் வகையில் நாடகம் ஒன்று யாழ் நகரிலே உள்ள பாடசாலை ஒன்றிலே மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் பொதிந்து போயிருந்த புலிகளின் தலைமையின் அதிகார மையத்தினைக் கொண்டாடும் அரசியலினை நாடகம் முடிவுற்ற பின் கேள்விக்குட்படுத்திய புகழ்பெற்ற கவிஞரும், அந்நாளிலே பல்கலைக்கழக மாணவியாக இருந்த செல்வி தியாகராஜா எவ்வாறு விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டார் என்பதனையும் நூல் விபரிக்கிறது. புத்திஜீவிகளினதும், கலைஞர்களதும், சமூகத் தலைவர்களதும், மதப் பெரியார்களதும் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்திலே 1990களிலே புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கினர். இந்த வகையிலே தமிழ்ச் சமூகம் சந்தித்த அழிவுகளுக்கு அந்த சமூகத்தின் உயர்தட்டுக்களினைச் சேர்ந்த சிவில் சமூகமும் ஒரு வகையிலே பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கிறது.

போரின் இறுதியிலே முள்ளிவாய்க்காலிலே மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும், வேதனைகளையும் விழுந்த பனை ஆவணப்படுத்துகிறது. கொத்துக் குண்டுகளும், வெள்ளைப் பொஸ்பரஸ் எனப்படும் எரி குண்டுகளும் மக்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதிகளின் மீது இலங்கை இராணுவத்தினரால் வீசப்பட்டதனை சம்பந்தப்பட்ட மக்களின் அனுபவப் பகிர்வுகளின் மூலமாக நூல் வெளிக்கொணர்கிறது. அதே போல போரின் இறுதி மாதங்களிலே பலர் பலவந்தமாக விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்துக்கொள்ளப்பட்டமையினைப் பற்றி தமது போர்க்கால அனுபவங்களை நூலாசிரியருடன் பகிர்ந்து கொண்ட சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்த உண்மைகள் யாவும் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதிலே ராஜன் ஹூல் ஆணித்தரமாக இருக்கிறார் என்பதனை நூலிலே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த உண்மைகள் வெளிக்கொணரப்படாமல் யுத்தத்திற்கு முடிவோ அல்லது சமாதானத்துக்கான ஆரம்பமோ இருக்கப் போவதில்லை என்று நூல் சொல்கிறது.

எவ்வளவு பேர் இறுதி யுத்தத்திலே இறந்தார்கள் என்பதற்கான சரியான புள்ளிவிபரங்கள் எமக்கு இன்னும் கிடைக்காத நிலையிலே சனத்தொகை வளர்ச்சி தொடர்பாகத் திணைக்களங்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளிலே பெறப்பட்ட தரவுகளினைக் கொண்டும், கொல்லப்பட்ட மக்களின் மாதிரிகளின் அடிப்ப்டையிலும் யுத்தத்திலே எத்தனை பேர் இறந்தார்கள் அல்லது காணாமற் போயுள்ளார்கள் என்பதனைக் கண்டறிவதற்கான கணிதச் சூத்திரங்களை ராஜன் ஹூல் உருவாக்கியிருக்கிறார். அந்தச் சூத்திரங்களின் அடிப்படையில் போர் வலயத்திலே இருந்தோரில் 97, 900 ((விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், இவர்களிலே இலங்கை அரச படைகளின் தாக்குதலில் இறந்திருக்கக் கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை 67, 600 ஆகவும், வன்னிக் குடும்பங்களைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20, 000 ஆகவும், விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் 3000 எனவும் இதர காரணங்களினால் காணமற் போனோர் அல்லது இறந்தோர் 7, 000 ஆகவும் இருக்கக் கூடும் என நூல் குறிப்பிடுகிறது.

தான் கருத்திற்கொண்ட சனத்தொகை மாதிரிகள் சில வேளைகளிலே குறைபாடுகள் உடையனவாக இருக்கக் கூடும் எனவும், எனவே இந்த கணிப்புக்கள் யாவும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டியவையே என ராஜன் ஹூல் குறிப்பிட்டாலும், உண்மைகளினை வெளிக்கொண்டு வருவதற்கான சூழலும், தகவல்களும் இல்லாத நிலையிலே, இவ்வாறான கணித ரீதியிலான ஒரு முயற்சியை ராஜன் ஹூல் மேற்கொண்டுள்ளமை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது. நூலினை வாசிக்கும் எல்லோரினாலும் இந்தச் சூத்திரங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருப்பினும், ஒரு கணிதத் துறைசார் வல்லுநர் என்ற வகையிலே ஹூல் இந்த முயற்சியினை மேற்கொண்டமை ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தினது நீதிக்காக அவர் கொண்டுள்ள அக்கறையினை எமக்குக் கோடிட்டுக்காட்டுகிறது.

போருக்குப் பிந்தைய காலத்திலே இடம்பெறும் இராணுவ மயமாக்கத்தினை கடுமையாக விமர்சிக்கும் விழுந்த பனை, வடக்குக் கிழக்கின் நிருவாகத்தில் இராணுவத்தின் பங்குபற்றுதல் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாடு, மக்களுக்குப் பாரிய கொடுமைகளைப் புரிந்த ஒரு இராணுவத்தின் தயவிலே மக்களை வாழ நிர்ப்பந்திப்பதாகக் குறிப்பிடுகிறது. ஒரு புறத்திலே மக்களினை மீள்குடியேற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் மறுபுறத்திலே கேப்பாபிலவு, முள்ளிக்குளம், வலிகாமம் வடக்கு, மற்றும் சம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தமது நிலங்களுக்கு மீளச் செல்வதனை அனுமதிக்காமையினை ஒரு களவு என நூல் கூறுகிறது. வடபகுதியின் அரசியற் பொருளாதாரத்தினைப் பற்றி சிந்திக்கையிலே சிங்கள மயமாக்கலையும், இனத்துவ அடையாளங்களின் முக்கியத்துவத்தினையும் நாம் புறமொதுக்கிவிட முடியாது என்பதனை ராஜன் ஹூலின் நூலிலே குறிப்பிட்டப்படுள்ள உதாரணங்கள் எமக்கு வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, 2010ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவின் தெற்குப் பகுதியில் தமது விவசாய நிலங்களுக்குத் திரும்ப எண்ணிய தமிழர்களும், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு ஆகிய பகுதிகளிலே மீன்பிடிக்கச் சென்ற தமிழர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி நூலில் இடம்பெற்றுள்ள “Mullaitivu: The Destructive Political Economy of Sinhalisation” ("முல்லைத்தீவு: சிங்கள மயமாக்கலின் அழிவினை ஏற்படுத்தும் அரசியற் பொருளாதாரம்") என்ற பகுதியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டின் முன்னர் இந்தப் பகுதியிலே மீன்பிடிப்பதற்குத் தமிழர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும், இடம்பெயர்வு மற்றும் போரின் முடிவின் பின்னர் அவர்கள் மீளவும் மீன்பிடிப்பதற்கு அனுமதி கோரிய போது, அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் தம்மால் அனுப்பபடும் சிங்கள மீனவர்களுக்கு அனுமதி வழங்கும்படியும் மீன்பிடி அமைச்சு உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியமை பற்றி நூல் குறிப்பிடுகிறது.

தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மை இனத்தவருக்கும், மதத்தவருக்கும் எதிராக அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகளினை தீவிரமாக விமர்சனம் செய்யும் விழுந்த பனை, வடபகுதியில் நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு அரசு மாத்திரம் பொறுப்பல்ல என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. எமது சமூகத்திலே நிலவும் சாதி மற்றும் சமய ரீதியிலான வேற்றுமைப்படுத்தல்களையும் இந்த நூல் உதாரணங்களுடன் ஆராய்கிறது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலே மதச்சார்பற்ற அரசியல் வளர்ச்சி பெற்றதனையும், தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகள் எனத் தேசிய விடுதலையினை முன்னெடுத்த பெரும்பாலான தரப்புக்களாலும், யாழ்ப்பல்கலைக்கழக சமூகத்தினராலும் இந்த மரபு பாதுகாக்கப்பட்டது என ராஜன் ஹூல் கூறுகிறார். எனினும், இந்த மரபு தற்போது பல்கலைக்கழகத்திலே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதனை நூல் உதாரணங்களுடன் வெளிக்காட்டுகிறது. விவசாய மற்றும் பொறியியற்பீடங்கள் கிளிநொச்சியிலே அண்மையில் அமைக்கப்பட்ட போது திறப்பு விழாவுக்கு முதல் நாளிலே பிராமணர்களினால் பேய் ஓட்டும் வைபவம் ஒன்று அங்கு நிகழ்த்தப்பட்டமையினையும், திறப்பு விழா நிகழ்வுகளிலே 90 நிமிடங்களுக்கு இந்துச் சடங்குகள் செய்யப்பட்டமையினையும் நூல் உதாரணப்படுத்துகிறது. தமிழ் அரசியிலின் பிரதான நீரோட்டத்திலே முன்னர் தவிர்க்கப்பட்டு வந்த இவ்வாறான பிளவினை ஏற்படுத்தும் போக்குகள், இப்போது மேலெழுந்து வருவதனை நூல் கவலையுடன் பதிவுசெய்கிறது. இதே போன்று வடபகுதியின் கல்வித் துறையில் இடம்பெறும் சாதி வேற்றுமைப்படுத்தல்களைப் பற்றியும் நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த அதிபர் பதவிக்கான விண்ணப்பதாரிகள் திட்டமிட்ட முறையில் கல்வித் துறை நிருவாகிகளினால் புறக்கணிப்புச் செய்யப்பட்டமைக்கான உதாராணங்களும் சம்பவங்களும் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலே சாதி வேறுபாடுகளின் தாக்கம் இன்னும் தொடர்கிறது என்பதற்கான ஒரு ஆவணமாகவும் இந்த நூலினை நாம் பார்க்க முடியும்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் காரணங்களையும், விளைவுகளையும் ஆராய்ந்து, போரின் அவலங்களினையும் அவற்றின் தொடர்ச்சியினையும், சமூகத்தின் ஆதிக்க சக்திகளினால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் மீது இழைக்கப்படும் அநீதிகளையும் சமூகத்தின் மீதான ஆழமான கரிசனையுடன் வெளிக்கொண்டு வரும் விழுந்த பனை நூலினை வெளியிடுவதற்கும், நூலினைப் பற்றிய உரையாடல் ஒன்றினை மேற்கொள்ளுவதற்குமான நிகழ்வு ஒன்று கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் நிருவாகமும், தம்மைத் தமிழ்த் தேசியவாதத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்ள முற்பட்ட சில பல்கலைக்கழக ஆசிரியர்களும் இந்த நிகழ்வினை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் விளைவாகப் பல்கலைக்கழகங்களில் கல்விச் சுதந்திரத்தினைப் பேணும் வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிறு ஜனநாயக வெளி காரணமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினைத் தொடர்ந்து, இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு,கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலே பல்கலைக்கழகத்திலே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யும் ஒரு நூலாகவும், அந்தப் பிரச்சினைகளினை வரலாற்று ரீதியாக, பல் பரிமாண முறையில் நோக்கும் ஒரு நூலாகவும், பிரச்சினைகளின் போக்குகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தும் ஒரு நூலாகவும் விழுந்த பனை அமைகிறது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளும், கருத்துக்களும், செய்திகளும் சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த நூலினைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

(மகேந்திரன் திருவரங்கன் இலங்கையில் உள்ள பொருளாதாரத்தினை ஜனநாயக மயமாக்குவதற்கான கூட்டு என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார்.)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com