Monday, December 29, 2014

நோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி எடுத்த தென் கொரிய மருத்துவமனை ஊழியர்கள்

‘கங்னம் ஸ்டைல்’ என்ற பாடல் மூலம் உலகின் கவனத்தைப் பெற்ற தென் கொரியாவின் ‘கங்னம்’ மாவட்டம் தற்போது இன்னொரு சம்பவத்தினாலும் பிரபலமாகியுள்ளது. அம்மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் அருகே நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம்அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் புகைப்படங்களைப் பகிரும் அப்ளிகேஷனான இன்ஸ்டாகிராமில், அறுவை சிகிச்சை அரங்கில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது அருகே மெழுகுவர்த்தி ஊதி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் மருத்துவமனை ஊழியர்களின் புகைப்படம் வெளியானது. படுக்கையில் உணர்வற்ற நிலையில் நோயாளி கிடப்பதும் அந்த புகைப்படத்தில் தெளிவாகத் தெரிந்தது.

சம்பவம் நடந்த ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ மையத்தில் மருத்துவ விதிகள் எதுவும் மீறப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருவதாக சியோலின் பொது சுகாதார துறை செய்தித் தொடர்பாளர் இன்று கங்னம் மாவட்டத்தில் தெரிவித்தார். மேலும் இவர்களின் நடத்தை மருத்துவர்கள் மீதான நன்மதிப்பை கெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிகிச்சை மையம் தன்னுடைய கவனக்குறைவான செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com