Sunday, October 5, 2014

ஐக்கிய நாடுகள் சபையில் வஞ்சகமும், ஏமாற்றுத்தனமும். Barry Grey

இன்னுமொரு சட்டவிரோத யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, ஜனாதிபதி பராக் ஒபாமா, உலகெங்கிலுமான அமெரிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் பின்னால் எல்லா நாடுகளும் அணிவகுக்க வேண்டுமென கோரிக்கைவிட, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் வந்தார்.

அந்த உரை வெற்றுத்தனமான ஓய்ந்துபோன முழக்கங்களுடன் குறைகூறல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளோடு இணைந்த பகட்டுப்பேச்சின் ஒரு தொகுப்பாக இருந்தது. அது இழுத்தடித்த, சம்பிரதாயமான முறையில், ஒரு அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பாக, நீண்ட மௌன இடைவெளிகள் அளிக்கப்பட்டு மற்றும் ஒரு பொருத்தமான வாதத்தை முன்வைக்க எந்தவொரு முயற்சியும் இல்லாமல், ஒரு உதட்டசைவாக வழங்கப்பட்டது.

ஆனால் அனைத்திற்கும் மேலாக அந்த உரை எவ்வகையில் வித்தியாசமாக இருந்ததென்றால், அதன் வலியுறுத்தல்களுக்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையே முற்றிலும் தொடர்பற்றதாக இருந்தது. ஒபாமாவின் பொய்கள் மிகவும் மோசமானதாகவும் ஆணவத்துடன் இருந்து, அவை ஒரு மூளைக்குழப்பத்திற்குரிய குணாம்சத்தை எடுத்திருந்தன. அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒரேயொரு உண்மையைக் கூட ஒப்புக் கொள்ள முடியாத புள்ளியை உலக அரசியல் நிலைமை எட்டியிருக்கின்ற போது, அதுவே ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு நெருக்கடியின் ஓர் அசாதாரண மட்டத்தின் வெளிப்பாக இருக்கிறது.

“ஒரு நாட்டின் எல்லைகள் மற்றொன்றால் மாற்றி வரையப்படக்கூடிய ஒரு உலகில்... வலிமைக்கே உரிமை இருக்கிறது என்ற ஒரு உலக கண்ணோட்டத்தை" ஒபாமா கண்டித்ததில், எல்லா பொய்களும், பாசாங்குத்தனமும் ஒன்றிணைத்து கூறப்பட்டன. அவர் அறிவித்தார், “அமெரிக்கா வித்தியாசமான ஒன்றுக்காக நிற்கிறது. உரிமையே வலிமையை தருவதாக நாங்கள் நம்புகிறோம்—அதாவது பெரிய நாடுகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தக் கூடாது; அதாவது மக்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தேர்ந்தெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்." [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]

இந்த கருத்து, உலகின் மிகவும் வன்முறைமிகுந்த மற்றும் அச்சுறுத்தும் நாட்டின் பிரதிநிதியிடமிருந்து வந்ததாகும், அந்நாடு தான், எங்கெல்லாம் அதன் பொருளாதார, அரசியல் அல்லது புவிமூலோபாய நலன்கள் ஆபத்தில் இருக்கிறதோ அங்கே இராணுவரீதியில் தலையிட அதற்கு கட்டுப்பாடில்லாத உரிமை இருப்பதாக வலியுறுத்தி, நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறி, முன்கூட்டி போர்தொடுப்பதை அதன் வெளிநாட்டு கொள்கையின் அஸ்திவாரமாக கொண்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அது எழுந்ததில் இருந்து, அமெரிக்கா அதன்விருப்பம் போல சிறிய மற்றும் பெரிய நாடுகளின் மீது அதன் விருப்பத்தைத் திணிக்க மற்றும் அச்சுறுத்த தனக்குத்தானே உரிமை எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த கால் நூற்றாண்டு, குறிப்பாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒரு முடிவில்லாத மற்றும் தீவிரமான தொடர் யுத்தங்களை, படையெடுப்புகளை, இரகசிய நடவடிக்கைகளை மற்றும் குண்டுவீச்சுக்களைக் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இருந்த அதன் இராணுவ நடவடிக்கைகளில், நூறாயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பாகிறது.

ஒருவர், ஏனையவைகளோடு சேர்த்து, 1989 பனாமா படையெடுப்பு, 1991இல் ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர், 1992-93இல் சோமாலியாவில் தலையீடு, 1994இல் ஹைட்டி மீது படையெடுப்பு, 1998இல் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சு, 1999இல் சேர்பியாவுக்கு எதிரான போர், 2001இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003இல் ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம். ஒபாமாவின் கீழ், அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான ஒரு போருக்குத் தலைமை வகித்துள்ளது, சிரியாவில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியும் நோக்கில் ஓர் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட்டது, மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன் மற்றும் சோமாலியாவில் ஆளற்ற விமான டிரோன் தாக்குதல்களை நடத்தியது.

உலகைக் கட்டுப்படுத்தும் அதன் உந்துதலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை ஒரு புதிய பேரழிவுகரமான உலக யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. ஒபாமாவின் முடிவுரை இந்த வலியுறுத்தலுடன் தொடங்கியது: “இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது இருந்த உலக போர் நிழல் நீங்கிவிட்டது, பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறைக்கப்பட்டுள்ளது." வாஷிங்டனும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு ஆயுதமேந்திய முகாமிற்குள் திருப்ப தொடங்கியுள்ள நிலையில் மற்றும், மேற்கு மற்றும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் விளிம்புக்கு உலகைக் கொண்டு வர உக்ரேனின் உள்நாட்டு யுத்தத்தை—இந்த நெருக்கடி அவர்களின் சொந்த உருவாக்கமாகும்—பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் இது கூறப்படுகிறது.

அடுத்த வெறும் ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர், ஒபாமா மாஸ்கோவிற்கு எதிராக தெளிவாக இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை அறிவித்தார். “ஒருங்கிணைந்த தற்காப்புக்கு எங்களின் பொறுப்புறுதியை நாங்கள் உறுதியாக கடைப்பிடிப்பதுடன் மற்றும் இதற்காக எங்களின் நேட்டோ கூட்டாளிகளையும் நாங்கள் வலியுறுத்துவோம்," என்றார்.

ஆசியாவில், வாஷிங்டன் ஓர் ஆக்ரோஷமான இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலை சீனாவிற்கு எதிராக பின்பற்றி வருகிறது. மேலும் சிரியாவில் புதிய யுத்தம் ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் சுற்றி வளைக்க அச்சுறுத்துவதுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் சிரிய ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு (ஈரான் மற்றும் ரஷ்யா) இடையே ஒரு மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது. ஒபாமாவின் வாதத்திற்கு நேரடியாக முரண்பட்ட விதத்தில், பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு முன்னொருபோதும் இல்லாதளவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது.

அவரது உரையின் பிரதான பகுதிக்கு வந்தால், வெளிவேடத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக என்று, ஒரு முடிவில்லா "தலைமுறை" யுத்தத்தைத் தொடங்கியுள்ள ஒபாமா, “ஒரு பிரச்சினை மாற்றி ஒரு பிரச்சினையில், வெவ்வேறு நூற்றாண்டுக்காக எழுதப்பட்ட விதிகள் பற்றிய ஒரு புத்தகத்தை நாம் சார்ந்திருக்க முடியாது," என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுத்தத்தை வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துவதை மற்றும் நாடுகள் மற்ற நாடுகளின் உள்நாட்டு போர்களில் தலையிடுவதைத் தடுக்கும், ஐ.நா சாசனம் இனியும் பொருந்தாது என்பதையே அது குறிப்பிடுகிறது.

அடுத்து அவர் ஈராக் மற்றும் சிரியாவில் நிலவும் பேரழிவுகளை விபரிக்க சென்றார். முஸ்லீம் உலகின் "தீவிரவாத வன்முறை புற்றுநோய்" என்று எதை அவர் குறிப்பிட்டாரோ அதையே இந்த பேரழிவுக்கு காரணமாக சாட்டிவிட்டார். ஆனால் அப்பிராந்தியத்தின் பேரழிவுக்கான பொறுப்பு பெரிதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதே தங்கியிருக்கிறது என்பது அதை அவதானிக்கும் ஒவ்வொருவருக்குமே நன்றாக தெரியும்.

ஒரேமூச்சில் ஒபாமா அறிவித்தார், “மத்திய கிழக்கு முழுவதிலும் சுன்னி மற்றும் ஷியாவிற்கு இடையிலான பினாமி யுத்தங்கள் மற்றும் கொடூர நடவடிக்கைகளாலேயே அந்த பேரழிவு உருவாக்கப்பட்டது என்பதில் உடன்படுவதற்கு இதுவே நேரமாகும்." அதேவேளையில் அடுத்ததாக அவர் பிரஸ்தாபித்தார், “ISIL பயங்கரவாதிகளுக்கும் [ஷியா சார்ந்த] மற்றும் அசாத் ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிர்பலமாக சிரிய எதிர்த்தரப்பிற்கு [அதிகளவில் சுன்னி முஸ்லீம்களை கொண்டது] அமெரிக்கா, நம்முடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு ஆயுதமேந்த உதவி வருகிறது மற்றும் பயிற்சி அளித்து வருகிறது."

ஒபாமாவின் 45 நிமிட உரைக்குள் நிறைந்திருந்த அத்தனை பிரமாண்ட பொய்களையும் தொகுத்தளிப்பது இங்கே சாத்தியமல்ல. ஆனால் உக்ரேனிய நெருக்கடி குறித்து அவர் கூறியதே அவரது கருத்துகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை நிரூபணம் செய்கிறது.

அவர் கூறினார், “இதுதான் அங்கு நடந்தது. உக்ரேனிய மக்கள் பரந்த போராட்டங்களில் ஒன்றுதிரண்டு சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்ததும், அவர்களின் ஊழல்மிகுந்த ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடிவிட்டார். கியேவ் அரசாங்க விருப்பத்திற்கு எதிராக, கிரிமியா இணைத்துக் கொள்ளப்பட்டது. ரஷ்யா கிழக்கு உக்ரேனுக்குள் ஆயுதங்களை அனுப்பியது, அது வன்முறைமிக்க பிரிவினைவாதிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ள ஒரு மோதலையும் தூண்டி வருகிறது."

நிச்சயமாக, அந்த "பரந்த போராட்டங்களுக்கு" அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஒத்து ஊதப்பட்டன என்பதுடன், நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரேனிய யூதர்களின் பாரிய படுகொலைக்கு ஒத்துழைத்த உக்ரேனியர்களை பெருமைப்படுத்தும் ஆயுதமேந்திய பாசிசவாதிகளால் அந்த போராட்டங்கள் தலைமை தாங்கப்பட்டன.

ரஷ்யாவை ஆதரித்த அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தூக்கியெறியப்பட்டார் என்பதுடன், அவருக்கு மாற்றாக அங்கே நவ-நாஜிக்கள் மற்றும் அதிதீவிர-தேசியவாதிகளைக் கொண்ட, சட்டவிரோத அரசாங்கம் நிறுவப்பட்டது. அது அந்நாட்டின் கிழக்கு பகுதியில் குடியிருந்த பெரும்பான்மையினரை புறக்கணித்தது.

அதைத்தொடர்ந்து கிழக்கு உக்ரேனில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான ஆயிரக் கணக்கானவர்கள், அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய இராணுவம் மற்றும் பாசிச-மேலாதிக்கம் கொண்ட போராளிகள் குழுக்களின் கரங்களால் கொல்லப்பட்டார்கள். அவை ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை முற்றுகை இட்டன.

கடந்த மாதம் தான், மத்திய கிழக்கில் இருக்கும் வாஷிங்டனின் கூட்டாளி, இஸ்ரேல், காஸாவில் நிராயுதபாணியான பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி, 2,200க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்தது, அதில் பரந்த பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர்.

இன்னும் அதிகமாக திகிலூட்டுவதைக் கூறுவதே கடினமாக இருக்கிறது, அதாவது ஒபாமாவின் வலியுறுத்தல்களுக்கும் மற்றும் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது அவருக்கே முற்றிலும் தெரியும், அப்படியில்லையென்றால் அவர் யதார்த்தத்திலிருந்து மிகவும் துண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றாகும். இந்த நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புகிறார். அமெரிக்க ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை மற்றொரு உலக யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்கின்ற அதேவேளையில், அதன் கட்டுப்பாட்டையும் இழந்திருப்பதற்கு இந்த உரையை ஒரு மைல்கல்லாக எதிர்கால வரலாற்றாளர்கள் மிக சரியாக திரும்பி பார்ப்பார்கள்.

ஒபாமாவின் முழுப்பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com