Monday, November 9, 2015

அமெரிக்க பாதுகாப்பு செயலர் சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகரிக்கிறார். By Nick Beams

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர், USS தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான ஒரு விஜயத்தை மற்றும் அதிலேயே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பைத் தென் சீனக் கடலின் பிரச்சினைக்குரிய கடல்எல்லை உரிமைகோரல்கள் மீது சீனாவிற்கு எதிராக மேற்கொண்டும் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தலை செய்ய பயன்படுத்தினார்.

அந்த விஜயம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) பாதுகாப்பு மந்திரிமார் கூட்டமைப்பின் ஒரு சந்திப்பிற்கு ஒரு நாள் பின்னர் நடந்தது. அந்த மாநாடு அப்பிராந்தியத்தில் "கடல்போக்குவரத்து சுதந்திரம்" மீது ஒரு கூட்டறிக்கை வெளியிடாமலேயே முறிந்து போனது, அவ்வாறான ஒரு கூட்டறிக்கையை அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அதன் இராணுவ அழுத்தத்திற்கு அரசியல் மூடிமறைப்பாக பெற முயன்றிருந்தது.



தியோடர் ரூஸ்வெல்ட் இல் அஷ்டன் கார்ட்டர் பேசுகிறார் (மூத்த மாஸ்டர் சார்ஜன்ட் அட்ரியன் காட்ஜின் அமெரிக்க விமானப்படை புகைப்படம்)

சீனா நிலச்சீரமைப்பு வேலைகளை செய்துவரும் பிரச்சினைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு சுமார் 150-200 மைல் தெற்கே தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் USS தியோடர் ரூஸ்வெட்டுக்கு கார்ட்டர் விஜயம் செய்தார். அதன் நடவடிக்கைகளுக்கு அப்பிராந்தியத்தின் நாடுகளது ஆதரவும் இருக்கிறது என்ற அமெரிக்காவின் கூற்றுகளுக்கு முட்டுக்கொடுப்பதற்காக, மலேசிய பாதுகாப்பு மந்திரி ஹிசாமுதீன் ஹூசைனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார்.

அக்கப்பலில் இருந்து கார்ட்டர் கூறிய கருத்துக்கள், சீனாவின் மீள்உரிமைகோரப்பட்ட தீவுகளில் ஒன்றைச் சுற்றி 12 கடல்மைல் தூரத்திற்குள் கடந்த வாரம் USS லாசென் போர்க்கப்பல் பயணித்திருந்ததை தொடர்ந்து, அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை அமெரிக்கா அதிகரித்து வருகிறது என்பதையும் மற்றும் அதற்கு ஆதரவாக அப்பிராந்திய நாடுகள் மீது அதிகரித்த அழுத்தத்தைப் பிரயோகித்து வருவதையும் தெளிவுபடுத்தியது.

அந்த விமானந்தாங்கி போர்க்கப்பலில் அவரது பிரசன்னம் "உலகின் இந்த பிராந்தியத்தில் தசாப்தகாலமாக அமெரிக்கா கொண்டிருக்கும் ஸ்திரமான செல்வாக்கிற்கு ஓர் அறிகுறியை அர்த்தப்படுத்துகிறது" என்றவர் தெரிவித்தார். அப்பிராந்தியத்தில் "மறுசமன்படுத்தலை"—இது தான் அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" உத்தியோகப்பூர்வ வார்த்தை—"தொடர்ந்து நடத்தவதே நோக்கம்" என்றவர் தெரிவித்தார். அதாவது, இரண்டாம் உலக போர் முடிந்ததும் தென் சீனக் கடல் உட்பட அப்பிராந்தியத்தில் அதன் இராணுவ மேலாதிக்கத்தைச் ஸ்தாபித்துக் கொண்ட அமெரிக்கா தேவைப்பட்டால் சீனாவுடனான இராணுவ மோதல் உட்பட என்ன விலைக்கொடுத்தாவது அதை பேணுவதற்கு முயலும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அது மேலெழுந்ததற்குப் பின்னரில் இருந்து அதன் அனைத்து இராணுவ நடவடிக்கைகளோடு சேர்ந்து, அமெரிக்கா ஏனைய நாடுகளின் கவலைகளுக்கு அது விடையிறுத்து வருகிறது என்ற அடிப்படையில் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்று வருகிறது. கார்ட்டரும் இதே காலத்திற்கு ஒவ்வாத கருத்தைப் பிடித்திருந்தார்.

“இங்கே நான் மற்றொரு நாட்டின் … இந்த விடயத்தில் மலேசியா … பாதுகாப்பு மந்திரியுடன் இருக்கிறேன் என்ற உண்மை … இப்பிராந்தியத்தில் அமெரிக்க பிரசன்னம் இருக்க வேண்டியதன் பெரும் தேவையைச் சுட்டிக்காட்டுகிறது,” என்றார்.

சீன நடவடிக்கைகள் மீது, அவர் எதை அதன் "அளவுகடந்த" கடல்எல்லை உரிமைகோரல்கள் என்று அழைத்தாரோ அதன் மீதும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இராணுமயமாக்கல் மீதும், அப்பிராந்திய நாடுகள் கவலைக் கொண்டிருந்தன என்பது தான் ஆசியான் கூட்டத்தின் மத்திய பிரச்சினையாக இருந்தது என்று கார்ட்டர் முறையிட்டார்.

“அப்பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் அமெரிக்காவிற்கு வந்து, நாங்கள் இங்கே சமாதானம் பேணும் வகையில் எங்களுக்கு நிறைய செய்யுங்கள் என்று கேட்கின்றன. ஆகவே இது [அக்கப்பலுக்கான அவரது விஜயம்] … அமெரிக்க எதிர்காலத்திற்கு மிகவும் விளைவுகளைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் … அமெரிக்க இராணுவ சக்தி வகிக்கும் முக்கிய பாத்திரத்திற்கு ஓர் அடையாளமும் அறிகுறியும் ஆகும்.”

இந்த கடைசி புள்ளி தான் அமெரிக்க கொள்கையின் நிஜமான நோக்கங்களை அடிக்கோடிடுகிறது. அவை சீன இராணுவ நடவடிக்கைக்கு எதிராக சமாதானம் பேணுவதை நோக்கி அல்ல, மாறாக பூமியில் மிக முக்கிய பொருளாதார பிராந்தியங்களில் ஒன்றின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக ஆகும்.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓர் இதழாளர் கேட்ட ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் ஒரு விளக்கமான கருத்துப்பரிமாற்றம் நடந்தது, அமெரிக்கா "மென்மையாக பேச வேண்டும், ஆனால் ஒரு பெரிய தடியைக் கொண்டிருக்க" வேண்டும் என்ற ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்டின் முழக்கத்தைத் தொடர்ந்து “பெரிய தடி” (The Big Stick) என்று பெயரிடப்பட்ட அந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை அந்த இதழாளர் அதன் புனைப்பெயரைக் கொண்டு குறிப்பிட்டார்.

ஆசியான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க நோக்கங்கள் "செயலுக்கு வரவில்லை" என்று கருத்துரைத்ததும்—இது அதன் "கப்பல்போக்குவரத்துக்கான சுதந்திரம்" மீது இறுதி கூட்டறிக்கையில் அமெரிக்கா நேரடி ஆதரவைப் பெற தவறியதைக் குறித்த ஒரு குறிப்பாகும்—அந்த இதழாளர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்: “இது மென்மையான இராஜாங்க அணுகுமுறைகளுக்குப் பின்னால் அமெரிக்க பலத்தைக் குறித்த ஒரு நினைவூட்டலா?”

சீனாவையும் உள்ளடக்கிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசுவது நல்லது என்பதால் அமெரிக்கா எப்போதுமே பாதுகாப்பு விவகாரங்களைக் குறித்த விவாதங்களை எவ்வாறு நடத்த முயன்றது என்பதைக் குறித்து கார்ட்டர் சம்பிரதாயமான கருத்துக்களோடு பதிலளிக்கத் தொடங்கினார் மற்றும் அமெரிக்கா வகித்த பாத்திரத்தின் காரணமாக அப்பிராந்தியம் ஸ்திரப்பாட்டை அனுபவித்தது என்றும் வாதிட்டார்.

“அந்த பாத்திரத்தை வகிக்க நிறைய பேர் ஒன்றுதிரண்டு எங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர். நாங்கள் அதை நிறைவேற்ற விரும்புகிறோம். இந்த [விமானந்தாங்கிய போர்க்கப்பல்] TR இன் சக்தி அதை பிரதிபலிக்கிறது,” என்றார், “உலகமே அதை சார்ந்திருக்கிறது ஏனென்றால் மக்கள்தொகையில் பாதி, பொருளாதாரத்தில் பாதி இங்கே தான் இருக்கிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அப்பிராந்தியத்தில் அமெரிக்கா "ஸ்திரப்பாட்டை" ஊக்குவித்தது என்ற வாதம் முற்றிலும் ஒரு புனைவாகும். ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசியதோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய 30 ஆண்டுகளில், அந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் அமெரிக்கா தூண்டிவிட்ட போர்கள் மற்றும் பாரிய படுகொலைகளால் சிதைந்து போயிருந்தது. 1950-53 கொரிய போர், வியட்நாம் போர் மற்றும் இந்தோனேஷியாவில் தளபதி சுஹர்டோவின் இராணுவ சர்வாதிகாரத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களுக்கு இட்டுச் சென்ற அமெரிக்கா-முடுக்கிவிட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

ஒப்பீட்டளவில் ஸ்திரப்பாடு, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் சீனத் தலைவர் மாவோ சே துங் இடையிலான 1971 பேச்சுவார்த்தைகள் மற்றும் அதையடுத்து பெய்ஜிங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை அங்கீகரித்ததற்குப் பின்னர் தான் வந்தது, இந்தவொரு உடன்பாட்டில் மாவோயிச ஆட்சி அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது.

நிக்சன்-மாவோ உடன்படிக்கை சீன ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சி நிகழ்வுபோக்குக்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது, அது சீனாவை உலகளாவிய நாடு கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவு-உழைப்பு தளமாக மாற்றுவதற்கும் மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக அதன் இடத்தை மேலுயர்த்தவும் இட்டுச் சென்றுள்ளது.

ஆனால் அதே பொருளாதார வளர்ச்சி முந்தைய உறவு சமநிலையின் அடித்தளத்தை அரித்துள்ளது. சீன வளர்ச்சி மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான அதன் முன்பினும் நெருக்கமான பொருளாதார ஒருங்கணைப்பு, அத்துடன் ஏனைய பிரதான சக்திகள் —மிகக் குறிப்பாக ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய போட்டியாளர்கள்— சீனாவை நோக்கி வர்த்தகரீதியில் நகர்ந்து வருவதை எதிர்கொண்ட நிலையில், ஒருசமயம் பொருளாதாரரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்க அந்தஸ்து கடுமையாக பலவீனப்பட்டுள்ளது.

அமெரிக்கா அங்கே இன்னமும் மேலாதிக்கம் அனுபவிக்கின்ற பகுதிகளில் அதிகாரம் செலுத்துவதன் மூலமாக —இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதன் மூலமாக— இந்த நிலைமையை எதிர்கொள்ள முனைந்துள்ளது. இது தான் 2011 இல் ஒபாமா நிர்வாகத்தால் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்ட "ஆசியாவை நோக்கிய முன்னிலை" அல்லது "சமன்படுத்தல்" என்பதன் அடியிலுள்ள உந்துசக்தியாக உள்ளது.

அந்த "முன்னிலை", தென் சீனக் கடலில் தசாப்தகாலமாக இருந்த கடல்எல்லை பிரச்சினைகளைத் தூண்டிவிட்டதன் மூலமாக சீனாவிற்கும் அதன் தென் கிழக்கு ஆசிய அண்டைநாடுகளுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கான ஓர் ஒருமித்த முயற்சியோடு சேர்ந்து, சீனப் பெருநிலத்தின் மீது தாக்குதல்களுக்கான விரிவான இராணுவ திட்டங்களின் வடிவை எடுத்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் "ஸ்திரப்பாட்டை" பேணுவதோ, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோ, “கப்பல்போக்குவரத்திற்கு சுதந்திரத்தை" உறுதிப்படுத்துவதோ, அதிகரித்துவரும் சீன பலத்தின் மீது ஏனைய நாடுகளின் கவலைகளைத் தணிப்பதோ அல்ல, அல்லது வாஷிங்டனிலிருந்து வரும் ஏனைய எதையும் நியாயப்படுத்துவதும் அல்ல. சீனாவை நடைமுறையில் ஓர் அரை-காலனித்துவ அந்தஸ்திற்குக் குறைப்பதன் மூலமாக இந்த முக்கிய பொருளாதார பிராந்தியத்தின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதே ஆகும்.

USS தியோடர் ரூஸ்வெல்ட்க்கு கார்ட்டர் பறந்துசென்ற விஜயம், இராணுவ வழிவகைகளின் "பெரிய தடி" உட்பட இந்த நோக்கத்தைப் பின்பற்றுவதில் அமெரிக்கா எங்கேயும் நிற்கப் போவதில்லை என்பதற்கு ஓர் அறிகுறியாகும், இது ஒரு புதிய உலக போருக்கு அச்சுறுத்தலை உயர்த்துகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com