Saturday, December 12, 2015

ஏகாதிபத்தியம், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும் முஸ்லீம்-விரோத விஷமப் பிரச்சாரம். Andre Damon‘

திங்களன்று, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பில்லியனர் டோனால்டு ட்ரம்ப், பாரிஸ் மற்றும் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து "அமெரிக்காவிற்குள் முஸ்லீம்கள் நுழைவதை மொத்தமாக முற்றிலுமாக நிறுத்துவதற்கு" அழைப்புவிடுத்தார். இது குடியரசு கட்சியின் முன்னணி பிரமுகர்களிடமிருந்து வரும் அதிகரித்தளவிலான பாசிசவாத மற்றும் வன்முறையான தொடர் முறையீடுகளில் சமீபத்தியது மட்டுமேயாகும்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய அங்கத்தவர்களை விட மேலதிகமாக சென்றிருந்தாலும், ட்ரம்ப் இன் அழைப்பு, குடியரசு கட்சி செனட்டர் டெட் குரூஸ் உட்பட ஏனைய அரசியல்வாதிகளின் கருத்துக்கு இணைந்தவாறு தான் இருந்தது. சிரியாவிலிருந்து வரும் கிறிஸ்துவ அகதிகளுக்கு அல்லாமல், முஸ்லீம் அகதிகளுக்கு, தடைவிதிக்க வேண்டுமென கடந்த மாதம் டெட் குரூஸ் அழைப்புவிடுத்திருந்தார் மற்றும் லூசியானா கவர்னர் பாபி ஜின்தால் மசூதிகளைக் கண்காணிப்பில் வைக்க மாநில பொலிஸிற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

வெர்ஜினியாவின் ரோனொக் (Roanoke) ஜனநாயக கட்சி மேயர் டேவிட் போவர்ஸ், கடந்த மாதம் முழு ஒப்புதலோடு இரண்டாம் உலக போரின் போது சித்திரவதை முகாம்களில் இருந்த ஜப்பானிய அமெரிக்கர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்க வரலாறைக் கையெலெடுத்தார். “இப்போது ISIS மூலமாக அமெரிக்காவிற்கு வரும் பயங்கர அச்சுறுத்தல், அப்போதைய நமது எதிரிகளிடமிருந்து வந்ததைப் போல அதேயளவிற்கு நிஜமாகவும் தீவிரமாகவும் தெரிகிறது,” என்று போவர்ஸ் அறிவித்தார்.

அமெரிக்காவில் அத்தகைய பிற்போக்குத்தனமான அரசியல் முறையீடுகள் மேலெழுவது ஏனைய ஏகாதிபத்திய நாடுகளிலும் எதிரொலிக்கிறது. பிரிட்டனில், பிரதம மந்திரி டேவிட் கேமரூன், சிரியாவில் போருக்கு அனுமதியளிப்பதை எதிர்ப்பவர்களை "பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்" என்று முத்திரை குத்தினார். பிரான்சில், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அரசாங்கத்தால் நடைமுறையில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டு, நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களை அடுத்து பீதி மற்றும் விஷமப் பிரச்சார சூழல் பெரிதாக்கப்பட்டதற்கு இடையே, மரீன் லு பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) இந்த வார பிராந்திய தேர்தல்களில் பெரும்பான்மை வாக்கு விகிதங்களைப் பெற்றுள்ளது.

ஐரோப்பா எங்கிலும், சகல பிரதான சக்திகளும் சிரியாவில் அவற்றின் போர் விரிவாக்கும் திட்டங்களை நியாயப்படுத்த முயல்கையில், அகதிகள் நெருக்கடிக்கான விடையிறுப்பில் முஸ்லீம்-விரோத பேரினவாதம் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில், ட்ரம்ப் இன் கருத்துக்கள் சுய-நீதிமான்களாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடக பிரமுகர்களின் கோபத்தைச் சந்தித்துள்ளது, இவர்கள் அவரது கருத்துக்களால் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறுகிறார்கள். யாரை இவர்கள் ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இந்த முட்டாள்தனமான பாசிசவாத பிதற்றல்கள், அன்றாடம் ஊடகத்தில் ஒருவர் கேட்கும் தொடர்ச்சியான விஷமப் பிரச்சாரத்தில் தான் நிறைய ஒன்றுதிரண்ட வடிவத்தில் வெளிப்படுகின்றன. ட்ரம்ப் மற்றும் CNN இன் வோல்ஃப் ப்ளிட்ஜர் போன்ற ஒருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறுமனே மிகச் சிறியளவில் தான் உள்ளது. அவர் அழுகிய அரசியல் சூழலின் விளைபொருளாக உள்ளார்.

ஒபாமாவைப் பொறுத்த வரையில், அந்த ஜனாதிபதி ஞாயிறன்று அவரது தேசிய உரையில், முஸ்லீம்களை இலக்கில் வைக்க குடியரசு கட்சியினரின் அழைப்புகளுக்கு அவரையொரு விமர்சகராக காட்டிக்கொண்டார். எவ்வாறிருப்பினும் மத்திய கிழக்கில் ஓர் ஏகாதிபத்திய கொள்கையை தொடர்வதற்கு ஒபாமா நிர்வாகம் பொறுப்பாகிறது, அது ஒட்டுமொத்த நாடுகளையும் நாசமாக்கியுள்ளதுடன், அந்த நிகழ்வுபோக்கில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்களை, முக்கியமாக முஸ்லீம்களை, கொன்றுள்ளது.

உண்மையில் அதீத பிற்போக்குத்தனமான சக்திகள் கட்டவிழ்வது, ஏகாதிபத்தியத்தின் உள்பொதிந்த இயல்பினது ஓர் வெளிப்பாடாகும். லெனின் வலியுறுத்தியதைப் போல, ஏகாதிபத்தியம் "அனைத்து நிலைகளிலும் பிற்போக்குத்தனமாகும்.” முதலாம் உலக போரின் மத்தியில் அவர் எழுதுகையில், “ஜனநாயக-குடியரசுக்கும் மற்றும் பிற்போக்குத்தன-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வித்தியாசம், முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுகிறது, ஏனென்றால் அவை இரண்டுமே உயிர்வாழ்வை அழுகிப் போக செய்கின்றன,” என்றார். ஒட்டுண்ணித்தனம், நிதியியல் மோசடித்தனம், போர் மற்றும் கொள்ளையடிப்பதை அடிப்படையாக கொண்ட துர்நாற்றம் வீசும் சமகாலத்திய முதலாளித்துவ சமூகம், மீண்டுமொருமுறை இனவாத வீராவேஷ வடிவில் அரசியல் சாக்கடைகளை மென்று துப்பிக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய போர் எப்போதும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் மற்றும் வெளிநாட்டவர் மீதான விரோதத்தை முடுக்கிவிடுவதையும் உள்ளடக்கியது என்ற உண்மையை 20 ஆம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த அனுபவமும் எடுத்துக்காட்டுகின்றன. உலகை ஜனநாயகத்திற்கான பாதுகாப்பான இடமாக ஆக்குவதற்காக என்ற பெயரில் உட்ரோவ் வில்சனால் கையிலெடுக்கப்பட்டு, முதலாம் உலக போரில் அமெரிக்கா சம்பந்தப்பட்டமை, Eugene V. Debs உட்பட சோசலிச தலைவர்களைச் சிறையில் அடைப்பதற்கும் மற்றும் தொழிலாளர்களை தான்தோன்றித்தனமாக கையாள்வதற்கும் உரிய நிலைமைகளைக் கொண்டு வந்தது, அதைத் தொடர்ந்து சோசலிச-விரோத பால்மர் (Palmer) வேட்டைகள் நடந்தன.

இரண்டாம் உலக போரின் போதும் மற்றும் அதற்கு இட்டுச் சென்ற காலத்திலும், பாசிசத்தின் மேலெழுச்சி மற்றும் நாஜி கட்சியின் "இறுதி தீர்வு" உட்பட சொல்லொணா பயங்கரங்கள் நிகழ்ந்தன. நாஜி கட்சியின் "இறுதி தீர்வு", 11 மில்லியன் மக்களின் படுகொலைக்கும் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய யூத பிரிவுகளை நிர்மூலமாக்குவதற்கும் இட்டுச் சென்றது. அமெரிக்காவில், பிராங்ளின் ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஜப்பானிய அமெரிக்கர்களுக்கான தடுப்புக்காவல் முகாம்களையும் மற்றும் ஸ்மித் சட்டத்தின் கீழ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னணி அங்கத்தவர்களைச் சிறையில் அடைப்பதையும் மேற்பார்வையிட்டது.

கொரிய போரின் காலகட்டம், தொழிற்கட்சிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருந்த சோசலிஸ்டுகள் மீது மெக்கார்த்திய (McCarthyite) வேட்டையாடல்கள் மேலோங்கிய காலமாக இருந்தது. அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ போர் அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் கொண்டு வந்தது, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்தமை மற்றும் அவசரகால நெருக்கடியைத் திணித்தமையும் அதில் உள்ளடங்கும். வியட்நாம் போரின்போது, அமெரிக்க உளவுத்துறை FBI அமெரிக்காவில் பாரியளவில் அரசியல் அமைப்புகளில் ஊடுருவியதுடன், பிளாக் பான்தெர்ஸ் இன் (Black Panthers) முன்னணி அங்கத்தவர்கள் உட்பட எதிர்கட்சி பிரமுகர்களின் படுகொலைகளை மேற்பார்வையிட்டது.

ஒவ்வொரு ஏகாதிபத்திய போரின் போதும், ஆளும் வர்க்கம் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் இனவாத உணர்வுகளை விதைக்க முயன்றுள்ளது. குறைந்தபட்சம் ஒரு மில்லியன் முஸ்லீம்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற "பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்", வித்தியாசமின்றி அவ்வாறு தான் உள்ளது, இதில் ஊடகங்களால் விட்டுக்கொடுப்பின்றி முன்னிலைப்படுத்தப்படும் ஓர் இனவாத விஷமப் பிரச்சார சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

போருக்கான உந்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் ஆழ்ந்த சமூக வேர்கள், புஷ் நிர்வாகம் மாறியமை அப்போக்கில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்திற்கும் இட்டுச் செல்லவில்லை என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது. உண்மையில் ஜனநாயக உரிமைகள் ஒபாமாவின் கீழ் தொடர்ந்து வழக்கிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன, இவரின் குறிப்பிட்ட பங்களிப்பு என்னவென்றால் அரசு-ஆதரவுடனான படுகொலையை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு மத்திய மூடிமறைப்பாக அமைப்புரீதியில் ஆக்கியமையாகும்.

சமகாலத்திய தாராளவாதத்தின், அத்துடன் பல்வேறு போலி-இடது அமைப்புகளின் அரசியல் திராணியற்றத்தன்மை, அவை, போர் மற்றும் இராணுவவாதத்தை முன்னிலைப்படுத்தி ஆழமாக அவற்றிற்கு உடந்தையாய் இருக்கின்றன என்ற உண்மையின் விளைவாக உள்ளது.

தொடர்ச்சியாக சரமாரியான ஊடக பிரச்சாரத்திற்கு இடையிலும், ட்ரம்ப் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்படும் கருத்துருக்களுக்கு அங்கே பரந்த அல்லது ஆழ்ந்து-வேரூன்றிய மக்கள் ஆதரவு கிடையாது. ஆனால் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உணர்வுகளின் ஒழுங்கமைந்த வெளிப்பாடானது, போர் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் மூல ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறையை நோக்கி திரும்பிய ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஒன்றுதிரட்டலைச் சார்ந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com