Friday, January 9, 2015

இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு!

புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன 51.28% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதால், இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன இன்று 09.01.2015 இல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சற்று முன் ஊடகவியலாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமான முறையில் குறிப்பிட்டார்.

தேர்தலை சுமுகமான முறையில், வன்முறைகள் ஏதும் இடம்பெறாத வகையில் நடாத்துவதற்காக ஒத்துழைத்த தனது திணைக்கள ஊழியர்களுக்கு பலவாறு நன்றி தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் சிறப்பாக நடைபெற ஆவன செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளர் உரையாற்றும்போது,

“பொதுமக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணையாளராக மட்டுமன்றி பொதுமக்கள் அனைவர் சார்பாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். என்றதுடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிரிசேனவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யபட்டுள்ள மைத்திரிபால சிரிசேன உரையாற்றும்போது,

“இத்தேர்தல் நடைபெறுவதற்கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட படையினருக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தலில் வெற்றிபெற்றாலும் யாருக்கும் அநீதியிழைக்காது, அகிம்சாவழியில் நடந்துகொள்ளுமாறும், ஏனையோரைப் பாதிக்காத வகையில் வெற்றியைக் கொண்டாடலாம்.

தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு பிரச்சினைகள் ஏதுமற்ற முறையில் சுமுகமானதொரு சூழலை ஏற்படுத்தித் தந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அனைவரும் நிதானமாகவும், மைத்திரியுடனும் வாழக் கடமைப்பட்டுள்ளார்கள்“ எனவும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com