Saturday, January 10, 2015

மைத்திரிபாலவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தவர்கள் தமிழ் மக்களே! - அநுரகுமார திசாநாயக்க

பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின்றோம் என தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது. வெற்றியை தீர்மானித்த சக்தி அவர்களெனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் கட்சியின் தலைவரிடம் தேர்தல் வெற்றி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

மைத்திரிபால சிறிசேனவின் பொது எதிரணியின் நேரடி பங்குதாரராக நாம் இருக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியினை கவிழ்க்க எமது முழுமையான பங்கினையும் வழங்கினோம். இதை பொது எதிரணி பல மேடைகளில் சொல்லியுள்ளது.

இப்போது நாம் பொது எதிரணியின் வெற்றியில் பங்குதாரராக உரிமை கொண்டாடுவதை விடவும் நல்லாட்சிக்கான அழுத்தம் கொடுக்கவே தயாராகியுள்ளோம். தேசிய அரசில் பங்கு கொள்வது தொடர்பில் நாம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

அதே போல் தற்போது நாட்டில் ஜனநாயகத்திற்கான பாதை திறந்துள்ளது. மக்கள் மாற்றத்தினை விரும்பி ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இது இலங்கையின் மாற்றத்திற்கான வரலாற்றின் மைல்கல்.

மேலும் இம்முறை தேர்தலில் பொது எதிரணியின் வெற்றியினை தீர்மானித்ததில் தமிழ் பேசும் மக்களின் பங்கு அதிகமானது. வடக்கு கிழக்கின் வாக்குகளே பொது எதிரணியின் வெற்றியில் முக்கிய பங்கினை எடுத்துள்ளது.

அதே போல் சிங்கள மக்கள் இரு சாராருக்கும் சம பங்கு வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதேபோல் 2005 ஆம் ஆண்டில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தடுக்கப்பட்டமையும் 2010 ஆம் ஆண்டில் 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றி பெற்றமையும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை தற்பெருமை கொண்ட ஆட்சியாக மாற்றி விட்டது.

இம்முறை வெற்றி இரு சாராருக்கும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் மக்கள்தான் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக விளங்குவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com